தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017

img_9021aதேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென 2016 இல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு 2017 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பதென ஏற்கனவே தமிழக கல்வியமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

மத்திய பாடத்திட்டத்தை விட (CBSE) மாநில பாடத்திட்டங்கள் சுலபமாக இருப்பதால் நிறைய மாணவர்கள் அதில் சேருகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் இதே மாநில பாடத்திட்டத்தில் படிக்கிற மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் பயனடைவதைப் போல அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் பயனடைவதில்லை. அரசு பள்ளியில் படிக்கிற 35 மாணவர்கள் தான் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் மருத்துவக் கல்லூரிகளில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கிற 10 மாணவர்கள் தான் (15 சதவீதம்) சேர முடிந்தது என்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. இதே நிலைதான் பொறியியல் கல்லூரிகளிலும் நீடிக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மொத்தமுள்ள 180 இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 9 மாணவர்களுக்குத் தான் சேர அனுமதி கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் தகுதியான ஆசிரியர்களோ, கட்டமைப்பு வசதிகளோ அரசு பள்ளிகளில் இல்லாததால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்துவதைப் போல பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளன. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப் போவதாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு வந்தால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பி.இ, பி.டெக் இடங்கள் தேசிய நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட்டு, இடங்கள் நிரப்பப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏறத்தாழ 571 பொறியியல் கல்லூரிகளில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து படித்து வருகின்றனர். மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வு நடத்துவதைப் போல பொறியியல் கல்லூரியிலும் அனுமதித்தால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாக நேரிட்டு ஏழைஎளிய, பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து தமிழக அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத்திட்டத்தையும் வலிமைப்படுத்தி போட்டியிடுவதற்கான சூழலை நமது மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்நிலை உருவாக இன்னும் 5 ஆண்டுகள் நமக்கு தேவைப்படும். அதுவரை நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதிலிருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து மருத்துவ, பொறியியல் படிப்புகளில் நுழைவுத் தேர்வை தவிர்த்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *