தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

thirunavukkarasar_11641eகிராமப்புறங்களில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி வறுமையை ஒழிக்கும் மகத்தான திட்டமான ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்” அன்னை சோனியா காந்தி அவர்களின் முயற்சியால் 2006 ஆம் ஆண்டில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தினால் பெருமளவில் பயனடைகிறவர்கள் பெண்களும், தலித் சமுதாயத்தினரும் தான். ஆண்டுதோறும் சராசரி 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டில் 65 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம் விலைவாசி உயர்வின் அடிப்படையில் தற்போது ரூ.203 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தையே மாற்றியமைத்து சாதனை படைத்த இத்திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி உரிய நிதி ஒதுக்காமல் முடக்கி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் ரூபாய் 43 ஆயிரத்து 499 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூபாய் 36 ஆயிரத்து 134 கோடி தான் மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலுவை ரூபாய் 12 ஆயிரத்து 581 கோடி வழங்கப்படாமல் ஏற்கனவே நிலுவையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் நிலவுகிற வறட்சி காரணமாக ஆண்டுக்கு 100 நாள் என்பது 150 நாளாக சில மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கூடுதலாக ரூபாய் 10 ஆயிரம் கோடி தேவை என ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கோரியுள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் வறட்சியின் கொடுமையில் மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 100 நாள் என்பதை 150 நாளாக உயர்த்த வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்த விரும்புகிறேன். இதன்மூலம் மிகப்பெரிய இழப்புக்கு ஆளான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை வறுமையின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.2 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.2 உயர்த்த மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதுவரை மூன்று முறை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல மண்ணெய்ணெய்க்கு 15 நாட்களுக்கு ஒருமுறை 50 காசுகள் வீதம் 10 மாதங்களுக்கு விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.37.50 விலை நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் 18 கோடி சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கிற குடும்பங்களின் சுமையை அதிகரித்திருக்கிறது.
 ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.12.12, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.36.83, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.470 என்கிற வகையில் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய விலைக் குறைப்பு நடவடிக்கைகளால் 2014-15 இல் ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் கோடியாக மானியம் அதிகரித்தது. மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அனைத்து மானியங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற முடிவில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளினால் நாடு முழுவதும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *