முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற முயற்சி தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 14.12.2015

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 1131 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த கடும் மழை காரணமாக நவம்பர் 17 ஆம் தேதி 18,000 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டது. நவம்பர் 23-க்குப் பிறகு 29 ஆம் தேதி வரை 1 சொட்டு மழை கூட பெய்யவில்லை.  இக்காலத்தில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ? தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை மையங்கள் அறிவித்துக் கொண்டிருந்த நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. அன்று மட்டும் 306 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாக தலைமைச் செயலாளர் அறிக்கையில் கூறியிருக்கிறார். இதைவிட முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற முயற்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், காவல்துறையினர் ஆகியோர் வெள்ள அபாயம் அறிவிப்பு விடுத்ததாக தமிழக அரசு கூறுகிறது. இந்த அறிவிப்புகள் முழுமையான மின்வெட்டு காரணமாக மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பதை தமிழக அரசுக்கு தெரியுமா ? இதைத் தவிர மெகாபோன் மூலமாக அதிகாரிகள் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புகளை பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் கேட்டிருந்தால் இத்தகைய உயிர், உடமை இழப்புகளுக்கு ஆளாகியிருப்பார்களா ? எந்த அறிவிப்பும் அவர்களுக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால்தான் இத்தகைய வரலாறு காணாத இழப்புகளுக்கு உட்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதை மூடிமறைக்கவே ஜெயலலிதா அரசு தலைமைச் செயலாளர் மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 10,000 கனஅடி நீரில் தொடங்கி படிப்படியாக மாலை 6 மணிக்கு 29,000 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தலைமைச் செயலாளர் கூறுகிறார். அன்று ஒரே நேரத்தில் 30,000 கனஅடி நீர் இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியிருக்கிறார். இதில் எவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது ? செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு டிசம்பர் 1 அன்று இரவு 9 மணிக்கு 23.40 அடி இருந்ததாகவும், இது 24 அடியாக உயர்ந்து முழு கொள்ளவை அடைந்தால்தான் தண்ணீரை திறக்க வேண்டுமென்று வெள்ளக் கட்டுப்பாடு விதிகள் கூறுவதாக தலைமைச் செயலாளர் கூறுகிறார். 23.40 அடிக்கும், 24 அடிக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்பதை தலைமைச் செயலாளர் அறியாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29,000 கனஅடி நீரை திறக்கும் போது காஞ்சீபுரம், திருவள்;ர் மாவட்ட ஏரிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக 70,000 கனஅடி நீரும் அடையாறுக்குத் தான் வர வேண்டும் என்பது தமிழக அரசுக்கு தெரியாதா ? இவை அனைத்தும் ஏறத்தாழ 1 லட்சம் கனஅடி நீராக சேர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி அடையாற்றில் வெள்ளம் எடுத்த காரணத்தால்தான் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாக்கப்பட்டார்கள் என்பது குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கையில் விளக்கமாக குறிப்பிடாததைவிட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

மத்திய காங்கிரஸ் அரசு 2005 இல் நிறைவேற்றிய தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைக்கப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதிக்கு முன்பு ஒருமுறை கூட கூடி விவாதிக்கப்படவில்லை. பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு அதை தடுக்கிற வகையில்தான் ஒரு அரசு செயல்பட வேண்டுமேதவிர, பேரிடர் நிகழ்ந்த பிறகு நிவாரண உதவி செய்வது என்பது உண்மையான பேரிடர் மேலாண்மையாக இருக்க முடியாது. நிவாரண உதவிகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிச்சை போடுவதைப் போல எதையாவது போட்டு அனைத்தையும் மறைத்துவிடலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். இந்த கனவு இம்முறை பலிக்காது என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் கோபமே சாட்சியாகும்.

கடந்தகாலத்தில் 2004 சுனாமி, 2011 தானே புயல் போன்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதா அரசு செயல்படாத காரணத்தால் தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மக்கள் இழந்துள்ளார்கள். அரசுக்கு இழப்பு என்பதைவிட, இந்த வெள்ளப் பெருக்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். இது மக்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு இழைத்த மிகப்பெரிய குற்றமாகும். இந்த குற்றத்தைச் செய்தவர்கள் நீதி விசாரணை முன்பாக தண்டிக்கப்பட வேண்டும். அத்தகைய தண்டனை பெறுவதிலிருந்து தற்காலிகமாக அவர்கள் தப்பித்துக் கொண்டாலும் 2016 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழும் போது குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *