ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 31.10.2015

சமீபகாலமாக நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு பெற்ற மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு வருகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது. அவ்வரிசையில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலை குறித்து நாட்டிலுள்ள வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் தங்களது விலைமதிக்க முடியாத விருதுகளை பா.ஜ.க. ஆட்சியாளர்களின் முகத்தில் வீசி எறிந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

 இந்நிலையில் தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்படுகிற வகையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக அவலங்களை சித்தரித்தும் கலை இரவு நிகழ்ச்சிகள் மூலமாக கிராமிய பாணியில் தாரை தப்பட்டைகளுடன் பாடல்களை பாடி எழுச்சியை ஏற்படுத்திய மக்கள் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த சிவதாஸ் என்கிற கோவன் தேசதுரோக குற்றம் இழைத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

‘இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்” என்ற கொடுமை ஹிட்லர் ஆட்சியில்தான் நடந்தது. அத்தகைய கொடுமையான நடவடிக்கைகள் தற்போது ஹிட்லர் ஆட்சியை மிஞ்சும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில் தற்போது நடந்து வருகிறது. பத்திரிகைகள் மிரட்டப்படுகின்றன. ஆட்சிக்கு எதிராக செய்தி வெளியிடுகிற பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டிய அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் அச்றுத்தப்படுகின்றன. எந்த தொலைக்காட்சியாவது ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டால் கேபிள் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன.

 தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்;சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது. அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் மக்கள் கொண்டிருந்தால் இன்றைய கொடுங்கோல் ஆட்சி, நாளை பேயாட்சியாக மாற வழிவகுத்துவிடும். இதை உடனடியாக தடுத்து நிறுத்த கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிற வகையில் வருகிற 2.11.2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் பெருந்திரளான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

TNCC President s Statement - 31.10.2015-page-001

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *