தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 21.10.2016

thirunavukkarasar_11641eஇந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் நான்காவது இடத்திலிருந்த தமிழகம் மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவு காரணமாக இன்றைக்கு கரும்பு விவசாயமே அழிந்து விடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011-12 இல் 3.35 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்த நிலையிலிருந்து 2014-15 இல் 2.2 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு குறைந்துவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையும் உரிய விலைக்கு விற்க முடியாமல் கிடங்குகளில் கேட்பாரற்று தேங்கிக் கிடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள கரும்பு ஆலைகள் மாநில அரசின் பரிந்துரை விலையை கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்காததால் ரூ.1200 கோடி நிலுவையில் உள்ளது. இத்தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தர விவசாய சங்கங்கள் பலமுறை மாநில அரசிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் ஏற்படவில்லை. கரும்புக்கு பரிந்துரை விலையை அறிவிக்கிற தமிழக அரசு அதை விவசாயிகளுக்கு பெற்றுத் தராமல் அலட்சியமாக இருப்பது ஏன் ?
1966 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கரும்பு கட்டுப்பாடு ஆணையின்படி கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் செய்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாக தொகையை செலுத்த வேண்டுமென தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையை அலட்சியம் செய்கிற வகையில் கடந்த மூன்று வருடங்களாக கரும்பு நிலுவைத் தொகையை செலுத்த எந்த நடவடிக்கையும் கரும்பு ஆலைகளும் எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தராத கரும்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்குவது ஏன் ?
கரும்பு பருவத்திற்கான நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு ரூ.100 உட்பட ரூ.550 உயர்த்தி ஆக மொத்தம் ரூ.2850 கிடைக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த விலை யானைப் பசிக்கு சோளப் பொறியை போடுவது போல் அமைந்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரி வருகிறார்கள். கரும்பு விவசாயிகளின் அடிப்படை பிரச்சினையை மத்திய – மாநில அரசுகள் புரிந்து கொள்ளாததால் நாடு முழுவதும் கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை கரும்பு ஆலை கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்ற நிலையில் தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு குடும்ப அட்டைகள் வாயிலாக வழங்குவதற்கு சர்க்கரை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் மூலம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நிலுவையில் இருக்கிற தொகையை கரும்பு ஆலைகள் வழங்குவதற்கு உரிய சூழலை உருவாக்க முடியும். இதை தமிழக அரசு செய்யாமல் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
எனவே, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கிற சர்க்கரையை பொது விநியோக திட்டத்தில் வழங்க தமிழக அரசு கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். அதேபோல எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் சர்க்கரை மீது தமிழகத்தில் 5 சதவீத மதிப்பு கூட்டுவரி விதிக்கப்படுவதால் ஒரு டன் சர்க்கரை விலையில் ரூ.1,200 சுமையை தாங்க வேண்டியுள்ளது. இதை ரத்து செய்வதன் மூலம் சர்க்கரை விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.
எனவே, கரும்பு விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரூ.1200 கோடியை 15 சதவீத வட்டியுடன் உடனடியாக செலுத்துவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கரும்பு ஆலை நிர்வாகத்தையும், விவசாயிகளையும் அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திலுள்ள கரும்பு விவசாயிகளின் நலனை காப்பாற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *