தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017

img_9021a

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு முன்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 11.7.2011 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை தான் காரணம் என்று தமிழக பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். 2011 அறிவிக்கைக்கு பிறகு உச்சநீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் உதவியோடு 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை தமிழக பா.ஜ.க.வினர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தந்திரமாக மூடி மறைத்து பேசி வருகிறார்கள். இது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதமாகும்.

கடந்த மே 7, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை சட்டத்தின் மூலமாக நீக்கி, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயலிழக்கச் செய்வதற்கு கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த முயற்சிகள் என்ன ? ஏற்கனவே 2011 அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறிய பிறகு சமீபத்தில் ஜூலை 11 ஆம் தேதி மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது ஏன்? இந்த அறிவிக்கை நீதிமன்றத்தால் ஜனவரி 12 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படும் என்று தெரிந்தும் தமிழக பா.ஜ.க.வினரை திருப்திபடுத்துவதற்காக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, இந்திய விலங்குகள் நல வாரியம், தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசின் அறிவிக்கை மூலம் செயலிழக்கச் செய்ய முடியாது என்பதை முற்றிலும் அறிந்த மத்திய பா.ஜ.க. அரசு இந்த அறிவிக்கை வெளியிட்டதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்கு விலங்குகள் வதைச் சட்டம் – 1960 இல் திருத்தம் கொண்டு வந்தால் தான் சாத்தியமாகும் என்பதை அறிந்தும் அதை செய்ய பா.ஜ.க. அரசு தயங்குவது ஏன் ? கடந்த இரன்டரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வராதது ஏன் ? சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் பல கடிதங்கள் எழுதியும் பா.ஜ.க. அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர தயாராக இல்லை. 50 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முன்வராதது ஏன் ? தமிழக அரசின் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்த கடிதங்கள் எழுதுவதும், மத்திய அரசு நிர்வாக ரீதியாக அறிவிப்பு வெளியிடுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உதவிகரமாக இல்லை என்பதை இன்றைக்கு தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் தலைமைக்கு மனதளவில் விருப்பம் இல்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் அம்பலமாக்கியுள்ளன. உண்மையிலேயே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென விரும்பினால் அதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்களை மத்திய பா.ஜ.க. அரசு ஏமாற்றியதைப் போல இந்த ஆண்டும் ஏமாற்றியிருக்கிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி மீது பழிபோடுகிற பா.ஜ.க.வினர் தேசிய தலைமையை வலியுறுத்தி அவசரச் சட்டம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அப்படி மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லையெனில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2009 இல் கொண்டு வந்ததைப் போல தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தைப் போல மீண்டும் ஒரு வலிமையான சட்டத்தை கொண்டு வந்து அன்று ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தியதைப் போல மீண்டும் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இத்தகைய முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக அ.தி.மு.க. அரசும் முன்வரவில்லையெனில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு அவர்களே பொறுப்பேற்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

அதேபோல, தமிழர்களின் உணர்வை புண்படுத்துகிற வகையில் பொங்கல் திருநாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு விருப்ப விடுமுறை நாளாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பதாக செய்திகள் வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டில் ஏமாற்றப்பட்டு வருகிற தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை  ரத்து மூலம் மிகப்பெரிய துரோகத்தை மத்திய பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது. எனவே, தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் பொங்கல் விழாவுக்கான விடுமுறையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்கவில்லையெனில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் கொந்தளிப்பான நிலை தமிழகத்தில் உருவாவது தவிர்க்க முடியாது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *