தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.11.2016

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் டெல்டா பகுதியில் விவசாயம் செய்த பயிர்கள் கருகிய நிலையினால் ஏற்பட்ட இழப்பு காரணமாக இதுவரை 9 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலிறுத்தப்பட்டு வந்தது. ஏனெனில் அந்தப் பகுதியில் மஞ்சள், கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதால் இக்கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை முறையிடப்பட்டது. ஆனால் காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறக்காத காரணத்தால் மஞ்சள் பயிர் கருகியதால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்துக் கொண்டார்.
ஏற்கனவே நடைபெற்ற தற்கொலையின் ஈரம் காய்வதற்குள்ளாக இன்று குப்புசாமி என்ற விவசாயி தாம் பயிரிட்ட மஞ்சள் பயிர் கருகியதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துக் கொண்ட கோரச் சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கியிருக்கிறது. இவருக்கு விவசாயக் கடன் ரூ.4 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஏற்பட்ட பிறகு விவசாயிகளும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களும் தற்கொலை செய்துக் கொண்டவரின் சடலத்தை காவல்துறையினர் எடுத்துச் செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பாக உட்கார்ந்து மறியல் செய்து வருகின்றனர். அவர்களது கோரிக்கையின்படி உடனடியாக காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும், தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அமைச்சரவை தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டுமென்று திசைத்திருப்புகிற வகையில் தட்டிக்கழித்து பதில் கூறியிருக்கிறார்.
எனவே, தமிழக விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் தற்கொலைகளை மூடிமறைக்கிற முயற்சியில் தமிழக அரசு ஈடுபடாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடாக ரூ.15 லட்சம் வழங்குவதோடு காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விவசாயிகளின் பயிரை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்து, இத்தகைய தற்கொலைகளை தடுத்து நிறுத்த மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *