தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 08.11.2016

featஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆற்றல்மிகுந்த தலைவராக, மத்திய அமைச்சராக, 16 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக என பல்வேறு பொறுப்புகளை வகித்து உலக அரங்கில் நமது நாட்டை தலைநிமிர வைத்தவர் அன்னை இந்திரா காந்தி. இந்திய அரசியலை ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் தமது ஆளுமைக்கு வைத்திருந்த அன்னை இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா வருகிற நவம்பர் 19 ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலம் நவம்பர் 19, 2017 வரை இந்திய நாடு முழுவதும் மிகச் சிறப்பாக நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இவ்விழாவை ஓராண்டு முழுவதும் விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திரா காந்தியை இந்திய மக்கள் நேசித்தார்கள். பேரன்பு காட்டி மகிழ்ந்தார்கள். அடித்தட்டு மக்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் இந்திரா காந்தியை தங்களது பாதுகாவலனாக கருதினார்கள். ஏழைஎளிய மக்கள் தங்களது இதயங்களில் வைத்து போற்றினார்கள். தமது 16 ஆண்டுகால ஆட்சியில் அவரது சாதனைகளை பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும். வறுமையை ஒழிப்பதற்காக 20 அம்ச திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினார். 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். இதனால் கிளைகளின் எண்ணிக்கையை 8,200-லிருந்து இன்று 74,000 மாக உயர்ந்துள்ளது. மன்னர் மானியத்தை ஒழித்தார். நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றினார். வேளாண்மையில் புதுமையை புகுத்தி பசுமைப் புரட்சியை நடத்தி, உணவு தானியங்களின் உற்பத்தியை பெருக்கினார். வறுமையை ஒழிக்க ‘வறுமையே வெளியேறு” என முழங்கி பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி, மகத்தான புரட்சி செய்தவர் அன்னை இந்திரா.
வங்கதேசத்திற்கு படை நடத்தி, அந்த நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதனால் இவரை ‘துர்கா தேவி” என்று எதிர்கட்சியினர் மனமுவந்து அழைத்தனர். உலகநாடுகள் விழிபிதுங்கும் வகையில் அணுஆயுத சோதனையை நடத்தி இந்தியாவை அணுஆயுத பலம் வாய்ந்த நாடாக பிரகடனம் செய்தார். இந்திய – ரஷ்ய நட்புணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி ஏகாதிபத்திய நாடுகளின் எதிர்ப்பை தகர்த்தெறிந்தார். அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவு காண சிம்லா ஒப்பந்தம் செய்தார்.
தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் பொற்கோவிலை தங்கள் இருப்பிடமாக மாற்றிய போது அதன் புனிதம் காக்க அதற்குள் ராணுவத்தை அனுப்பி, தீவிரவாதிகளை வெளியேற்றினார். எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். இதன்மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காப்பரேஷன் என்கிற பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். இன்று ‘மகா நவரத்னா” என்ற தகுதியைப் பெற்று இந்திய பொருளாதாரத்தை இந்நிறுவனங்கள் தாங்கி நிற்கின்றன.
மாநில மக்களின் உரிமைகளை, தனித்தன்மைகளைமதிக்கிற வகையில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கினார். அதேபோல, சண்டிகர், அருணாச்சலபிரதேசம் மாநிலங்களுக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றுத் தந்தார்.
இந்திய நாட்டு மக்களால் அன்னை இந்திரா என அன்போடு அழைக்கப்பட்ட இவருக்கு ‘பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. உலக அரங்கில் பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. இத்தகைய சாதனைகளைப் படைத்த மாபெரும் தலைவி, மங்காப்புகழ் பெற்ற மாதரசி, அன்னை இந்திரா மடிந்த விதம் துக்ககரமானது, சோகமயமானது. எந்த தீவிரவாதத்தை எதிர்த்து நடவடிக்கைகளை எடுத்தாரோ, அதே தீவிரவாத சக்திகள் அக்டோபர் 31, 1984 அன்று அன்னை இந்திராவை அவரது பாதுகாவலர்கள் மூலமாகவே கோழைத்தனமாக படுகொலை செய்து, நாட்டு மக்களிடமிருந்து பறித்து விட்டார்கள். பயங்கரவாதிகளால் வீழ்த்தப்பட்ட வீரமங்கை இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவர் சிந்திய ரத்தம் இந்திய ஒருமைப்பாட்டை காத்து நிற்கும்.
தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட அன்னை இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவின் மூலம் அவரது கொள்கைகள், செயல்திட்டங்கள், ஏழைஎளிய மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை, தீவிரவாதத்திற்கு எதிராக அவர் தொடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் ஆகியவற்றை பரப்புகிற வகையில் செயல்படுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவின் மூலம் பல்வேறு கருத்தரங்குகள், பிரச்சார பயணங்கள், புகைப்பட கண்காட்சிகள், மலர் மற்றும் குருந்தகடுகள் வெளியிடுதல், பாதயாத்திரை பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக அன்னை இந்திராவின் புகழை தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் பரப்புகிற முயற்சியில் ஈடுபடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் அன்னை இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடன் இணைந்து பணியாற்ற துணை குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. மாநில குழுவின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அன்னை இந்திராவின் புகழ்பாட நூற்றாண்டு விழா ஒரு அறிய வாய்ப்பு. அனைவரும் ஒன்று திரண்டு அன்னை இந்திராவின் லட்சியங்களை, புகழை மக்களிடையே பரப்ப அன்போடு அழைக்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *