தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 23.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 23.12.2016

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று (23.12.2016) நடைபெறும் திறப்பு விழாவில் 100 பேருக்கு மேல் பங்கு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய – இலங்கை அரசுகள் 1974, 1976 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு விரோதமானதாகும். இந்த ஒப்பந்தங்களின்படி, ‘இதுவரையில் இருந்து வருவது போல் இந்திய மீனவர்களும், யாத்திரிகர்களும் கச்சத்தீவுக்கு வந்து செல்வதற்கான வசதியை அனுபவிப்பார்கள். இந்த நோக்கங்களுக்காக இலங்கை அரசிடம் பயண ஆவணங்களோ, விசாவோ பெறத் தேவையில்லை” என்று தெளிவாக உறுதி கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழக மீனவர்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக கச்சத்தீவுக்கு செல்லலாம், ஓய்வெடுக்கலாம், மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கு கொள்ளலாம். கடந்த ஆண்டுகளில் நடந்த விழாக்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பங்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசு விதித்துள்ள தடையை மத்திய – மாநில அரசுகள் எப்படி ஏற்றுக் கொண்டன ? இது நமது உரிமையை விட்டுக் கொடுக்கும் செயலாகத்தான் இருக்க முடியும்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்களும், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம் பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது விசைப்படகுகளும், மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, மீனவர்கள் கைது செய்யப்பட்டு 120-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்கரைகளில் கேட்பாரற்று மக்கிக் கிடக்கின்றன. இவற்றை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்திய – இலங்கை அமைச்சர்கள், தமிழக அமைச்சர், தமிழக மீனவர்கள், ஏற்கனவே நான்குமுறை பேச்சுவார்த்தை நடத்தி எந்தப் பலனும் ஏற்படாத நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 2 ஆம் தேதி கொழும்புவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. கொழும்புவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதோடு, பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் உடனடியாக மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்காமல் தமிழக மீனவர்களை சிறையில் அடைத்துவிட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துவது கேலிக்குரியதாகும். எனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *