தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 07.11.2016

Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

நீண்டகாலமாக நிலவி வருகிற மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்கிற வகையில் டெல்லியில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் மீனவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல் முடிந்திருக்கிறது. இது தமிழக மீனவ அமைப்புகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக மீனவர்களின் கோரிக்கைகளான மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு வலை, இழுவை வலை பயன்படுத்துவதை நிறுத்த 3 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்க வேண்டும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும், இலங்கை கடல் பகுதியில் 80 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகள் எதையும் ஏற்பதற்கு இலங்கை பிரதிநிதிகள் தயாராக இல்லை என்று தெரிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சுமந்திரன் இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசும்போது இரட்டை மடி, சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதேபோல, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசும்போது ‘இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும் என்று கூறியிருப்பது பேச்சுவார்த்தையின் முழு தோல்வியை வெளிப்படுத்துகிறது.
தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடல் எல்லையில் மீன்பிடிக்கும் போது நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பதை அறியாமல் சில நேரங்களில் இலங்கை கடல் பகுதிக்குள் செல்கிற போது கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நம் கடல் எல்லைக்குள் வந்து அத்துமீறி தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதிலிருந்து தமிழக மீனவர்களை காப்போம் என்றும், மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைப்போம் என்றும் கூறி இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்தியவர்கள் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தொடர்ந்து பா.ஜ.க. அரசு துரோகம் செய்து வருகிறது.
மத்திய அரசின் தடையால் கடல் அட்டைகளை பிடிக்க முடியாமல் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர். மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கடல் அட்டைகள் உணவு மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் நல்ல வரவேற்புள்ள கடல் அட்டைகளின் இனப்பெருக்கம் தமிழக கடல் பகுதியில் பெருமளவில் உள்ளன. இந்த நிலையில் எந்தவித காரணமும் இல்லாமல் கடல் அட்டைகளை அழிந்து வரும் இனப் பட்டியலில் திடீரென மத்திய வனத்துறை அமைச்சகம் சேர்த்திருப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற மற்றுமொரு நடவடிக்கையாகும்.
ஆனால் இலங்கை மீனவர்களுக்கு கடல் அட்டைகளை பிடிக்க தடையில்லாததால் ஆண்டுக்கு சுமார் 200 மெட்ரிக் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானத்தை பெருக்கி வருகின்றனர். ஏற்கனவே மீன்பிடி தொழிலில் இலங்கை அரசால் துன்பங்களை அனுபவித்து வரும் மீனவர்கள் மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய தடையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு எதிராக மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அரசு செவிமடுக்க தயாராக இல்லை.
எனவே, தமிழக மீனவர்கள் கடல் அட்டைகளை பிடிக்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *