தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் :

 இரங்கல் தீர்மானம் : 1- முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா மறைவு

 தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பொறுப்பேற்று பணியாற்றிய செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1982 இல் அரசியலில் நுழைந்த செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழிகாட்டுதலோடு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 1991, 2001, 2011, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராக பொறுப்பேற்று 14 ஆண்டுகள் பதவியில் இருந்து பணியாற்றியிருக்கிறார்.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் அரசியலில் நுழைகிறபோது பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட இக்கட்டான நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் அன்னை இந்திரா காந்தி அவர்கள் இருந்ததை யாரும் மறந்திட இயலாது. அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு 1989 இல் அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ராஜீவ்காந்தி எடுத்த முடிவின் காரணமாக 1991 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. செல்வி. ஜெ. ஜெயலலிதா முதல்வராகவும் பதவி ஏற்க வழி செய்தது. இதன்மூலம் ஜெயலலிதாவின் தலைமை அ.தி.மு.க.வில் வலிமை பெற்று உறுதிபெற்றது.

தமிழக அரசியலில் செல்வி. ஜெயலலிதா அவர்களோடு இணைந்து  கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்திருக்கிறோம், எதிராகவும் அணி அமைத்து போட்டியிட்டிருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் அரசியல் ரீதியாக இருந்தாலும் செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஆணாதிக்கம் மிக்க தமிழக அரசியலில் ஒரு பெண்ணாக துணிச்சலுடன் பல்வேறு பொறுப்புகளை வகித்து சாதனைகளைப் படைத்ததை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அனைத்திந்திய அண்ணா தி.மு. கழக பொதுச்செயலாளர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இச்செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

 இரங்கல் தீர்மானம் : 2

 தமிழகத்தின் தலைச்சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நகைச்சுவை நடிகர் துக்ளக் வாரஇதழ் ஆசிரியர் சோ எஸ். ராமசாமி, புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பேரன் திரு. உலகநாதன் ஆகியோர் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

 இரங்கல் தீர்மானம் : 3

 தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. நவநீத கிருஷ்ண பாண்டியன், தஞ்சை மாநகர மாவட்ட நிர்வாகி ஆடிட்டர் சுவாமிநாதன், மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் பசுமலை ரவி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சிறந்த பேச்சாளருமான திரு. காஞ்சி சுகுமார், கடலூரில் வசித்து வந்த முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான திரு. கதர் நாமதேவ் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இரங்கல் தீர்மானம் : 4

 பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தாங்கள் வங்கிகளில், ஏ.டி.எம்.களில் டெபாசிட் செய்த பணத்தை திரும்ப எடுப்பதற்காக கடும் வெயிலில் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளார்கள். வேலைப் பளுவின் காரணமாக மனஉளைச்சல் ஏற்பட்டு 17 வங்கி அதிகாரிகள் இறந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

 இரங்கல் தீர்மானம் : 5

காவிரி டெல்டா பகுதியில் தாங்கள் சாகுபடி செய்த பயிர் தங்கள் கண் முன்னாலேயே தண்ணீரின்றி வறட்சியின் காரணமாக கருகுவதைப் பார்த்த விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டும் அதிர்ச்சியில் இறந்தும் இதுவரை 116 பேர் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *