தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017

dsc_0448

கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் கருகிய பயிரை பார்த்தவுடன் தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்தவர்கள்; 139 பேர் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகிறது. ஆனால் வறட்சிப் பகுதிகளை பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்கள் ஒருவர் கூட தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறாத கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை பார்க்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் கொச்சைப்படுத்தாமல், இழிவுபடுத்தாமல் இருந்திருக்கலாம்.

 தற்போது 17 விவசாயிகளின் தற்கொலையை மட்டுமே தமிழக அரசு ஏற்றுக் கொண்டு தலா ரூபாய் 3 லட்சம் வழங்கியுள்ளது. ‘விவசாயிகளின் இந்த தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும்” என்று முதலமைச்சர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததை தாங்கிக் கொள்ளாமல் தற்கொலை, அதிர்ச்சியினால் இறந்த 470 அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்திற்கு எந்த ஆய்வும் செய்யாமல் தலா ரூ.3 லட்;சம் என மொத்தம் ரூபாய் 14 கோடியே 10 லட்சம் வழங்கிய அ.தி.மு.க., தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரண வழங்க தயங்குவது ஏன் ? விவசாயிகளுக்கு மட்டும் ஆய்வு செய்வதாக கூறுவது ஏன் ? இதைவிட அப்பட்டமான பாரபட்சம் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? கட்சிக்காரர்களுக்கு ஒரு நீதி, விவசாயிகளுக்கு ஒரு நீதியா ?

ஆனால் விவசாயிகளின் தற்கொலையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதே அவமானம் என்று அ.தி.மு.க. அரசு நினைப்பதுதான் கொடுமையிலும் கொடுமையாகும். விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு, இதன்மூலம் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்று, நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஆனால் தமிழக அரசு இதைச் செய்ய தயாராக இல்லை. இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியுதவி குறைக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மகசூல் இழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட பிரதமரின் விவசாய காப்பீட்டுத் திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கத்தான் பயன்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனம் தான் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறது. கடந்த 2015-16 இல் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூபாய் 300 கோடி செலுத்தாத நிலையில் 2016-17 இல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காலதாமதமின்றி, இழுத்தடிக்காமல் இழப்பீடு  தர முன்வருமா ?

பல்வேறு நுணுக்கமான காரணங்களை காட்டி விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா? என்கிற சந்தேகம் இன்றைக்கு எழுந்துள்ளது. இதை தனியார் துறைக்கு விடாமல் தமிழக அரசே இழப்பீட்டை வழங்குகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தற்போது ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஒரு மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டால் ஆண்டுக்கு 100 நாள் என்பது தானாகவே 150 நாளாக உயர்த்தப்படும். அந்த வகையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இதுகுறித்து அறிவித்தது ஒன்றும் புதிதல்ல. விவசாயம் பொய்த்துவிட்ட காரணத்தால் தற்கொலை செய்துக் கொண்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல மகசூல் பாதிப்பினால் ஏற்பட்ட இழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இத்தகைய விவசாய விரோதப் போக்கு நீடித்தால் மேலும் விவசாயிகள் தற்கொலையும், அதிர்ச்சி சாவுகளும் தமிழகத்தில் தொடர் கதையாகிவிடும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *