தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017

featuredபிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுமளவிற்கு பல்வேறு இன்னல்களை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலில் இளம் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்திருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வருகிற 5.1.2017 வியாழக்கிழமை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 5.1.2017 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. கே. ரஹ்மான்கான், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட பார்வையாளர் புதுவை திரு. ஏ.வி. சுப்பிரமணியம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள்-இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள், செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பண மதிப்பு நீக்க எதிர்ப்பு இயக்;கம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு ஜனவரி 7, 2017 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் எனது தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பார்வையாளரும், கர்நாடக மாநில அமைச்சருமான திரு. டி.கே. சிவக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. கே. ரஹ்மான்கான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் திரு. முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆஸ்கர் பெர்னான்டஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் ஜி. சின்னா ரெட்டி ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமரின் அறிவிப்புக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்தார்களா ? ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிடுவதில் என்ன தயக்கம் ? நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு டிசம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை எவ்வளவு ? இதில் எவ்வளவு கருப்பு பணம் ? கருப்புப் பணத்தை ஒழிப்போம், கள்ளப் பணத்தை ஒழிப்போம் என்று முழங்கியவர்கள் இதுவரை இதற்கான விவரத்தை வெளியிடாமல் இருப்பது ஏன் ? பிரதமர் மோடி உரையில் கருப்பு பண ஒழிப்பு பற்றி முழுமையான விவரங்கள் வெளிவரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிதிநிலை அறிக்கையின் மூலமாக நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டிய சலுகைகளை பிரதமர் மோடி தமது உரையின் மூலமாக வெளிப்படுத்தி பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட தோல்வியை மூடிமறைக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடியின் முழு தோல்வியை மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அணி திரண்டு போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் பிரதமர் மோடியின் ஜனநாயக, சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்துவோம். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களிடையே ஆதரவை திரட்டுவோம். காங்கிரஸ் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்து பங்கேற்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *