img_00601தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (20.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியவை :
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்
அன்னை சோனியா காந்தி அவர்களின் கனவுத் திட்டமான உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் தவிர அனைத்து மாநிலங்களும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின்படி நாட்டிலுள்ள 120 கோடி மக்களின் 81 கோடி மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.3, ஒரு கிலோ கோதுமை ரூ.2, ஒரு கிலோ பருப்பு வகைகள் ரூ.1 என்கிற அளவில் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி ரூபாய் ஒதுக்கியது.
நாடு முழுவதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. தற்போது மத்திய பா.ஜ.க. அரசு வறுமைக் கோட்டிற்கே மேலே வாழ்கிற மக்களுக்காக தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் 1 லட்சத்து 26 ஆயிரம் டன் அரிசி ரூ.8.30 விலையில் வழங்கி வந்தது. இதை தற்போது மத்திய அரசு ரூ.22.53 என உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் நிறைவேற்றாததுதான் என்று மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. அதேபோல, தமிழக அரசுக்கு கூடுதலாக 24 ஆயிரம் டன் அரிசி மாதந்தோறும் வழங்கி வந்தது. இதற்கும் கூடுதல் விலை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.2,100 கோடி இழப்பு ஏற்படுகிறது.
எனவே, நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி ரூ.2100 கோடி இழப்பீட்டை தவிர்த்து, அதனுடைய பலன்களை பெறுவதற்கு தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
மண்ணெண்ணெய் விலை உயர்வு
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வருகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 டாலரில் இருந்து 40 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசின் கஜானாவை பா.ஜ.க. அரசு நிரப்பி வருகிறது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் மாதந்தோறும் 2016 ஜூலை முதல் 2017 ஏப்ரல் வரை 10 மாதங்களுக்கு உயர்த்துவதென பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2013-14 இல் மண்ணெண்ணெய் மானியம் ரூபாய் 30 ஆயிரத்து 574 வழங்கி வந்தது. அது 2015-16 இல் ரூபாய் 11 ஆயிரத்து 496 என குறைக்கப்பட்டுள்ளது. மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாக ரூபாய் 8 லட்சத்து 33 ஆயிரத்து 482 கோடி வழங்கி மக்களின் சுமையை குறைத்தது. ஆனால் பா.ஜ.க. அரசு ஏழைஎளிய மக்கள் சமையலுக்கு எரிபொருளாக பயன்படுத்துகிற மண்ணெண்ணெய்க்கு மானியம் கொடுப்பதைக் கூட குறைத்து வருகிறது. இதைவிட ஏழைஎளிய மக்களுக்கு எதிரான கடுமையான தாக்குதல் வேறு எதுவும் இருக்க முடியாது.
சீனப் பட்டாசுகளின் படையெடுப்பு
தீபாவளி பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் பட்டாசு சந்தையின் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடி. இதில் 90 சதவீதம் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 850 தொழிற்சாலைகளில் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும், நேரிடையாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் கண்டெய்னர்களில் ரூ.1500 கோடி மதிப்புள்ள சீனப் பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய பா.ஜ.க. அரசு பட்டாசு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்காமல் கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் (Restricted List) வைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு விளையாட்டு பொம்மைகள், மின்னணு சாதனங்கள் என்ற பெயரில் சீனப் பட்டாசுகள் நமது துறைமுகங்கள் மூலமாக இறக்குமதி செய்கின்றன. இந்த பட்டாசுகளின் விலை மிக குறைவாக இருப்பதால் சிவகாசி பட்டாசு விற்பனை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. வேதியப் பொருட்கள் கலக்கப்பட்ட சீனப் பட்டாசுகள் மிகவும் ஆபத்தானதாகும். எனவே, சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.
காவிரி பிரச்சினை
தமிழக மக்களுக்கு காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய துரோகம் செய்து, வஞ்சித்து விட்டது என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி மூலமாக கூறியிருக்கிறார். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசு ஆணையிட்டது. அப்போது தலைமை வழக்கறிஞர் மேல் நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறைக்கு இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கடிதம் மூலமாக கூறியிருந்தார்.
மத்திய நீர்வளத்துறையும் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி மேலாண்மை வாரியத்திற்கு அக்டோபர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பெயர்களை பரிந்துரை செய்யும்படி கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. கர்நாடகத்தை தவிர அனைத்து மாநில அரசுகளும் பெயர்களை பரிந்துரை செய்தது.
ஆனால் அக்டோபர் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரம் இருக்கிறது என்று திடீரென தனது நிலையை ஏன் மாற்றிக் கொண்டார் என்பதற்கு அருமை நண்பர் பொன் ராதாகிருஷ்ணன் தான் தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
காவிரி நடுவர்மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை 1992, 2013 ஆம் ஆண்டுகளில் அரசிதழில் வெளியிட்டது மத்திய காங்கிரஸ் ஆட்சி தான் என்பதை பா.ஜ.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் நியாயத்திற்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்தது காங்கிரஸ் ஆட்சிதான். இதை பா.ஜ.க. உள்ளிட்ட எவராலும் மறுக்க முடியாது.
மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை கடந்த 28 மாதங்களாக தெரியாத ஒன்றை இப்போது திடீரென தெரிந்ததற்கு என்ன காரணம் ? இந்த நிலை மாற்றத்திற்கு பின்னணி என்ன ? வருகிற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்காகத் தான் இத்தகைய அணுகுமுறையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டது என்பதற்கு இதைவிட உறுதியான சான்று வேறு இருக்க முடியாது.
இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்று கூறுகிற மத்திய பா.ஜ.க. அரசு, நர்மதா மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் எப்படி அமைத்தது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என பன்மாநில நீர்த்தகராறு சட்டம் தெளிவாக கூறிவிட்ட நிலையில் அதனுடைய பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை அமைக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து துரோகம் செய்ததை எதிர்த்து தமிழக மக்கள் கொதித்தெழுந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் மீது ஆத்திரம் பொங்க ஆவேசமாக கருத்துக்களை வெளியிடுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
செய்தி
தஞ்சை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி. சித்ரா சுவாமிநாதன் அவர்களின் கணவர் திரு. சுவாமிநாதன் திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கி, மேலும் அவரது மகளின் கல்வி செலவு முழுவதையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் எனக் கூறி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மறைந்த அந்தநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. கந்தசாமி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. செல்வராஜ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் திரு. பாரி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எல். அடைக்கலராஜ் அறக்கட்டளை சார்பாக தலா ரூ.1 லட்சம் நிதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்ட நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த நிதி வழங்கப்பட்டது.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *