தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12.10.2015

இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்து “குட்டி ஜப்பான்” என்று அழைக்கப்படும் சிவகாசி நகரம் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மீதி நாட்கள் தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட 90 சதவீத உற்பத்தியில் இன்றைக்கு 50 சதவீதம் கூட செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் சீனாவில் உற்பத்தியாகும் தரம் குறைந்த, நச்சுத்தன்மை மிக்க, மிகமிக ஆபத்தான பட்டாசுகள் இந்தியாவில் குவிக்கப்படுவதுதான்.

நடப்பு ஆண்டில் ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும் 285 மெட்ரிக் டன் சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டபோது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்ககம் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் கடந்த 2014-15 ஆண்டு முழுவதும் 104 மெட்ரிக் டன் தான் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தளவுக்கு சட்டவிரோதமாக சீன பட்டாசுகள் இந்தியாவில் இறக்குமதி செய்கிற சூழல் ஏன் ஏற்பட்டது ? மத்திய பா.ஜ.க. அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‘இனி சீன பட்டாசுகள் இந்தியாவில் நுழைவதை அனுமதிக்க மாட்டோம்” என்று பேசியபிறகு சட்டவிரோத பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை என்ன ? இறக்குமதி 104 மெட்ரிக் டன்னிலிருந்து 285 மெட்ரிக் டன்னாக ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும் உயர்ந்ததற்கு யார் காரணம் ? மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, இன்றைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது ஏன் ? இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் காரணம் என குற்றம் சாட்ட விரும்புகிறேன். பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தீபஒளி இருக்க வேண்டிய தீபாவளி திருநாளின் போது இருள் சூழ்ந்த தீபாவளியை கொண்டாட வேண்டிய அவலம் சிவகாசி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலத்திலிருந்து சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தவறுமேயானால் அதற்குரிய பாடத்தை விரைவில் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

TNCC President s Statement - 12.10.2015-page-001


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *