தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள் :

தீர்மானம் : 1

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய – மாநில அமைச்சர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 2 – பணமதிப்பு நீக்க நடவடிக்கை

நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத மதிப்பு கொண்ட ரூபாய் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியை ஒரு அறிவிப்பின் மூலமாக ரூபாய் 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் மூலமாக பொருளாதாரமே முடங்கி, மக்கள் சொல்லொணா துன்பங்களை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். இத்தகைய அறிவிப்பை சட்டத்தின் அனுமதியில்லாமல் செய்து தங்களது பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிற உரிமையை பிரதமர் நரேந்திர மோடி பறித்திருக்கிறார். இதுவரை 60க்கும் மேற்பட்ட சுற்றறிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கி எதையோ மறைப்பதற்கு பல்வேறு முனைகளில் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியால் பணமதிப்பு நீக்கப்பட்ட 2700 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டை புதிய வடிவத்தில் அச்சடிக்கும் திறன் இந்திய ரிசர்வ் வங்கியின் அச்சகங்களுக்கு இருக்கிறதா என்பதைக் கூட அறியாத பிரதமரை, நிதியமைச்சரை இந்த நாடு பெற்றிருக்கிறது. இதற்கான விலையைத் தான் நாட்;டு மக்கள் தங்களது துன்பத்தின் வாயிலாக அனுபவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி இந்த முடிவை அறிவிக்கிறபோது கருப்பு பணத்தை ஒழிப்போம், கள்ளப் பணத்தை ஒழிப்போம், தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று முழங்கியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் சமீபத்திய தகவலின்படி செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியில் ரூபாய் 14 லட்சத்து 97 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 50 நாட்கள் துன்பத்திற்குப் பிறகு நரேந்திர மோடியைப் பார்த்து நாட்டு மக்கள் கேட்கிறார்கள். நரேந்திர மோடி அவர்களே, உங்களது அறிவிப்பால் கருப்பு பணம் ஒழிந்ததா ? கள்ளப் பணம் ஒழிந்ததா ? தீவிரவாதம் ஒழிந்ததா ? என்று கேட்கிற கேள்வி பிரதமர் மோடியின் காதில் விழுவதாகத் தெரியவில்லை. ஆனால் தொடக்கத்தில் பேசியதற்கு மாறாக 85 சதவீதம் பண பரிவர்த்தனை செய்கிற மக்களுக்கு மத்தியில் பணமில்லா பரிவர்த்தனையைப் பற்றி நிறைய பேசுகிறார். இது தோல்வியை மூடிமறைத்து மக்களை திசைத்திருப்புகிற முயற்சியாக இச்செயற்குழு கருதுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பை எதிர்த்து அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் இளம் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பல்வேறு போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருக்கிறது. இதையொட்டி ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலமாக நடத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3 – விவசாயிகள் தற்கொலை 

திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 14 லட்சம் ஹெக்டேரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வந்தனர். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை பெறுவதற்கு மத்திய அரசு தவறியதன் காரணமாக டெல்டா பகுதியில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தங்கள் கண் முன்னாலேயே கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த 2 மாதங்களாக 122 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்ட கோரமான சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் காவிரி டெல்டா மாவட்டத்தைத் தவிர ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்கொலை சாவுகள் நிகழ்ந்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சம்பா பயிர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிட்டது. கடந்த மூன்றாண்டுகளாக காவிரியில் நமக்கு வர வேண்டிய நீர் வராத காரணத்தால் குறுவை, சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் லேவா தேவிக்காரர்களிடமிருந்து கடன் வாங்கி முதலீடு செய்து எந்தப் பலனும் கிடைக்காமல் பயிர்கள் கருகி விட்டதே என்பதை நாளுக்கு நாள் பார்த்த அதிர்ச்சியில் இத்தகைய சாவுகள் நிகழ்ந்து வருகின்றன.

கடன் தொல்லை தாங்க முடியாமல் பயிர்களுக்கு இடப்பட வேண்டிய பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைகள், பயிர் கருகியதை தாங்க முடியாத உயிரிழப்புகள் என சாவுகளின் பட்டியல் நாள்தோறும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொள்கிற அவலம் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது.

‘சோழ நாடு சோறுடைத்து” என்கிற புகழுக்கு களங்கம் ஏற்படுகிற வகையில் ‘சோழநாடு தற்கொலை நாடாக” மாறி வருகிறது. கடந்த 2 மாதங்களாக நாள்தோறும் நடைபெறுகிற விவசாயிகளின் சாவுகள் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்புவரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கவோ, ஆறுதல் கூறவோ தமிழக அமைச்சர்களோ, மாவட்ட ஆட்சித் தலைவர்களோ எவரும் செல்லவில்லை என்கிற செய்தி அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளி விவரங்கள்  வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 5650 ஆக இருந்தது 2015 இல் 8007 ஆக உயர்ந்திருக்கிறது. இது 42 சதவீதம் உயர்வாகும். மாநில வாரியாக பார்க்கிற போது மகாராஷ்டிராவில் 3030, தெலங்கானாவில் 1358 என எண்ணிக்கைகள் வெளிவருகின்றன. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையை தமிழக காவல்துறையினரின் துணையோடு மூடி மறைக்கப்படுகின்றன. இத்தகைய சாவுகளை உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படுவதால் தேசிய குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் இடம் பெறாமல் மறைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிற விவசாயிகளின் தற்கொலை சாவுகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட காரணத்தால், இன்றைக்கு தமிழக அரசு இதுகுறித்து கவனத்தை திருப்பியுள்ளது. இதுவரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், கருகிய பயிரினால் அதிர்ச்சி ஏற்பட்டு இறந்த விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கி நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 தீர்மானம் : 4 –தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற முடியாத நிலையில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதை இச்செயற்குழு கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. தமிழகத்தில் சராசரி மழை பொழிவு 59 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 41 சதவீதம் மழை பொழிவு குறைவாக நிகழ்ந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இதுவரை 168.4 மில்லி லிட்டர் மழைதான் வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. சராசரியாக பெய்ய வேண்டிய 441 மில்லி லிட்டருக்கு பதிலாக 62 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக இந்தளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டு வரலாறு காணாத வறட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் நிலவுகிற வறட்சி நிலைமையை ஆய்வு செய்து இதுவரை மத்திய அரசுக்கு அறிக்கை எதுவும் வரவில்லை என மத்திய விவசாயத்துறை அமைச்சர் கூறியிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. கர்நாடக மாநிலம், கேரள மாநிலம் உரிய நேரத்தில் அறிக்கையை வழங்கி மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்றதாக செய்தி வருகிற நேரத்தில் தமிழகம் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் செயலற்றுக் கிடப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக விவசாயிகளின் பயிர் கருகி வருகிற நேரத்தில் குடிநீருக்கே பிரச்சினை ஏற்படும் என்று அபாய சங்கு ஊதப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடமிருந்து உரிய நிதியை பெற்று போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5 – வார்தா புயலினால் பாதிப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்;ர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூறு ஆண்டில் காணாத பெருமழையை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது ரூ.25 ஆயிரத்து 912 கோடி. ஆனால் நரேந்திர மோடி அரசு கொடுத்ததோ முதல் தவணையாக ரூபாய் 940 கோடி, பிறகு நரேந்திர மோடி வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு வழங்கியது ரூபாய் 1000 கோடி. கேட்டதற்கும் கொடுத்ததற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனால் தமிழக அரசு அதற்குப் பிறகு ஏன் கேட்ட தொகையை பெறுவதற்கு முயலவில்லை. மத்திய அரசு மேலும் நிதியை ஏன் அறிவிக்கவில்லை என்பது எவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

கடந்த ஆண்டு கடும் மழையால் பாதிக்கப்பட்டோம். நடப்பு ஆண்டில் மழை பெய்யாத வறட்சியினால் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலையில் தான் வார்தா புயல் நம்மை புரட்டிப் போட்டது. மீண்டும் சென்னை, திருவள்;ர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் வார்தா புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வார்தா புயலினால் சென்னை மாநகரில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுமை நிறைந்த மரங்கள் அடியோடு தரையில் சாய்க்கப்பட்டன. இதனால் சென்னை மாநகரம் தனது பசுமையை இழந்து நிற்கிறது. இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டு நிவாரண நடவடிக்கைகளை எடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி நிவாரணம் கோரினார். முதல்கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி உடனடியாக தேவைப்படுகிறது என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் நரேந்திர மோடி அரசு முதல்கட்டமாக ரூபாய் 500 கோடி வழங்கிவிட்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதற்குப் பிறகு தொடர்ந்து வலியுறுத்துகிற முயற்சியில் தமிழக அரசு ஈடுபடாமல் இருப்பது ஏனென்றுத் தெரியவில்லை. மத்திய அரசும் ஏன் தொடர்ந்து நிதி ஒதுக்கவில்லை என்பதும் புரியவில்லை.

தமிழக அரசு சார்பாக நிதி கேட்பதும், அதை மத்திய பா.ஜ.க. அரசு மறுப்பதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை வைத்திருகிற மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதாக பறைசாற்றிக் கொள்கிற அ.இ.அ.தி.மு.க. இதுகுறித்து கடுமையான கண்டனங்களை தெரிவிக்க தயங்குவது ஏன் ? தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடாதது ஏன் ? இத்தகைய தயக்கத்தினால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மக்கள்தான் என்பதை அ.தி.மு.க. அரசுக்கு கடுமையான கண்டனத்தை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 6 – ஜல்லிக்கட்டு

தமிழர்களின் கலாச்சார, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 11.7.2011 இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அறிவிக்கையின் மூலம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்தது தான் காரணம் என்று தமிழக பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2011 இல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்ற ஆணையின் பேரில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை எவரும் மறுக்க முடியாது.

கடந்த மே 7, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு கடந்த ஜனவரி 8, 2016 இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்து. ஆனால் அந்த பட்டியலில் இருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது. மத்திய பா.ஜ.க. அரசு இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக அமைச்சரவையின் ஒப்புதலையோ, தேசிய விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதலையோ பெறவில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க.வின் அறிவிக்கையை தடை செய்யப்பட்டது.

உண்மையிலேயே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசு நினைத்தால் உச்சநீதிமன்ற தடைக்கு எதிராக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960 இல் திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழக பா.ஜ.க.வை திருப்தி செய்வதற்காக ஒரு அறிவிக்கையை (Notification) வெளியிட்டு, அது நீதிமன்றத்தால் தடை செய்யப்படும் என்று தெரிந்தே ஒரு கண்துடைப்பு நாடகத்தை பா.ஜ.க. அரசு நடத்தியிருக்கிறது. இதன்மூலம் ‘பாலுக்கு காவல், பூனைக்கும் தோழனாக” பா.ஜ.க. அரசு செயல்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களுக்கு செய்த பச்சை துரோகமாக இச்செயற்குழு கருதுகிறது.

எனவே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஒரு அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டுமென நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க.வும், மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க.வும் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும், உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு மத்திய – மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7 – பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த மே 2014 இல் 110 டாலராக இருந்தது, தற்போது 58 டாலராக குறைந்துள்ளது. இந்த விலை சரிவை மக்களுக்கு பயன்படுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து பலமுறை கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி, மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையான ரூ.25-ஐ விட மத்திய – மாநில அரசுகளின் மொத்த வரியாக ரூ.36.49 விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூ.9.20 ஆக இருந்தது, ஜனவரி 2017 இல் ரூ.21.48 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூ.3.46 ஆக இருந்தது தற்போது ரூ.17.33 ஆக உயர்ந்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஆண்டில் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு ரூபாய் 99 ஆயிரத்து 184 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்திருக்கிறது.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்களின் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ஆண்டுக்கு மானியமாக வழங்கியது. பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி மக்களின் மீது சுமையை ஏற்றுகிற மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் : 8 – நுழைவுத் தேர்வு

தமிழகத்தில் நீண்டகாலமாக இடஒதுக்கீட்டு அடிப்படையில் சமூகநீதியை நோக்கமாகக் கொண்டு வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2016 இல் உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் தொழிற்கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென ஆணை வழங்கியுள்ளது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிக்கைகள் விரைவில் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லி சென்ற தமிழக கல்வி அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படும் என்று ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இது கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை பாதுகாப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று வழங்கிய வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெறுவதால் மாநில பாடத்திட்டத்தின்படி படித்த தமிழகத்தைச் சேர்ந்த 8 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த பின்தங்கிய ஏழைஎளிய வகுப்பில் பிறந்த பின்னணி கொண்டவர்கள். பாடத்திட்டத்தின் அடிப்படையில் பார்க்கிற போது மத்திய பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத் திட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை அகற்றாமல் ஒரே நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்வது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இச்செயற்குழு தமிழக அரசை எச்சரிக்கிறது.

கல்வியில் அனைவருக்கும் சமஉரிமையும், சம வாய்ப்பும் உருவாக்கித் தராமல் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. சமநிலையில் உள்ளவர்களுக்குத் தான் போட்டி இருக்க முடியுமே தவிர, ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில் போட்டிகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் அமைத்துக் கொடுத்த சமூகநீதி குழி தோண்டிப் புதைப்பதற்கு தமிழக ஆட்சியாளர்களே துணைபோவதை இச்செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது. எனவே, தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த நுழைவுத் தேர்வு பிரச்சினையில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக தமிழக அரசு கூட்டி முடிவு எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 9 – முடக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள்

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கூட்டுறவுத்துறை வங்கிகளை முடக்குகிற வகையில் சில நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக மத்திய பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் 369 மாவட்டங்களில் 13 ஆயிரத்து 943 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 813 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கியின் கிளைகளில் ரூபாய் 22 ஆயிரத்து 660 கோடிக்க கிராமப்புற மக்களின் வைப்பு நிதி உள்ளது. விவசாயிகளுக்கு கடனாக ரூபாய் 29 ஆயிரத்து 95 கோடி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் என்ற மூன்றடுக்கு முறையில் செயல்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளானது தங்களுக்கு கீழுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு கடன்களை வழங்குகிறது. அந்த சங்கங்கள் தமது உறுப்பினர்களிடம் வைப்பு நிதியை பெறவும், கடனை வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் செல்லாத பணத்தை மாற்றிக் கொடுக்க மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் அதனுடைய கிளைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் என்றால் மாநில கூட்டுறவு வங்கிகளும், நகர கூட்டுறவு வங்கிகளும் மட்டுமே என்று மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்ட அறிவிப்பானை அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மற்றும் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கூட்டுறவு வங்ககளிலிருந்து பணத்தை எடுக்கவோ, வாங்கிய கடனை திரும்ப செலுத்தவோ, கடனை திரும்பப் பெறவோ முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு விவசாயத் தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு உள்ள அதிகாரத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

நீண்டநெடுங்காலமாக கிராமப்புற பொருளாதாரத்தோடு பின்ணிப் பிணைந்த கூட்டுறவு வங்கிகளை முடக்கிய நடவடிக்கைகளை எடுத்த மத்திய பா.ஜ.க. அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 தீர்மானம் : 10 – தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லுகின்ற மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கொழும்புவில் மீனவர் பிரச்சினை குறித்து இந்திய – இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிற சூழலில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த 4.1.2017 அன்று ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது கைது செய்யப்பட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 51 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 61 மீனவர்கள் சிறையில் உள்ளனர். 126 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகத்தில் பராமரிப்பு இல்லாமல் கேட்பாரற்று கிடக்கின்றன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும், பிறகு மீனவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று 51 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளன. இப்பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு காண மத்திய – மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும், படகுகளை திரும்பப் பெறவும், இலங்கை அரசை வற்புறுத்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 11 – அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு விழா

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆற்றல்மிக்க தலைவராக, இந்தியாவின் பிரதமராக 16 ஆண்டுகாலம் பதவி வகித்து உலக அரங்கில் நமது நாட்டை தலைநிமிர வைத்தவர் அன்னை இந்திரா காந்தி. இந்திய அரசியலை ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் தமது ஆளுமைக்குள் வைத்திருந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த நவம்பர் 19 ஆம் தேதி தொடங்கி ஓராண்டுகாலம் சிறப்பாக நடத்தி வருகிற நவம்பர் 19, 2017 அன்று நிறைவு விழா நடத்துவதென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. இவ்விழாவிற்கு அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை அழைப்பதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு விழாவின் மூலம் அவரது கொள்கைகள், செயல்திட்டங்கள், ஏழைஎளிய மக்களுக்கு அவர் ஆற்றிய சேவை, தீவிரவாதத்திற்கு எதிராக அவர் தொடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் ஆகியவற்றை பரப்புகிற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென இச்செயற்குழு விரும்புகிறது.  இவ்விழாக்களின் மூலம் கருத்தரங்குகள், புகைப்பட கண்காட்சிகள், பாத யாத்திரை பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக அன்னை இந்திரா காந்தியின் புகழை தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் பரப்புகிற முயற்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் தீவிரமாக ஈடுபட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அன்னை இந்திரா காந்தியின் புகழ்பாட நூற்றாண்டு விழா ஒரு அரிய வாய்ப்பு. இதை சரியாக பயன்படுத்த வேண்டுமென அனைத்து காங்கிரஸ் கட்சி நண்பர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 12 – காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி நடுவர்மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் மத்திய காங்கிரஸ் அரசுதான் அரசிதழில் வெளியிட்டது. பன்மாநில நீர்த் தகராறு சட்டத்தின்படி ‘காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இணையானது. இதன்மீது மேல்முறையீடு செய்ய முடியாது. இதை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குக் கூட அதிகாரம் கிடையாது. இது அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்தக் கூடியது” என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தலைமை வழக்கறிஞர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு, உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரம் இருக்கிறது என்று அந்தர்பல்டி அடித்ததை இச்செயற்குழு மிகுந்த கண்டனத்தோடு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற ஆணையின்படியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்திட மத்திய பா.ஜ.க. அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 13 – கரும்புக்கு கூடுதல் விலை

கடந்த 3 ஆண்டுகளாக கரும்புக்கு மத்திய அரசு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய், மாநில அரசு ரூ.550 நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மிகுந்த வருத்ததோடு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.    அதேநேரத்தில் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு ரூ.1850 கோடி வழங்கப்படாமல் நிலுவைத் தொகையாக இருந்து வருகிறது. இதை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுவரை லாபத்தில் இயங்கி வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட தவறான நிர்வாகத்தின் காரணமாக ரூ.2200 கோடி நஷ்டத்தில் தற்போது சிக்கியுள்ளது.

எனவே, கரும்பு விவசாயிகள் சந்திக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழக அரசு, தனியார் சர்க்கரை ஆலை பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமென பலமுறை கோரியிருக்கிறோம். ஆனால் விவசாயிகளை கலந்து பேசாமலேயே கரும்பு விலையை தன்னிச்சையாக நிர்ணயிக்கிற மத்திய – மாநில அரசுகளின் போக்கை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கர்நாடகத்தில் ஒரு டன் கரும்புக்கு வயல் விலையாக (குநைடன Pசiஉந) ரூ.2,750, மகாராஷ்டிராவில் ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் டன் ஒன்றுக்கு வெட்டுக் கூலியாக ரூபாய் 1,000 கூடுதலாக வழங்கப்படுகிறது. இதைப்போல தமிழகத்திலும் கரும்புக்கு வயல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

 தீர்மானம் : 14 – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

கிராமப்புறங்களில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி வறுமையை ஒழிக்கும் மகத்தான திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அன்னை சோனியா காந்தி அவர்களின் தீவிர முயற்சியால் 2006 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தினால் பெருமளவில் பயனடைகிறவர்கள் பெண்களும், தலித் சமுதாயத்தினரும் தான். ஆண்டுதோறும் சராசரி 5 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 65 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம் விலை உயர்வின் அடிப்படையில் தற்போது ரூ.203 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தையே மாற்றியமைத்து சாதனை படைத்த இத்திட்டத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் உரிய நிதி ஒதுக்காமல் தொடர்ந்து முடக்கி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் ரூபாய் 43 ஆயிரத்து 499 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூபாய் 36 ஆயிரத்து 134 கோடி தான் மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலுவை ரூபாய் 12 ஆயிரத்து 581 கோடி வழங்கப்படாமல் ஏற்கனவே நிலுவையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் நிலவுகிற வறட்சி காரணமாக ஆண்டுக்கு 100 நாள் என்பது 150 நாளாக சில மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கூடுதலாக ரூபாய் 10 ஆயிரம் கோடி தேவையென ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வைத்த கோரிக்கையை நிதியமைச்சகம் புறக்கணித்து வருகிறது.

தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் வறட்சியின் கொடுமையில் மக்கள் தற்கொலை செய்துக் கொண்டு மிகப்பெரிய கோர நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதிலிருந்து விவசாயத் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு ஆண்டுக்கு 100 நாள் என்பதை 150 நாளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 15 – காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்துவதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும். மாநில கட்சிகளுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்துவதற்கு உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வருகிற ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் நடத்த  முடிவு  செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மாபெரும் மக்கள் இயக்கமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக புதிய உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள், புகைப்படத்துடன் கூடிய நவீன உறுப்பினர் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு விரைவில் அனுப்பப்படும். இந்த உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். காங்கிரஸ் வலிமையாக இருந்தால் தான் இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க முடியும். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்போம், காங்கிரசை வளர்ப்போம் என்கிற சூளுரையை ஏற்க காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும்  இச்செயற்குழு அறைகூவி அழைக்கிறது.

தீர்மானம் : 16 – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல வருடங்களாக சிவாஜி சமூகநலப் பேரவையும், தமிழக காங்கிரஸ் கட்சியும் போராடி வந்தது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நடிகர் திலகம் மணி மண்டபத்திற்கான பணிகள் முறைப்படி தமிழக அரசால் தொடங்கி நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.

சென்னை கடற்கரை, காமராஜர் சாலையிலுள்ள நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த சிலை வரும் மே மாதத்திற்குள் அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் நிறுவப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், அம்பேத்கர் உட்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம்  அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளன. அதுபோல நடிகர் திலகத்தின் மணி மண்டபமும், சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும். நீதிமன்றமும் தற்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்ற மட்டுமே உத்தரவிட்டுள்ளதே தவிர, வேறு இடத்தில் மாற்றியமைக்க அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் தான் நடிகர் திலகத்தின் சிலை அமைந்துள்ளது என்றாலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும் போது, சென்னை, கடற்கரை சாலையிலேயே நிறுவிட வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 17 – அஞ்சலக ஊழியர்கள்

தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14 ஆம் தேதி சனிக்கிழமை மிக விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழக அரசு அன்று விடுமுறை அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இரண்டரை கோடி பணியாளர்களும், தமிழகத்தில் மூன்றரை லட்சம் பணியாளர்களைக் கொண்ட அஞ்சலக ஊழியர்களுக்கு அன்று விடுமுறை மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட விடுமுறை நடப்பு ஆண்டில் மத்திய பா.ஜ.க. அரசு விடுமுறை வழங்காமல் பணிக்கு வர வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறது. இந்த ஆணையை ரத்து செய்து விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அஞ்சலக ஊழியர்கள் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 18 – சமூக ஊடகங்களில் வன்முறைப் போக்கு

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக இழிவான கருத்துக்களை வெளியிடுவதோடு அச்சுறுத்துகிற வகையில் செல்பேசி மூலமாக மிரட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் செல்வி. எஸ். ஜோதிமணியை தனிப்பட்ட முறையிலும், அவரது குடும்பத்தினரயும் பா.ஜ.க.வினர் சிலர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆபாசமாகவும், இழிவாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கி வருகின்றனர். பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் ஆபாச பாலியல் வன்முறை கொடுமைகள் குறித்து கரூர் காவல் நிலையத்திலும், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திலும் செல்வி. ஜோதிமணி புகார் அளித்திருக்கிறார். இதில் சம்மந்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் பெயரை குறிப்பிட்டு ஆதாரத்தோடு புகார் மனு வழங்கியிருக்கிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு தமிழக காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறது.

சமீபகாலமாக தொலைக்காட்சியில் நடைபெறுகிற விவாதங்களில் பா.ஜ.க.வினர் மிகுந்த ஆணவத்தோடும், அச்சுறுத்துகிற வகையிலும் பேசி வருவதை அனைவரும் அறிவார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்கிற மமதையில் காங்கிரஸ் கட்சியினரை மிரட்டுகிற தொணியில்  பா.ஜ.க.வினர் விவாதத்தில் நடந்து கொள்வதை தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துகிற வகையில் தமிழக காங்கிரஸ் சார்பாக ஊடகங்களில் பங்கேற்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இதை எதிர்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு விரும்புகிறது.

 தீர்மானம் : 19 –அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் பிரச்சினை

பின்தங்கிய மக்கள் கல்வி பெறுவதற்கு வாய்ப்பாக அண்ணாமலை பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. அப்பல்கலைக் கழகத்தில் நிர்வாக முறைகேடுகள் காரணமாக அரசுடமையாக்கப்பட்டது. அரசு நிர்வாகத்திற்கு கீழாக வந்த பிறகு அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாதது மிகுந்த வேதனைக்குரியது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கட்டணங்கள் தனியார் பல்கலைக் கழகங்களை விட கூடுதலாக இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக கட்டண குறைப்பு நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய அகவிலைப்படியோ, சம்பளமோ, ஓய்வூதியமோ முறையாக வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து பல்கலைக் கழக ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் குறித்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கண் கொள்ளாமல் இருப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அண்ணமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினரை தமிழக முதலமைச்சர் அழைத்து பேசி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு தீர்வு காண இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *