தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 23.10.2015

Better-Kartiஇந்தியாவிலேயே நூலகத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் புகழ் பெறுவதற்கு காரணமாக இருந்த நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்கள் முயற்சியால்தான் தமிழ்நாடு நூலகச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் தற்போது 10 சதவீதம் நூலக வரியாக வசூலிக்கப்பட்டு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வருமானம் ரூ.120 கோடி. இத்தொகையை பயன்படுத்தி மகத்தான சாதனைகளை நிகழ்த்திய தமிழகம் இன்று ஊழலில் ஊறித் திளைக்கும் துறையாக மாறியிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நூலக வரியாக ரூ.500 கோடி வசூலிக்கப்பட்டும், பொது நூலகத் துறை மேம்பாட்டிற்காக என்ன செய்தார்கள் என்று பார்க்கிறபோது ரத்தக் கண்ணீர் வடிக்க தோன்றுகிறது. 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், 2013 ஆம் ஆண்டு அரசாணைப்படியும் பொது நூலகத் துறை இயக்குநர் நியமனத்திற்கு சட்டப்படி எந்த ஏற்பாடும் செய்யாத பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி. சபீதா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும். குறிப்பாக நூலகத்துறையை சார்ந்தவர்கள்தான் நூலகத்துறை இயக்குநராக வர வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக நூலகத்துறை இயக்குநராக கல்வித்துறையைச் சார்ந்தவர்களை நியமித்து நூலகத்துறையை படுகுழியில் தள்ளி வருகிறார்கள்.

கடந்த 2013 இல் தமிழ்நாட்டில் உள்ள 4,531 கிளை நூலகங்களுக்காக ரூ.68 கோடிக்கு பதிப்பாளர்களிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டு, நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதற்கு 10 முதல் 25 சதவீதம் வரை இடைத் தரகர்கள் மூலம் கமிஷன் பெறப்பட்டுள்ளதாக நூலகத்துறை வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றன. பதிப்பாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நூல்களுக்கு ரூ.36 கோடி பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகை பாக்கி வைத்திருப்பதால் பதிப்பாளர்கள் படுகிற வேதனைக்கு அளவே கிடையாது. அதேபோல மத்திய அரசின் நூலக நிதி ரூ.12 கோடியை பயன்படுத்துவதற்கு கூட வக்கற்ற நிலையில் தமிழக நூலகத்துறை இருப்பதைவிட மோசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

உலகங்களில் உள்ள நூலகங்களுக்கு இணையாக அமைக்கப்பட்ட அண்ணா நூலகத்தில் நிர்வாகம் சரியில்லை என்று உயர்நீதிமன்றமே தலையிடுகிற அவலநிலை ஏற்பட்டதை அனைவரும் அறிவர். அங்கே கட்டப்பட்ட 4 அரங்கங்களும், உணவு விடுதியும் கடந்த நான்கு ஆண்டுகளாக வாடகைக்கு விடப்படாத காரணத்தால் ஏறக்குறைய ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் அ.தி.மு.க. ஆட்சி விளங்குகிற காரணத்தால் இன்று நூலகத்துறை படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் நூலகர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை ? தமிழகத்தில் உள்ள நூலகங்கள் சரியாக செயல்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள ஏழைஎளிய மக்கள் நூலகத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கமா ? நமது மாநிலத்தின் புகழ்மிக்க கன்னிமாரா நூலகத்தின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை என்றைக்காவது ஒருநாள் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்திருப்பாரா ? அங்கே 75 பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளதற்கு என்ன காரணம் என்பதை விளக்குவாரா ? அறிவை பெருக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கன்னிமாரா நூலகம் பகல் நேரங்களில் சமூகவிரோதிகள் ஓய்வு எடுக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறதே, உண்மையா ?

கன்னிமாரா நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட நிரந்தர நூல் விற்பனை நிலையம் பராமரிக்கப்படாமல் செயலற்று முடக்கப்பட்டதால், நூல்கள் விற்பனை குறைந்ததை தடுக்க நூலகத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிட தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று சொன்ன ஜெயலலிதா, அன்று முதன்மை நிலையிலிருந்த தமிழக நூலகத்துறை  இன்று படுகுழியில் விழுந்து கிடக்கிறதே, அதுதான் உங்களது ஆட்சியின் சாதனையா ? குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுக்கும் ஜெயலலிதா இதற்கு பதில் கூறுவாரா ? மலையிலிருந்து இறங்கி வந்து நடவடிக்கை எடுக்க முன் வருவாரா ?

TNCC President s Statement - 23.10.2015-page-001 - CopyTNCC President s Statement - 23.10.2015-page-002 - Copy


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *