தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.12.2016

img_9021aதிருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் உள்ள 14 லட்சம் ஹெக்டேரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வந்தனர். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தண்ணீரை பெற்று தரவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு தவறியதன் காரணமாக காவிரி டெல்டா பகுதியில் பயிரிட்ட சம்பா சாகுபடி பயிர்கள் முழுமையும் கருகி மிகப்பெரிய பாதிப்புக்கு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ளனர். தாங்கள் பயிரிட்ட சம்பா பயிர்கள் தங்கள் கண் முன்னாலேயே கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமல் நேற்று ஒரே நாளில் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருக்கின்றனர். இதனால் காவிரி டெல்டா மாவட்டமே சோக வெள்ளத்தில் ஆழந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியில் நீர் வராததால் குறுவை சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் தனியாரிடமும் கடன் வாங்கி முதலீடு செய்து எந்த பலனும் ஏற்படாமல் பயிர்கள் கருகியதை பார்த்து மன உலைச்சலால் கடந்த 2 மாதங்களில் 45 விவசாயிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி 2014ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 68 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்கு காவல் துறையினர் வழக்கை பதிவு செய்யும்போது வயிற்று வலி, தலைவலி காரணமாக இறந்துவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தவறாக கூறி தப்பிக்க முயல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகை கிடைக்காமல் போய் விடுகிறது.

தாங்கள் பயிரிட்ட நெல் பயிருக்கு தெளிக்க வேண்டிய பூச்சி மருந்தையே அருந்தி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. சோழ மண்டலம் சோறுடைத்தது என்ற பெருமையை இழந்து இன்றைக்கு சோழ மண்டலம் தற்கொலை மண்டலமாக மாறி வருகிறது. விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தயராக இல்லை. கடந்த 3 மாதங்களாக தமிழக அரசே செயல்படாமல் முடங்கி இருக்கிற காரணத்தினாலே தற்கொலை சாவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை தற்கொலை செய்துக் கொண்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி தமிழக அரசு அளிக்க வேண்டும். சாகுபடி செய்த பயிர் கருகியதனால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுகட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலமாக தொடர்ந்து வேலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரை பெறமுடியாத நிலையில் வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்ட காரணத்தால் தமிழகமே வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை 168.4 மில்லிமீட்டர் மழைதான் பெய்து இருக்கிறது. சராசரியாக பெய்ய வேண்டிய 441 மில்லிமீட்டருக்கு பதிலாக 62 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டு வரலாறு காணத வறட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வறட்சியின் பிடியிலிருந்து மீட்க தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண நடவடிக்களை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசிடம் கணிசமான நிதியை பெற தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கும் போது தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் அரசுடைமையாக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் மஹிந்த அமர வீர அளித்துள்ள பேட்டி தமிழக மீனவர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை விடுவிக்கிற இலங்கை அரசு, மீனவர்களுக்கு சொந்தமான 121 படகுகளை அரசுடைமை ஆக்குவோம் என்று இலங்கை அமைச்சர் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிற பா.ஜ.க ஆட்சியை இலங்கை அரசு அலட்சிய போக்குடன் கருதுவதால்தான் இத்தகைய ஆணவ அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 122 படகுகளையும் உடனடியாக விடுவிக்கபடுவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்;ள வேண்டும். வருகிற ஜனவரி 2ஆம் நாளில் கொழும்பு நகரில் இந்தியா – இலங்கை அரசுகளுக்கிடையே நடைபெறும் மீனவர் சம்மந்தமான பேச்சு வார்த்தைக்கு முன்பாக இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு இலங்கை அமைச்சருக்கு எப்படி துணிச்சல் வந்தது என்பதை அறிய விரும்புகிறோம். இந்த அறிவிப்பின் மூலமாக மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை அரசிற்கு கடுகளவும் அக்கறை இல்லையோ என்கிற சந்தேகம் தான் ஏற்படுகிறது. இச்சூழலில் நடைபெறும் பேச்சு வார்த்ததையில் தமிழக மீனவர்களின் உரிமைகளை காப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்களை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டதாக கூறப்படுகிற 122 படகுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படி படகுகளை திரும்ப பெற முடியவில்லையெனில் இதற்குரிய இழப்பீட்டு தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *