தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.10.2015

Featured1தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு காரணங்களால் தமது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் முடங்கிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கடந்த காலங்களில் விழுப்புரம், தருமபுரி போன்ற நகரங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் குழந்தைகள் பரிதாபமாக இறக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி 50 ஆண்டுகால பாரம்பரியமிக்க செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் செயல்படாத காரணத்தால் ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்த மிகப்பெரிய கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த பரிதாப சாவு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்கள் மூலமாக தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் நடைபெற்ற கொடுமையை மூடி மறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அவர் கூறுவதுபோல குழாய்கள் மூலமாகத் தான் ஆக்சிஜன் செலுத்தப்படுவது உண்மையாக இருந்தாலும், அதுகுறித்து விசாரித்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த குழாயில் ஆக்சிஜன் வராத நிலை ஏற்பட்டு, அதை சரிசெய்வதற்கு பொறியாளர் இல்லாத காரணத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. எந்த காரணம் எதுவாக இருந்தாலும்,  ஒரேநாளில் ஏழு பேர் உயிரை இழந்திருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு.

சென்னைக்கு அருகாமையில் பல மாவட்டங்களுக்கு மையப் பகுதியில், நெடுஞ்சாலைக்கு அருகில் செங்கல்பட்டு பொது மருத்துவமனை இருப்பதால் விபத்துகளில் சிக்குபவர்கள் அங்கு தான் வர வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் முழுநேர மருத்துவ தலைமை அதிகாரி (டீன்)  இதுவரை நியமிக்கப்படாமல் பொறுப்பாளர்கள் தான் நிர்வாகம் செய்து வருகிறார்கள். அதேபோல தலைக்காயம் உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சைகளுக்கு நரம்பியல்துறை மிகமிக அவசியமாகும். ஆனால் அந்த மருத்துவமனையில் நரம்பியல் துறையே இல்லாத அவலநிலை இருந்து வருகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டுமென்று விதிகள் கூறுகின்றன. ஆனால் அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளோ, போதிய செவிலியர்களோ, மருத்துவர்களோ, பணியாளர்களோ இல்லாமல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அல்லல்படுகிற அவலம் செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் நீடிக்கிறது. செங்கல்பட்டு பொது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் ஏழு பேர் உயிரிழந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13.10.2015

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *