தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 03.12.2016

dsc_0448கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் நாடு முழுவதும் கட்டாய கல்வி வழங்கும் கல்வி உரிமைச் சட்டத்தை 2006 இல் நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழைஎளிய மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2013-14 கல்வி ஆண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் மொத்தம் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால் நிரப்பப்பட்ட இடங்கள் 16 ஆயிரத்து 194 இடங்கள் தான். 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம் தான் ஒதுக்கியிருந்தன.
எல்லாவற்றையும் மிஞ்சுகிற கொடுமை என்னவெனில், தமிழகத்தில் உள்ள 10,758 தனியார் பள்ளிகளில் 1392 பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்க்க வேண்டிய மாணவர்களில் ஒரே ஒரு மாணவர் தான் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கு சேர வேண்டிய முழு கட்டணத்தை மத்திய அரசு வழங்கும் போது இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம் ? ஏன் இந்த பாராமுகம் ?
இந்நிலையில் 2015-16 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார். கல்வி உரிமைச் சட்டப்படி எவ்வளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர் என்கிற விவரத்தை கல்வியமைச்சர் வெளியிட வேண்டும். கல்வித்துறையில் அனைத்து மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக இருந்ததையும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டு கல்வியில் புரட்சி நிகழ்த்தப்பட்டதையும் எவரும் மறந்திட இயலாது.
ஆனால் சில ஆண்டுகளாக தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து வருவது மிகுந்த கவலையைத் தருகிறது. ஏழைஎளிய மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு திரவுகோல் ஆகும். தமிழகத்தில் படிக்கிற மாணவர்களின் தரம் குறித்து செய்யப்பட்ட ஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியைத் தருகிற வகையில் உள்ளது. இந்த அறிக்கையின்படி கிராமப்புற பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களில் 21 சதவீதத்தினர் தான் முதல் வகுப்பு பாடங்களையே படிக்க திறனுள்ளவர்களாகவும், இரண்டாம் வகுப்பு பாடத்தை 30 சதவீத மாணவர்கள் தான் படிக்க முடிகிறது என்கிற ஆய்வறிக்கையின் கூற்றைக் கண்டு அதிர்ச்சியடையாதவர்கள் இருக்க முடியாது.
ஆனால் மத்திய பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின்படி படிக்கிற மாணவர்களின் கல்வித்திறன் அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்களை விட திறன் மிகுந்ததாக இருப்பதால் தமிழகத்தில் மாணவர்களிடையே கல்வியறிவில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. இந்நிலையின் காரணமாக தமிழக கல்வித்துறை என்பது வணிகமயமாக மாறி வருகிறது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்பட்டு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க தொடங்கப்பட்ட பள்ளிகளில் நிலவும் அவலநிலையை ‘சமகல்வி இயக்கம்” என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி 82 சதவீத ஆரம்ப பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் தரையில் உட்கார்ந்து பாடம் படிக்கிற நிலை, 16 சதவீத உயர்நிலைப் பள்ளிகளில் மேஜை – நாற்காலி இல்லை, 33 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை, 36 சதவீத பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லையென அவலப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கிற போது தமிழக அரசு யாருக்காக செயல்படுகிறது ? கல்வித்துறையில் தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட சமுதாய மாணவர்கள் கல்வி பெறுவதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு புறக்கணிக்கலாமா ?
கல்வித்துறையில் உயர்நிலையில் இருந்த தமிழகம், இன்று தாழ்நிலைக்கு சென்று கொண்டிருப்பதைத் தான் மேற்கூறிய தகவல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆதிதிராவிட சமுதாய மக்களை எந்த அரசாவது புழுவாக மதித்து புறக்கணிக்குமேயானால் அவர்களை தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *