தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவைகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை : 

img_01641

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய பாக்கி 
கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அன்னை சோனியா காந்தியின் ஆலோசனையின் பேரில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் 2005 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதுதான் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம். கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு திட்டத்தை முடக்குகிற வேலையை செய்து வந்தது. ஆனால் மக்களிடம் பேராதரவு இருந்த காரணத்தால் இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலை நரேந்திர மோடி ஆட்சிக்கு ஏற்பட்டது. ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடுகளை படிப்படியாக குறைக்கிற முயற்சியிலும் பா.ஜ.க. ஆட்சி ஈடுபட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டு தொழிலாளர்களின் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வகுத்த கொள்கையின்படி நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன்படி ஏற்கனவே இருந்த ரூ.183 என்கிற ஊதியம் தற்போது ரூ.203 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இத்திட்டத்தின்கீழ் 2015-16 ஆம் ஆண்டில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.12 ஆயிரம் கோடியில் ரூ.7,983 கோடி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கியும் அடங்கும். இதனால் கடந்த ஓராண்டு காலமாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. வேலை செய்த ஏழு நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. காலதாமதத்தினால் கிராமப்புற தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊதிய பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும்.
  1. காவிரி பிரச்சினை
1991 இல் அமைக்கப்பட்ட நடுவர்மன்றம் 1992 இல் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. 2007 இல் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு தீர்ப்புகளையும் அரசிதழில் வெளியிட்டு சட்டப்பாதுகாப்பு வழங்கியது மத்திய காங்கிரஸ் ஆட்சிதான் என்பதை பா.ஜ.க.வின் தலைவர்களும், அமைச்சர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மே 2007 இல் இறுதித் தீர்ப்பு வந்ததும் நான்கு மாநில அரசுகளும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (ளுடுP) சமர்ப்பித்தது. இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதே உச்சநீதிமன்றம் மார்ச் 2013 இல் அரசிதழில் வெளியிட வேண்டுமென்று ஆணையிட்ட போது அதை ஏற்றுக் கொண்டு மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்பதை பா.ஜ.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும். 2013க்குப் பிறகு 2014 இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு 28 மாதங்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் ?
ஆனால் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்ட போது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மத்தி;ய பா.ஜ்க. அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதிமொழி கூறினார். அதன்படி மத்திய நீர்வளத் துறைக்கு கடிதமும் எழுதினார். மத்திய நீர்வளத்துறையும் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி, மேலாண்மை வாரியத்திற்குரிய பிரதிநிதிகளின் பெயர்களை அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பரிந்துரை செய்யும்படி அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அக்டோபர் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் தாம் தவறு செய்துவிட்டதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி ஆணையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரமிருக்கிறது என்று கூறியது ஏன் ? ஏன் இந்த தடுமாற்றம் ? தடுமாற்றத்தின் பின்னணி என்ன ? பா.ஜக.வினர் விளக்கம் கூறுவார்களா ?
நர்மதா மேலாண்மை வாரியத்தை அமைத்தபோது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டதா ? அப்போது பெறப்படாத ஒப்புதல் இப்போது பெற வேண்டும் என்று கூறுவது ஏன் ?
நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அரசியல் ஆதாயத்தோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நரேந்திர மோடி அரசு மறுத்தது இன்றைக்கு வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழகத்திற்கு நரேந்திர மோடி அரசு செய்த பச்சை துரோகத்தை மூடிமறைக்க பா.ஜ.க.வினர் முயன்றாலும் அதை மூடிமறைக்க முடியாது. தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
  1. அனைத்து கட்சிக் கூட்டம்
காவிரி பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு. மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு நானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, விவசாய பிரிவு தலைவர் திரு. எஸ். பவன்குமார் ஆகியோரும் கலந்து கொள்கிறோம்.
தமிழகம் சம்மந்தப்பட்ட பொது பிரச்சினைகளில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவது ஒரு நல்ல முயற்சியாகும். இதை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
  1. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து நான் கூறிய சில கருத்துக்கள் அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாக பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர். கடந்த காலங்களில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இதே அப்போலோ மருத்துவமனையில் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். அதேபோல, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கார் விபத்தில் காயமடைந்து சென்னை தேவகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது ராஜீவ்காந்தி அவர்கள் நேரில் வருகை புரிந்து நலம் விசாரித்தார். இந்த அடிப்படையில் இன்றைய பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரித்து தமிழக பா.ஜ.க.வினர் கூடுதல் அரசியல் நன்மை தேடலாமே ? ஏன் செய்யவில்லை ?
  1. அனைத்து கட்சிக் கூட்டம் குறித்து மக்கள் நலக் கூட்டணியின் விமர்சனம்
மக்கள் நலக் கூட்டணியினர் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக திரு. வைகோ கூறியிருக்கிறார். காவிரி போன்ற பிரச்சினைகளில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் ஒவ்வொரு கட்சியும் முடிவெடுக்க உரிமையிருக்கிறது. ஆனால் இதற்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்டுகிற நோக்கத்தை விமர்சிப்பதை தவிர்க்கலாம்.
  1. சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர்கள்
நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதே வேட்பாளர்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நிறுத்தியிருப்பது குறித்து எந்த தவறும் இல்லை. ஏனெனில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யும் போது எவர்மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை கூறி வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை.
  1. இலங்கையில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை
இலங்கையில் தமிழ் மாணவர்கள் சுட்டு கொன்றது குறித்து வன்மையாக கண்டிக்கிறேன். வடக்கு மாகாணத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இன்றைக்கும் நீடிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு கட்டிய வீடுகளில் இன்னும் தமிழர்கள் குடியமர்த்தாமல் இருப்பது குறித்து மத்திய பா.ஜ.க. அரசு இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *