தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017
img_9021aதமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகத்தின் பல பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெருமை சேர்த்து வந்தது.
தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதி மன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 11.07.2011-இல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளைச் சேர்த்து ஓர் அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த மே 7, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படையில் மத்திய அரசின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இந்தப் பின்னனியில் கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலைiயில் மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஜனவரி 8, 2016இல் வெளியிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் பட்டியலிலிருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலிலிருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மத்திய பா.ஜ.க அரசு இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு, அமைச்சரவையின் ஒப்புதலையோ, விலங்குகள் நல வாரியத்தையோ கலந்து ஆலோசிச்கவில்லை. இது குறித்து தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி தெரிவித்த எதிர்ப்பையும் மீறி தமிழக பா.ஜ.க.வினரை தற்காலிகமாக திருப்தி படுத்துவதற்காக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிக்கையை வெளியிட்டார். இந்த அறிவிக்கையை வைத்துக் கொண்டு தமிழக பா.ஜ.க.வினர் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் வெற்றிச் சுவரொட்டிகளை ஒட்டி ஆரவாரம் செய்தனர். விரைவில் தமிழர்கள் ஜல்லிக்கட்டை நடத்தி ‘மோடிப் பொங்கல்’; கொண்டாடுவார்கள் என்று குதுகலமாக அறிக்கை வெளியிட்டு மகிழ்ந்தனர், ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்க முடியவில்லை.
இச்சூழலில் இந்த அறிவிக்கையை எதிர்த்து மத்திய அரசைச் சார்ந்த விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் தொடுத்த வழக்கில் மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிக்கையை 11.02.2016-இல் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. உச்சமன்றத்தின் ஆணையை மத்திய அரசின் நிர்வாக ரீதியான அறிவிக்கையின் மூலம் ரத்து செய்துவிட முடியுமா? என்கிற அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே, மத்திய பா.ஜ.க அரசு இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது. இதன் மூலம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை வரும் ஆண்டிலும் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய துரோகத்தை மத்திய அரசின் துணையோடு தமிழக பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். இச்செயலை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 11.07.2011-இல் வெளியிட்ட அறிவிக்கைதான் காரணம் என்று மத்திய பா.ஜ.க அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் 2011ஆம் ஆண்டு அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். ஆனால் மே 7, 2014 அன்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜல்லிகட்டு நடத்த வெறும் அறிவிக்கை வெளியிடாமல் மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால், தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகப் பெரிய வாய்பாக அமைந்திருக்கும். ஆனால் மத்திய பா.ஜக. அரசை பின்னாலே இருந்து இயக்குகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி பசு வதைக்கு எதிராக குரல் கொடுத்து போராடி வருகிறதோ, அதேபோல ஜல்லிகட்டு விளையாட்டு மூலம் காளை மாடுகள் வதை செய்யபடுவதாக கருதி எதிர்ப்பதால்தான் ஜல்லிகட்டு விளையாட்டை நடத்துவதில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே வருகிற ஆண்டிலும்; ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு மத்திய பா.ஜ.க அரசும், தமிழக பா.ஜ.க.வும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வருகிற தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதை கண்டிக்கிற வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிரப்பிக்க உரிய நடவடிக்கைளை எடுக்க கூறியும் வருகிற 3.1.2017 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அலங்காநல்லூரியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர். இராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *