தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.10.2016

thirunavukkarasar-wishes-jayalalithaaதமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட காவிரி பிரச்சினையில் மத்திய – மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழகத்தில் 23 லட்சம் ஏக்கர் நிலமும், கர்நாடக மாநிலத்தில் 5 லட்சத்து 65 ஆயிரம் நிலமும், கேரள மாநிலத்தில் 6,300 ஏக்கர் நிலமும்தான் காவிரி பாசனத்திற்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், 1892, 1924 ஒப்பந்தங்களை மீறி, கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் புதிய அணைகளை கட்டி, தமது பாசனப் பகுதிகளை விரிவுபடுத்தி, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262 இன்;படி மாநிலங்களிடையேயான நதிகளின் தண்ணீர் தகராறுகள் தீர்ப்பதற்காக 1956 ஆம் ஆண்டில் பன்மாநில நீர்த்தகராறு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. 1992இல் நடுவர்மன்றம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டுமென்று வழங்கிய இடைக்கால தீர்ப்பு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்கு கர்நாடக அரசு தயாராக இல்லை.
காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு 16 ஆண்டுகள் கழித்து இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 2007இல் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்த காரணத்தால், காலம் தாழ்த்தப்பட்டு மார்ச் 2013 இல் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் இறுதி தீர்ப்புக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதை வழங்கிய பெருமை மத்திய காங்கிரஸ் ஆட்சியையே சாரும்.
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஐம்பது சதவீத நம்பகத்தன்மையில் மொத்த நீர் 726 டி.எம்.சி. என்று கணக்கிடப்பட்டு பங்கீட்டு அளவில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி (58 சதவீதம்), கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. (37 சதவீதம்), கேரளாவிற்கு 30 டி.எம்.சி. (4 சதவீதம்), புதுச்சேரி 7 டி.எம்.சி. (1 சதவீதம்) என்று விகிதாச்சாரப்படி வழங்க வேண்டும். கர்நாடக அணைகளில் நீர் மிகுதியாக இருக்கும்போது தண்ணீரை திறந்து தமிழகத்தை வடிநிலமாக கர்நாடகா கருதி வருகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிற வறட்சிக் காலங்களில் பாசனத்திற்குரிய நீரை பங்கீட்டு அளவில் விகிதாச்சாரத்தின்படி திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதோ, அதில் 58 சதவீத தண்ணீரை தமிழகத்திற்கு விகிதாச்சார முறையில் திறந்துவிட வேண்டும் என்றுதான் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு கூறுகிறது. அந்த தீர்ப்பை நிறைவேற்ற மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இது கடுமையான கண்டனத்திற்குரியது.
2002 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட பன்மாநில நீர்த்தகராறு சட்டத்தின்படி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபிறகு, அது உச்சநீதிமன்ற ஆணைக்கு இணையானது, இதை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்யக்கூடாது, இது அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்தக்கூடியது, இதை ஏற்க முடியாது என்ற விருப்புரிமைக்கு இடமேயில்லை என்று இத்திருத்தத்தில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை.
ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அனைவரும் அதிர்ச்சியடையக்கூடிய வகையில் உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு அரசியல் ஆதாய நோக்கோடு தமிழகத்திற்கு எதிரான நிலை எடுத்துள்ளது. இதை தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்சினையில் உரிமைகளுக்காக போராடி, இறுதியாக நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது.
இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை உருவாக்கிய முறைகளை பின்பற்றி மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற மறுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், அதை நிறைவேற்ற முன்வராமல், கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இதனால் காவிரி பாசனப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல் பல்வேறு இழப்புகளுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.
மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி மாநகரில் எனது தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், திரு. கே.வீ. தங்கபாலு, திரு. குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அமைப்புகளும், காவிரி பாசன பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், காங்கிரஸ் இயக்கத்தினரும் பெருந்திரளாக கலந்து கொண்டு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், இக்கோரிக்கையை நேரில் வலியுறுத்த பிரதமர் அலுவலகம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த நரேந்திர மோடியை கண்டித்தும் நடைபெறவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *