தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.10.2016

மத்திய பா.ஜ.க. அரசின் தலைமை வழக்கறிஞர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றம் மற்றும் அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மறுபடியும் வலியுறுத்தி கூறியதன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை முடக்குவதன் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இதன்மூலம் நரேந்திர மோடி அரசு செயல்படுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
பன்மாநில நீர்த் தகராறு சட்டத்தின்படி இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு திட்டங்களை வகுக்க காவிரி நடுவர்மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இதற்காக நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய பொறுப்பு சட்டப்படி மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது. இதை தட்டிக் கழிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டவிதி 262 இன்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை சீர்குலைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மார்ச் 2013 ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியால் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மத்தியில் ஆட்சியமைந்த பா.ஜ.க. அரசு பன்மாநில நீர்த்தகராறு சட்டத்தின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கடந்த 28 மாதங்களாக காலதாமதம் செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது. உச்சநீதிமன்ற வழக்கைக் காட்டி தமிழகத்தை ஏமாற்றி வந்த நரேந்திர மோடி அரசு, அதே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஆணையிட்ட போது, அதை செயல்படுத்துவதாக தலைமை வழக்கறிஞர் முதலில் உறுதிமொழி கூறினார். பிறகு அக்டோபர் 1 ஆம் தேதியன்று தலைமை வழக்கறிஞர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி கூறுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி தமது நிலையை மாற்றிக் கொண்டார்.
பன்மாநில நீர்த்தகராறு சட்டத்தின்படி ‘காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இணையானது; இதன்மீது மேல்முறையீடு செய்ய முடியாது; இதை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு கூட அதிகாரம் கிடையாது” என தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட அணுகுமுறையின் மூலம் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தில் காவிரி பிரச்சினையில் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது. இந்த அநீதியை துடைத்தெறிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டெழுந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். நேற்றும், இன்றும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிற ரயில் மறியல் போராட்டத்தில் தமிழகமே திரண்டெழுந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. இத்தகைய எதிர்ப்புகளுக்குப் பிறகும் மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்ற ஆணையின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றுச் சொன்னால் அதனால் ஏற்படுகிற கொந்தளிப்பான சூழலுக்கு நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையிலான நிபுணர் குழு அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள காவிரி பாசனப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிபுணர் குழு கள நிலவரத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையை வெளியிடாமல் கண்துடைப்பு நாடகம் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தமிழகத்தையும், கர்நாடகத்தையும் சமநிலைத் தன்மையில் வைத்துப் பார்ப்பது மிகமிக தவறான அணுகுமுறையாகும்.
தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதியில் மொத்தம் சாகுபடி செய்ய வேண்டிய 14.93 லட்சம் ஏக்கரில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்வதற்கு காவிரி நீரை நம்பியிருக்கிறோம். இதில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பின்னிப் பிணைந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையின் காரணமாக தற்போது ஒரே சம்பா சாகுபடி என்கிற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஓராண்டில் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. நீரில் கடந்த செப்டம்பர் வரை 58.34 டி.எம்.சி. நீர் தான் தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் நமக்கு சேர வேண்டிய 134 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டால் தான் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிரை காப்பாற்ற முடியும். எனவே, இதுவரை உச்சநீதிமன்ற ஆணையின் மூலமாகத் தான் தமிழகத்திற்கு நியாயம் கிடைத்து வருகிறது. அதேபோல, தற்போது நிபுணர்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உள்ள பாரபட்ச நிலையை உணர்ந்து தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் நீதி வழங்கும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. எனவே, பக்ரா பீஸ் நதி மேலாண்மை வாரியத்தை எப்படி மத்திய அரசு அமைத்ததோ, அதைப்போல காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலமே காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *