857589_467075923479538_8933334950165864154_oதீர்மானம்: 1 : இரங்கல் தீர்மானம்

தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பை பெற்றவருமான விழுப்புரம் வி.ஜி.செல்லப்பா, மாணவப் பருவத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடோடு பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விருதுநகர் ஆர்.சொக்கர் ஆகியோரின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தங்கள் உயிரை இழந்த  600 க்கும் மேற்பட்டவர்களின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 2 : செயல்படாத ஜெயலலிதா அரசு

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவதற்கு ஒரு நாளில் 18 மணி நேரம் உழைப்பேன் என்று பிரச்சாரம் செய்து ஆட்சி அமைத்த ஜெயலலிதா, இன்றைக்கு 1 மணி நேரம் கூட தலைமை செயலகத்தில் பணியாற்றாத ஒரு அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முதலமைச்சரை, அமைச்சர்கள் சந்திக்க முடியவில்லை. அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுவதில்லை. சட்டமன்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் ஊடகங்களின் மூலமாகத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருவதே ஒரு செய்தியாக ஆக்கப்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் எல்லாம் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக, தம்மை தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களைக் கூட நேருக்கு நேராக சந்திக்க தயாராக இல்லாத ஒரு முதலமைச்சரை வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் பெற்றிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து, துயர் துடைக்க முன்வராத ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் வானத்திலிருந்து மக்களின் துயரத்தை பார்க்கிற ஆணவப்போக்கை கடைபிடிப்பது அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.

சமீபத்தில், திருவான்மியூரில் நடந்த அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்காக ஜெயலலிதா பயணம் செய்கிற சாலைகள் இரவோடு இரவாக புதிதாக அமைக்கப்பட்டது. அன்று ஜெயலலிதாவின் பயணத்திற்காக போக்குவரத்து 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட போது, வாகன நெரிசலில் மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. போயஸ் தோட்டத்திலிருந்து சாலை ஓரங்களில், நடைபாதைகளில் தொடர்ச்சியாக டிஜிட்டல் பேனர்களை சட்ட விரோதமாக அடுக்கி வைத்ததைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிற ஒரு முதலமைச்சரை பெற்றதற்காக பொதுமக்கள் வெட்கமும், வேதனையும் பட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 3000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் தீர்மானங்கள் பெயரளவில் விவாதமில்லாமல் நிறைவேற்றப்பட்டு ஜெயலலிதாவின் உரைக்குப் பிறகு, மொத்தம் 70 நிமிடங்களில் பொதுக்குழு முடிந்து போனதை விட ஒரு கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.

அ.தி.மு.க. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், ஜெயலலிதாவிற்கு எதிராக, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்த போது, 263 கழக உடன்பிறப்புகளுக்காக கண்ணீர் சிந்தி பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இயற்கையின் சீற்றத்தால், அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உயிரழந்த 600 அப்பாவிகளுக்காக கண்ணீர் சிந்தவோ, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவோ தயாராக இல்லாத ஜெயலலிதாவை; தண்டிக்க வேண்டிய நேரத்தில் தமிழக மக்கள தண்டிக்க வேண்டுமென தமிழக மக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அராஜக, ஊழல் ஆட்சி நடத்தி வருகிற அ.தி.மு.க.ஆட்சியை அகற்றுவதற்கு  தமிழகத்திலுள்ள ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட மதச்சார்ப்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கிற பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மேற்கொள்ளவேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 3 : மத்திய பா.ஜ.க.அரசின் மக்கள் விரோதப் போக்கு

நாடாளுமன்ற தேர்தலில், மக்களை மயக்கும் வகையில் மலிவான வாக்குறுதிகளை அளித்து மத்தியில் பா.ஜ.க.ஆட்சியைக் கைப்பற்றியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாளில் வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை செலுத்துவோம் என பா.ஜ.க.வினர் கொடுத்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. ஏன் என்று கேட்டால், இது தேர்தலுக்காக சொன்ன ‘ஜால வார்த்தை’ என்று கூறுவதை விட அரசியல் மோசடி வேறெதுவும் இருக்க முடியாது.

கடந்த 18 மாதங்களில் 37 நாடுகளில் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்வதற்காக மத்திய அரசின் வரிப்பணம் ரூ.360 கோடி விரையமாக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர உடையணிந்து, உலக நாடுகளில் வலம் வருபவருக்கு மக்கள் வரிப்பணம் விரையமாவதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத்திற்கு மாற்றாக, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிற, தொழிலதிபர்களின் நலன்களைப் பாதுகாக்கிற வகையில் அவரச சட்டத்தை மத்திய பா.ஜ.க.அரசு கொண்டு வந்தது. இதை கடுமையாக எதிர்த்து இளம் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திய காரணத்தால், பா.ஜ.க.அரசு தமது முயற்சியினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிராமப்புற மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதற்காக, அன்னை சோனியாகாந்தியின் கனவு திட்டமான மகாத்மாக காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க.அரசு எடுத்து வருகிறது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது. கிராமப்புற மக்களின், குறிப்பாக பெண்களின் வாங்கும் சக்தியை உயர்த்தி, வாழ்வாதாரத்தை உறுதி செய்த இத்திட்டத்திற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் கிராமப்புற மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் நலனைக் காக்க தனி அமைச்சகம் உருவாக்குவோம் எனக்கூறி ‘கடல் தாமரை மாநாடு’ நடத்திய பா.ஜ.கவினர் ஆட்சியில் இன்றைக்கு நாள்தோறும் மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்துகிற விசைப்படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள்; கைது செய்யப்பட்டார்களே தவிர, அவர்களது உடமைகள் பறிக்கப்பட்டதில்லை. ஆனால், இன்றைக்கு தமிழக மீனவர்கள் கைது செய்து கொடுமைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த முடியாமல் பா.ஜ.க.அரசு கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதை விட மீனவர்கள் விரோதப் போக்கு வேறெதுவும் இருக்க முடியாது.

சர்வதேச சந்தையில் மே 2014 இல் 144 டாலராக இருந்த கச்சா எண்ணெய் இன்று 35 டாலராக குறைந்தாலும் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்த விலை வீழ்ச்சியினால் ஏற்பட்ட பலன்களை மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி, தமது வருவாயை பெருக்கிக் கொள்வதை  மக்கள் விரோத நடவடிக்கையாக இக்கூட்டம் கருதுகிறது.

அன்னை சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பழிவாங்கும் நோக்கத்தோடு, சுப்பிரமணிய சாமியை தூண்டிவிட்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனம் தொடர்பாக பொய்வழக்கு தொடர பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிறுவனம் 1938 இல் ஜவஹர்லால் நேரு அவர்களால் காங்கிரஸின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக தொடங்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு காங்கிரஸின் சொத்து. அந்த சொத்தை காப்பாற்றுவதற்கு, மீண்டும் புனரமைப்பு செய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற உரிமையை யாரும் பறித்துவிடமுடியாது. ஆயிரம் சுப்பிரமணிய சாமிகளோ, மோடிகளோ இணைந்து எத்தகைய சதி செய்தாலும் லட்சக்கணக்கான காங்கிரஸ் ஊழியர்கள் ஓரணியில் திரண்டு அதை முறியடித்துக் காட்டுவார்கள்.

தீர்மானம்: 4 : மத்திய அரசின் வஞ்சனைப் போக்கு

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக,வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதியாக முதலில் ரூ.8500 கோடி தேவையென மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்பொழுது ரூ.26,000 கோடி தேவையென கடிதம் எழுதியிருக்கிறார். நரேந்திர மோடி அரசு, முதலில் ரூ.940 கோடி வழங்கியது. ஆனால், இத்தொகை ஊதியக் கமிஷனுக்காவும், பேரிடர் மேலாண்மை நிதிக்காகவும் ஏற்கனவே தரவேண்டிய நிலுவைத் தொகையாக தரப்பட்டதே தவிர, வெள்ள நிவாரண நிதியாக தரப்படவில்லை. இதையடுத்து, ரூ.1000 கோடி வழங்கப்பட்டது. அதற்கு பிறகு, நிதி எதையும் ஒதுக்காமல் நரேந்திர மோடி அரசு பாரபட்சம் காட்டி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. இது வழங்கப்பட்ட ரூ.1000 கோடி யானைப்பசிக்கு வழங்குகிற சோளப்பொரியாகத்தான் உள்ளது.

மத்திய அரசில் இருந்து, அதிக அளவில் வெள்ள நிவாரண நிதி பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், அப்படி பெறப்படுகிற நிதி, அ.தி.மு.க. ஆட்சியாளார்களால் முறையாக வெளிப்படத்தன்மையோடு செலவழிக்கப்படுமா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. தேர்தல் நெருங்கி வருகிற நேரத்தில் மத்திய அரசு வழங்குகிற நிதி, ஆளும் கட்சியினரின் தேர்தல் பயன்பாட்டிற்கு போய்விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்தும் வகையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அனைத்து கட்சிக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரும்பாலான அரசியல் கட்சிகள் எழுப்பி வருகின்றன. இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஜெயலலிதா ஏற்றுக்;கொண்டு அனைத்துக் கட்சிக் குழுவை அமைப்பார் என்கிற நம்பிக்கை எவருக்கும் இல்லை. இந்நிலையில், வெள்ள நிவாரணப்பணி என்பது அ.தி.மு.க.வின் தேர்தல் நிவாரணப் பணியாக மாறி விடுமோ என்கிற அச்சம் ஆழமாக மேலோங்கி வருகிறது. இதை தடுத்து நிறுத்தி, முறியடிக்கிற வகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்   கொள்கிறது.

தீர்மானம்: 5 : ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு எதிராக கடந்த மே 7, 2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பினால் ஏற்படப்போகிற விளைவுகளிலிருந்து காப்பாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய பா.ஜ.க.அரசு கடந்த 18 மாதங்களாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. திடீரென சமீபத்தில் இதோ அறிவிப்பு வருகிறது, அதோ அறிவிப்பு வருகிறது என தமிழக பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்துகிற வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளார்.

தங்களது இயலாமையை மூடிமறைக்க காங்கிரஸ் கட்சி மீது பழிபோட்டு தமிழக பா.ஜ.க.வினர் பேசி பிரச்சனையை திசைதிருப்பி வருகின்றனர். கடந்த ஜுலை 11, 2011 இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைதான் தடையாக இருப்பதாக கூறுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும். இந்த சுற்றறிக்கை வந்த பிறகு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையை பெற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு  நடந்ததை லாவகமாக தமிழக பா.ஜ.க.வினர் மூடிமறைத்து பேசுவது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலாக இக்கூட்டம் கருதுகிறது. இன்று ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உச்சநீதிமன்ற ஆணையில் கூறப்பபட்டிருக்கிற கருத்துக்கள்தான் தடையாக இருக்கிறதே தவிர, 2011 அறிவிக்கை தடையாக இல்லை. எனவே, உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை அகற்ற அவசர சட்டத்திருத்தம் கொண்டு வருவதன் மூலமாகத்தான் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியும். கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையாக இருக்கிற சட்டச்சிக்கலை போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது பழிபோட்டு தப்பிக்க முயல்வதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றால் அதற்கு மத்திய, மாநில அரசுகள்தான்  பொறுப்பு என்பதை இக்கூட்டம் வலியுறுத்தி கூறவிரும்புகிறது.

தீர்மானம்: 6 : செம்பரபாக்கம் ஏரி நீர் திறப்பு – நீதிவிசாரணை வேண்டும்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னறிவிப்பில்லாமல் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி இரவு ஒரு நொடிக்கு 30,000 கனஅடி நீரை ஒரே நேரத்தில் திறந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கோடு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட 70 ஆயிரம் கனஅடி நீரும் சேர்ந்து ஆக, 1 லட்சம் கனஅடி நீர் அடையாற்றில் புகுந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், சென்னை மாநகரம் பேரழிவுக்கு ஆளாகி லட்சக்கணக்கான மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்துள்ளனர். இதற்கான பொறுப்பை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளாமல் விதண்டவாதம் பேசி வருகிறார். பேரிழிவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறியாமல் செயல்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவி மிகமிக குறைவானதாகும். இதை முறையே, ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் என உயர்த்தித் தரவேண்டும். அதே போல, தமிழக முழுவதும் விவசாய பெருங்குடி மக்கள் சாகுபடி செய்து தண்ணீரில் மூழ்கி, நாசமான நெல் பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்பு, வாழை பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம், தென்னை, முந்திரி போன்றவற்றிற்கு ரூ 1 லட்சம் என இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வெள்ளப் பெருக்கினால் மண்மேடாகி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு சரி செய்ய ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நிலங்களை இலவசமாக மண்வள பரிசோதனையை தமிழக அரசின் விவசாய துறையே இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணத் தொகைகள் பாதிக்கப்பட் விவசாய மக்களுக்கு பாரபட்சமின்றி வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *