நிதிச்சுமை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுவாக எல்லா நாடுகளின் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ அனைத்து நாடுகளுக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்வது இல்லை. ஆனால் முக்கியமான பயணங்களை தவிர்ப்பதுமில்லை. தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தை பலமிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அனுபவம் உள்ள மற்றும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விபரம் அறிந்தவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிப்பார்கள். கண்டிப்பாக எல்லா நாடுகளுக்கும் பயணம் கண்டிப்பாக மேற்கொள்வேன் என்று பிரதமர் தீர்மானித்தால் தன் நாட்டின் கருவுலத்தைச் சுரண்டித்தான் ஆக வேண்டும். மேலும் அவ்வாறான பயணங்கள் ஊரைச் சுற்றி பார்ப்பது போல் ஆகிவிடும். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பவர் தேவையற்றவராகி விடுவார். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசு நேர் எதிர்மறைக் காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது அனைத்து துறைகளிலும் மோடி என்ற ஓரே பெயர் தான் ஒலிக்க வேண்டும் என்ற மோடியின் சிந்தனை தவறு என்பதுடன், தன்னை மட்டும் முன்னிறுத்துவது இந்தியா என்ற பன்முகத்தன்மையுடைய சமுதாயம் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்ற தெளிவை அவர் பெற வெகுகாலம் எடுக்கும். காரணம் அவரிடம் நல்லது கெட்டதைப் பற்றி விவாதிப்பதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரியவில்லை. அவர் சொல்லுவதற்கு ’ஆம்’ என்று மற்றவர்கள் பதில் அளிப்பதற்கு அவரை சுற்றி இருக்க வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று தோன்றுகிறது.
இந்தியாவின் மக்கள் தொகை 1.27 பில்லியன். சிங்கப்பூரில் மக்கள் தொகை வெறும் 5.4 மில்லியன்தான். ஆனால் இரு நாடுகளில் வெளியுறவுத்துறையின் அளவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சீனாவின் வெளியுறவுத்துறையின் தன்மை இந்தியாவை விட எட்டு மடங்கு பெரியது. பிரதமர் மோடி தன்னுடைய முதல் ஆண்டில் வெளியுறவுத்துறையின் விரிவாக்கத்தைப் பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். திட்ட கமிஷனை கலைத்தவர். வெளியுறவுத்துறைக்கு புதிய சிந்தனை களஞ்சியத்தை உருவாக்கி இருக்க வேண்டும். இந்திய வெளியுறவுத்துறையில் Lateral Entry-யையும் பரீசீலிக்க கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஜஸ்வந்த் சிங் அல்லது அருண் சோரி போன்ற ஒருவருக்கு வெளியுறவுத்துறையில் வாய்ப்பை கொடுத்திருந்தால் அந்த துறை தன்னுடைய பெருமைக்கு கலங்கம் ஏற்படுத்தவிடும் என்பதால், தன்னுடைய எதிர்பாளர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கி வெளியுறவுத்துறையை டம்மியாக வைத்து அதிகாரிகளால் அந்த துறை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய பயணங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சரை பிரதமர் மோடி அழைத்து செல்லாததை கவனத்தில் கொள்ள வேண்டும். தன் புகழுக்கும், பெருமைக்கு சிறு குறைபாடு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமான இருக்கும் பிரதமர் ஒரு நாள் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என்று எளிதாக சொல்ல ஒரு காலம் தோன்றலாம். உதாரணமாக ஒரு துறையின் ஒப்பந்தத்தை பிரதமரின் முன்னிலையில் அந்த துறை சம்மபந்தப்பட்ட இரு நாட்டின் அமைச்சர்கள் மாற்றி கொள்வார்கள். இதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்படும் ஜனநாயக மரபு. சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் பின்னால் இருந்து பணியாற்றுவார்கள். மோடியின் ஆட்சியில் அவரைத் தவிர எந்த அமைச்சர்களின் பெயரோ, திறமையோ வெளியே தெரிவதில்லை.
பிரான்ஸ் நாட்டில் ”ரபேல்” பற்றிய உடன்பாட்டின் போது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நிச்சயமாக பிரதமரின் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் பரிதாபம் பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்று அவருடைய மாநிலமான கோவாவில் ஒரு மீன் கடை திறப்புவிழாவில் மீனுடன் புகைப்படத்திற்கு தன்னை வெளிப்படுத்தும் பரிதாபமான நிலையில் இன்றைய இந்திய ஜனநாயகம் இருக்கிறது.
இந்தியப் பெருங்கடலை “இந்தியாவின் கடல்“ என்று அழைக்க நினைக்கும் இந்த அரசு அதற்கேற்ப கொள்கைகளை வகுத்திருக்கிறதா என்றால் சந்தேகம்  ஏற்படுகிறது. காரணம் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய வாக்குறுதியின்படி எதையும் சாதித்து விடவில்லை என்றே தோன்றுகிறது. காரணம் மீனவரின் பிரச்சனையில் அன்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த பிரதமர் வேட்பாளர் இன்று மௌனியாக இருக்கிறார். இந்தியக்கடல் எல்லையை தாண்டாதீர்கள் என்று தமிழக மீனவர்களுக்கு கட்டளைப் பிறப்பித்திருக்கிறார். இது நியாயமான உத்தரவுதான். இதைத் தானே டாக்டர் மன்மோகன் சிங் அரசும் சொன்னது. அன்று இது பிரதமர் வேட்பாளர் மோடி அவர்களுக்கு தவறாக தெரிந்தது. இன்று பிரதமர் என்ற முறையில் சரி என்று தெரிவது நகைப்புக்கு உரியது. பிரதமரின் இலங்கைப் பயணத்தின் வழியாக இதை அரசின் இந்திய கொள்கையில் சில மாற்றங்கள் பிரதமரின் எச்சரிக்கையை பிரதிபலித்தாலும் வேதனைப்படும் இலங்கைத் தமிழர்களின் நிலையில் பெரிய மாற்றம் இல்லை. மொரிஷியஸ் வரை சென்ற பிரதமர் மாலத்தீவிற்கு ஏன் செல்லவில்லை? மாலத்தீவில் உள்நாட்டு பிரச்சனை என்றால் இந்தியா ஒளிந்து கொள்ள வேண்டுமா? இதுதான் இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் கொள்கையா? சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் இவ்வாறாக கேள்வி எழுப்புகிறார்கள். மாலத்தீவில் நடைபெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி சம்பவங்கள் இந்தியாவிற்கு கவலை தருவது என்பது எச்சரிக்கை அல்ல. குறைந்த பட்சம் இவ்வாறான சம்பவங்களை இந்தியாவால் சகித்து கொள்ள முடியாது என்றாவது பிரதமர் மோடியின் அரசு மாலத்தீவிற்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும். அப்படி கொடுக்க தகுதியில்லாத மோடி அரசு நேருவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விமர்சிக்க நூல் அளவு கூட தகுதி இல்லை. பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் சர்வதேச அரசியலில் கணிக்க தவறிய காலம் இந்தியா போராட்டத்தில் இருந்த காலம். இன்று இந்தியாவின் நிலை அப்படி இல்லை. இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க நமக்கு இருக்கும் உரிமையை விட யாருக்கு அதிகம் இருக்க போகிறது. மொரிஷியஸ் நாடுவரை சென்ற மோடி தென் ஆப்பிரிக்கா வரை சென்றிருக்க வேண்டும்.
 
பிரதமர் மோடியின் சிந்தனையில் தான் பிரச்சனை. சீனாவிற்கு செல்லும்போது அவர் நினைத்திருக்கலாம் தனது தனிப்பட்ட சீன நட்பினை சீனத்தலைவர்கள் இந்திய-சீனக் கொள்கையில் பிரதிபலிப்பார்கள் என்று நினைத்திருந்தால் அது மிகவும் தவறானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் பொருளாதார சீர்திருத்தவாதி டெங் ஷியாபோங் கூறினார் நாட்டின் சக்திமறைக்கப்பட வேண்டும். இந்த மேற்கோளை கருத்தாய் பின்பற்றுவார்கள் சீனர்கள் என்பது நமக்கு தெரியும். கடந்த முறை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது இமாலயத்தில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி இருந்தது. இந்த சம்பவம் சீனாவை சீண்டி பார்க்கும் கொள்கைகளில்  ஒன்று. இதற்கு இந்தியா எப்படி பதில் அளிக்கிறது என்று வேடிக்கை பார்க்கும் சோதனை. அதில் இருந்தாவது பாடம் கற்றிருந்தால் பிரதமர் மோடி அவர்கள் சீனாவிற்கு பதிலாக முதலில் ரஷ்யா சென்றிருப்பார். ரஷ்யா சென்று முடிந்த அளவு ஹைட்ரோ கார்பன் எரிவாயு சம்பந்தப்பட்டவற்றை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தை பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவுடன் எப்போதும் ரஷ்யா என்ற தத்துவத்துடன் சீனாவிற்கு பிரதமர் மோடி சென்றிருக்க வேண்டும். அப்படி அமைந்திருந்தால் சீனாவின் இந்திய ராஜதந்திர அணுகுமுறையில் சற்று சிந்தனை மாறுபட்டிருக்கும். ஆசிய கண்டத்தில் இந்தியாவுடன் ரஷ்யா என்ற எண்ணம் சீனாவிற்கு ஒரு தொடர் பதட்டம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ரஷ்யாவை எளிதாக எடுப்பது ஒரு நாள் ரஷ்யா பாகிஸ்தானுடன் சமரசம் செய்யவும் வாய்பாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் வேண்டா. அதுபோல ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள மங்கோலியாவிற்கு 1 பில்லியன் டாலர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்சனை என்றால் மங்கோலியா நடுவராக வந்து சமாதானம் செய்ய போகிறதா? இந்திய-சீன உறவில் மங்கோலியாவின் முக்கியத்துவம் என்ன? தேவைப்பட்டால் அந்த நாட்டிற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்திருந்தால் போதுமானது. பின்பு ஒரு முறை மங்கோலியாவிற்கு பிரதமர் மோடி அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தால் சீனாவிற்கு சிறு அழுத்தம் கொடுப்பது போல் அமைந்திருக்கும்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சிறப்பாக வரவேற்றது நிச்சயமாக நல்ல அம்சங்கள்தான். குறிப்பாக தெய்வையானி கோபாகிரேட் தொடர்புடைய இந்திய-அமெரிக்காவிற்கு இடையிலான கசப்பான சம்பவங்கள் பற்றிய சிந்தனைகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது இவைகள் நிச்சயமாக திருப்புமுனைகள்தான். பாரட்டப்பட வேண்டியதுதான். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் இதைத்தவிர இந்திய-அமெரிக்க உறவில் நாம் அடைந்த பயன் என்ன? இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள அணுஉலை விபத்து இழப்பு பிரச்சனை இன்னும் முடிவுறாத சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்திய நம்பகத்தன்மை கேள்விக்குறிதான் தொடரும். இது ஆசிய-பசிபிக் பிராயந்தியத்தில் எதிரொளிக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அணு ஒப்பந்தமானது வாஜ்பாய் மற்றும் டாக்டர். மன்மோகன்சிங் போன்றோரின் சத்தமில்லாத சாதனைகளை பயன்படுத்த தவறுவது மோடி அரசின் பலவீனமே. காரணம் வெளியுறவு, உள்துறை மற்றம் பாதுகாப்புத்துறை என எந்த துறையும் தனித்து இயங்க முடியாத நிலை. அதே போல இந்திய-அமெரிக்க உறவு என்பது ரஷ்யாவை உள்படுத்தி தானே ஒழிய ரஷ்யாவை விலக்கி அல்ல. கடந்த முறை ரஷ்ய அதிபர் Vladimir Putin இந்தியா வந்தது சிறப்பாக அமையவில்லை. பல உடன்படிக்கைகள் கையெழுத்தாகி இருக்கலாம். ஆனால் இந்திய ரஷ்ய உறவு என்பது 1955 முதல் நேரு-குருசேவ் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருவது. அதே சமயம் ரஷ்ய அதிபர் இந்தியா வந்த போது அவருடன் க்ரைமியா அதிபரையும் அவருடன் வரவேற்றது தவறான முன் உதாரணத்தை இந்தியா ஒத்துக் கொண்டது போல் உள்ளது. காரணம் உக்ரைன் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உலக ஒழுங்ககை நாடுகளை புரட்டி எடுக்கும்போது அது சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒருவரின் வருகையை ரஷ்ய அதிபருடன் கண்டிப்பாக அனுமதித்து இருக்க கூடாது. ரஷ்ய அதிபரிடம் அதைப்பற்றி தெரிவித்து தங்களுடன் க்ரைமியா அதிபரையும் வரவேற்பதில் எங்களுக்கு தர்மசங்கடம் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறிய இந்திய வெளியுறவுத்துறையின் தவறுகளை எல்லோரும் எப்போதும் சகித்து கொள்ள மாட்டார்கள்.
இன்னொரு முக்கியமாக விஷயம் பிரதமர் மோடி தன் வெளிநாட்டு பயணங்களின் போது ”வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்திப்பது – அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான சந்திப்புகள் கொள்கை வடிவில் நல்லதுதான். ஆனால் ஆசிய கண்டத்தில் நிச்சயமாக பின்விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வரும்போது இந்தியாவில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திப்போம் என்றால் இதுவும் புதிய முன் உதாரணம் தான். இவைகள் பெரிய பிரச்சனைகளாக உருமாறும் முன் தவிர்க்கப்பட்டால் நல்லது. பிரதமர் மோடி அவர்கள் செயற்கையாக தன் மீது மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கை என்பது தன் முக்கியத்துவத்தை தானே குறைத்து கொள்ள இருக்கிறார் என்று தோன்றுகிறது. எல்லாரும் எப்போதும் பிரதமர் மோடியுடன் அல்லது பிரதமர் மோடி எப்போதும் மற்றவர்களுடன் Selfie எடுத்து கொள்ள முடியாது.
எனவே பிரதமர் மோடி அவர்கள் வெளியுறவு சம்பந்தப்பட்ட விமர்சனங்களை எரிச்சலுடன் எடுத்து கொள்ளாமல் பிரதமர் வேட்பாளர் என்ற முறையில் ஒரு பேச்சாளர் போல அனைத்தும் தான் பிரதமரானால் சாத்தியம் என்ற தேவையற்ற வாக்குறுதிக்கு கிடைத்து கொண்டிருக்கும் பரிசுதான் என இந்த விமர்சனத்தை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் உள்நாட்டு அரசியலை வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உரையாடுவது பெரிய அபத்தம். பாராளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட விவாதத்தில் வெளிநாடு செல்வது அல்லது முக்கிய உள்நாட்டு பிரச்சனை தொடா்பாக மௌனியாக இருப்பது உங்கள் கலக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கையின் சாதனைகள் நிச்சயமாக பாராட்டப்படலாம். ஆனால் ஒரு பிரதமர் மாதந்தோறும் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களை எப்படி சாதனையென்று கொண்டாட முடியும். எனவே பிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளியுறவில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இதன் வழியாக கற்றுக் கொள்ளும் பாடம் மீதி இருக்கும் நான்கு ஆண்டுகளை சிறப்பாக வழிநடத்த பயன்படும்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *