காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் உரை.
இடம் : டைம் ஸ்கொயர், நியூயார்க்
நாள் : 20.09.2017

மொழி பெயர்ப்பு : சஞ்சய் காந்தி , கோவை
www.facebook.com/SanjaiGandhi , www.twitter.com/SanjaiGandhi

அனைவருக்கும் வணக்கம்.

சாம் பிட்ரோடா பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து, பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய ப்ரசண்டேஷனை ( Presentation ) கவனித்த நிகழ்வை சொன்னார். சாம், அது 1982 என்று நினைக்கிறேன். ஆம், 1982 தான். அப்போது நான் 12 வயது சிறுவன். அன்று ஒரு ப்ரசண்டேஷன் இருப்பதாகவும் நான் வர வேண்டும் என்றும் காலையில் என் தந்தை சொன்னார். ப்ரசண்டேஷன் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. எனக்கு எதோ அன்பளிப்புக் கிடைக்கப் போகிறது என்று நான் நினைத்தேன். நானும் என் சகோதரியும் சென்று அந்த அறையின் பின்வரிசையில் அமைதியாக அமர்ந்திருந்தோம். 6 மணி நேரம் நாங்கள் அமர்ந்திருந்தோம். சாம் பிட்ரோடாவும் என் தந்தையும் கம்ப்யூட்டர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. 1982ல் கிட்டத்தட்ட யாருக்குமே கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று புரியவில்லை. தொலைக்காட்சித் திரையுடன் கூடிய ஒரு சிறிய பெட்டியாகவே எனக்குத் தெரிந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு அந்த ப்ரசண்டேஷன் பிடிக்கவில்லை. ஒரு சிறுவனாக, 6 மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டிய காரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், 4 அல்லது 5 வருடங்களுப் பின்னர், அந்த ப்ரசண்டேஷனின் பலனை நான் பார்க்க ஆரம்பித்தேன். பிரதமர் அலுவகத்தில் அப்போது டைப்ரைட்டர்கள் இருந்தன. அனைவரும் டைப்ரைட்டர்களைப் பயன்படுத்த வேண்டி இருந்தது. அவர்கள் அனைவரும் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என்று சாம் பிட்ரோடாவும் என் தந்தையும் சொன்னார்கள். அனைவரும் மறுத்தார்கள். தாங்கள் அனைவரும் டைப்ரைட்டர்களையே விரும்புவதாகவும் தங்களுக்கு கம்ப்யூட்டர்கள் வேண்டாம் என்றும் சொன்னார்கள். சாமும் என் தந்தையும் அவர்களுக்கே உரிய பாணியில் “ சரி, டைப்ரைட்டர்களையே பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் இப்போது நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றால், டைப்ரைட்டர்களுக்கு பதில் இங்கே கம்ப்யூட்டர்களை வைக்கிறோம், ஒரு மாதத்திற்கு பின் உங்கள் டைப்ரைட்டர்களையே திரும்ப வைத்துவிடுகிறோம்” என்றார்கள். அனைவருக்கும் கம்யூட்டர்கள் வழங்கப்பட்டன. ஒரு மாதத்திற்குப் பிறகு, கம்யூட்டர்களுக்கு பதில் உங்கள் டைப்ரைட்டர்களையே வைத்துவிடுகிறோம், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சாமும் என் தந்தையும் சொன்னார்கள். ஆனால் அனைவரும் தங்களுக்கு டைப்ரைட்டர் திரும்ப வேண்டாம் என்றும் கம்ப்யூட்டர்களையே பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

புதுமைகள் இந்தியாவை அடைய நேரம் பிடிக்கும். ஆனால் அது நன்றாக இருந்தால் இந்தியா விரைவாக அதை புரிந்துக் கொள்கிறது, மேலும் அதை எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று உலகுக்கு சொல்கிறது.

உண்மையான காங்கிரஸ் இயக்கம் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களின் இயக்கமாகத் தான் இருந்தது. மகாத்மா காந்தி ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தார். ஜவஹர்லால் நேரு இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்தார், டாக்டர் அம்பேத்கர், மவுலானா ஆசாத், படேல் ஆகியோரும் வெளிநாடு வாழ் இந்தியர்களாகத் தான் இருந்தார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் வெளி உலகிற்கு சென்று, அங்கே பார்த்து, பின்னர் இந்தியாவிற்கு திரும்பி வந்து அவர்கள் பார்த்த நல்ல விஷயங்களை இங்கே செயல்படுத்தி, இந்தியாவை மாற்றினார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்று நம் பிஜேபி நண்பர்கள் சொல்கிறார்கள், ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியான, இந்தியர்கள் அதிகம் குடிக்கும் பாலின் வெற்றிக்குக் காரணமான திரு. குரியன் கூட ஒரு வெளிநாடு வாழ் இந்தியராகத் தான் இருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து இந்தியாவை மாற்றியமைத்தார். சாம் பிட்ரோடா இன்னொரு உதாரணம். நாம் அங்கீகரிக்காத ஆயிரக் கணக்கான உதாரணங்கள் இருக்கின்றன, நான் சான் ப்ரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சலிசிற்கும் அங்கிருந்து வாஷிங்டனிற்கும், வாஷிங்டனிலிருந்து நியூயார்க்கிற்கும் சென்றேன். ப்ரின்ஸ்டனில் உள்ள பெர்க்ளேவில் நான் மக்களிடம் பேசினேன். நான் எங்கே சென்றாலும், நான் இந்தியனாக இருப்பதை எண்ணி நீங்கள் பெருமைப்பட வைத்துவிடுகிறீர்கள்.

இந்த நாட்டில் நீங்கள் எங்கு வேண்டுமாலும் பாருங்கள், ஒரு இந்தியர் அமெரிக்காவுக்காக பணியாற்றுகிறார், இந்தியாவுக்காகப் பணியாற்றுகிறார், அமைதியாக வாழ்கிறார், இந்த நாட்டையும் நம் நாட்டையும் கட்டமைக்கிறார். நீங்கள் நம் தேசத்தின் முதுகெலும்புகள் என்று சொல்லி என் உரையை ஆரம்பிக்கிறேன். சிலர் இந்தியாவை ஒரு புவியியல் கட்டுமானமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் இந்தியாவை ஒரு நிலப்பகுதியாகப் பார்க்கிறார்கள். நான் இந்தியாவை ஒரு நிலப்பகுதியாகப் பார்க்கவில்லை. இந்தியாவை நான் கருத்துகளின் தொகுப்பாகப் பார்க்கிறேன். ஆகவே, என்னைப் பொருத்தவரையில், இந்தியாவை மேம்படுத்தும் கருத்துகளை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் அவர் ஒரு இந்தியரே.

நம் நாட்டில் பல மதங்கள், பல்வேறு மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு இந்தியரும் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அதற்கான காரணம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே. காங்கிரஸ் கட்சி 130 வருடம் பழமையானது என்று சாம் சொன்னார். ஆமாம், உண்மை தான். காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு பழமையானது தான். ஆனால், இந்தியாவில் காங்கிரசின் கொள்கைகள் என்பது ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையானது. நாங்கள் ஒரு கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான தத்துவங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்.  தத்துவம் என்றால் என்னவென்று கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். காந்தி எதற்காக போராடினார்? நம் சுதந்திரப் போராட்டம் எதற்கானது? குரியன் என்ன செய்தார்?சாம் பிட்ரோடா என்ன செய்தார்? ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள்? உண்மைக்காக போராடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது என்பது பற்றிக் கவலையில்லை, அவர்கள் ஒரு விஷயத்தை நம்பும் போது, அது உண்மை என்று உணரும் போது அதற்காக அவர்கள் போராடுகிறார்கள், அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். இது தான் காங்கிரஸ் கருத்து. என் பயணத்தில் நான் ஏராளமாக உரையாடி இருக்கிறேன். அரசு நிர்வாகத்தை சேர்ந்த பலரை நான் சந்தித்தேன், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்த பலரை சந்தித்தேன், ஏராளமான நண்பர்களை, NRI நண்பர்களை சந்தித்தேன். ஒன்றை உங்களிடம் சொல்லியாக வேண்டும். எனக்கு அது ஆச்சர்யமாகவும் இருந்தது. என் மனதில் என்ன நினைக்கிறேன், நான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்பதை எல்லாம் அவர்களிடம் சொல்வதற்கு முன்னரே, அவர்கள் அதே விஷயங்களை மிகச் சரியாக என்னிடம் கேட்டார்கள். அவர்கள் என்னிடம் சொன்னவற்றில் ஒரு தனித்துவம் வாய்ந்த பெரிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் சகிப்புத் தன்மைக்கு என்ன ஆனது என்பது தான்.

இந்தியாவில் நல்லிணக்கத்திற்கு என்ன ஆனது?

இந்தியா சில சவால்களை சந்தித்து வருகிறது.

ஒரு மிகப் பெரிய சவாலையும் அதன் எண்ணிக்கையையும் உங்களுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் 30,000 இளைஞர்கள் வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள். இப்போது அவர்களில் வெறும் 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. வேலை வாய்ப்பில்லாதவர்களைப் பற்றிக் கூட நான் சொல்லவில்லை.

இது தான் நம் தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால். மக்களை ஒருங்கிணைத்து ஒரு ஒன்றுபட்ட அணுகுமுறையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்த சவாலை சமாளிக்க முடியும்.

இந்தியாவில் நாம் அனைத்தையும் விவாதிக்கிறோம். இந்தியாவில் பிரிவினை அரசியல் நடக்கிறது. ஆனால், இந்தியாவின் முக்கியமான சவால் என்பது வேலை தேடும் 30,000 இளைஞர்களும் அவர்களில் 450 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதும் தான். இந்த நிலை நீடித்தால் என்ன ஆகும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். வேலை வாய்ப்பை அளிக்க இயலாத வெறும் தொலை நோக்குப் பார்வையை மட்டுமே இளைஞர்களுக்கு இந்தியாவால் வழங்க முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்கும் தொலை நோக்குத் திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அந்த்த தொலைநோக்கு திட்டத்தைப் பற்றி சிறிது உங்களிடம் சொல்கிறேன். இப்போது மொத்தப் பார்வையும் 50 அல்லது 60 பெரிய நிறுவனங்களின் மீதே இருக்கிறது. சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதன் மூலமே லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை நாங்கள் தீவிரமாக நம்புகிறோம்.

இரண்டாவதாக, நான் இன்னொரு எண்ணிக்கையை சொல்கிறேன். இந்தியாவில் உறுபத்தி செய்யப்படும் 40% காய்கறிகள் அழுகி வீணாகிவிடுகின்றன. விவசாயத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. பஞ்சாபை சேர்ந்தவர்கள் இங்கே இருக்கிறீர்கள். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகப் புரியும்.

விவசாயம் என்பது வியூகத்துவம் வாய்ந்த சொத்து. நாம் விவசாயத்தை கட்டமைக்க வேண்டி இருக்கிறது. குளிர்சாதன வசதிகளை மேம்படுத்த வேண்டி இருக்கிறது. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை விவசாய நிலங்களின் அருகில் அமைக்க வேண்டி இருக்கிறது. நாம் இந்திய விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அதிகாரமளிக்க வேண்டி இருக்கிறது.

சுகாதாரத்துறை மாற்றமடையைப் போகிறது. இன்று மருத்துவரின் நினைவில் இருக்கும், சுகாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை முற்றிலும் கணிப்பொறிக்கு மாறப்போகிறது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மிகப் பெரிய எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், கண் அறுவை சிகிச்சைகளை நாம் செய்கிறோம். அவற்றை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்ற பெரும் புரிதல் நம்மிடம் இருக்கிறது. சுகாதாரத் துறையில் இந்தியாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன, உலகின் சுகாதார மையமாக நாம் உருவாக முடியும். ஆனால், அதற்காக நாம் இப்போதே திட்டமிட வேண்டும். நான் மருத்துவ சுற்றுலாவைப் பற்றி மட்டுமே பேசவில்லை, எதிர்காலத்தில் மிகப் பெரிய மருத்துவ செயல்பாடுகளுக்கான உறைவிடமாக இந்தியாவை கட்டமைக்கவும் வேண்டும்.

IITகளுக்கும் இதே போன்ற ஒரு தொலை நோக்குப் பார்வையை என்னால் கொடுக்க முடியும். நான் பெர்க்ளே சென்றேன். நேற்று ப்ரின்ஸ்டனில் இருந்தேன். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் வலைபின்னல்கள், அறிவுசார் வலைபின்னல்கள். அந்த வலைபின்னல்கள் வழியே தகவல்கள் செல்கின்றன, அவைகள் வியாபாரத்துடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, அவைகள் பொருளாதாரத்துடன் இணைப்பட்டிருக்கின்றன. நமது IITக்கள் மிகப் பெரும் கல்வி நிறுவனங்கள். ஆனால், வலைப் பின்னல்கள் அல்ல. நம் IITகளை இந்தியாவின் தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரங்களுடன் இணைத்தால், அவைகள் உலகின் சிறந்த வியாபார நிறுவனங்களுடன் போட்டியிட ஆரம்பிக்கும். இவை எல்லாம் தான் நாம் செய்ய வேண்டியவை. நான் எனது துவக்க உரைக்கு செல்ல விரும்புகிறேன், நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களுக்கு மிகப் பெரிய அறிவு இருக்கிறது, உங்களுக்கு மிகப் பெரிய புரிதல் இருக்கிறது, நீங்கள் பல்வேறு தளங்களில் பணியாற்றுகிறீர்கள். காங்கிரசில் இணைந்து பணியாற்ற உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. சாம் பிட்ரோடா தனி மனிதராக தொலை தொடர்பு துறையை மாற்றினார். எங்களுக்கு ஒரு சாம் பிட்ரோடா மட்டும் போதாது, 10 முதல் 15 பிட்ரோடாக்கள் வேண்டும். ஏனெனில், ஏளாளமான பணிகள் இந்தியாவில் செய்ய வேண்டி இருக்கின்றன.

இறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எப்படி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று உலகுக்கு எப்போதும் இந்தியா காட்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் இந்தியா புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. இப்போது அதற்கு சவால்கள் உருவாகி இருக்கின்றன. சில சக்திகள் இந்தியாவை பிளவுபடுத்துகின்றன, அது இந்தியாவிற்கு பேராபத்தாகும், அவைகள் இந்தியாவின் புகழை உலக அரங்கில் சீர்குலைத்துவிடும்.

குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியில் இருக்கும் பலரும், இந்தியாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று கவலையுடன் கேட்கிறார்கள். உங்கள் தேசம் எப்போதும் ஒன்றிணைந்தே செயல்பட்டிருக்கிறது, அது அமைதியான தேசம் என்றே நாங்கள் நம்பினோம். என்ன நடக்கிறது உங்கள் தேசத்தில் என்று கேட்கிறார்கள்.

அதற்கு தான் நாம் போராட வேண்டி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் புகழ் முக்கியமானது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது, மக்கள் நம்மை நோக்கிப் பார்க்கிறார்கள். சீனா வளர்கிறது, நாம் அமெரிக்காவுடன் உறவு வைத்திருக்கிறோம். வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகம், இந்தியாவை நோக்கி, 21ஆம் நூற்றாண்டுக்கான பதில் இந்தியாவிடம் இருக்கலாம் என்று சொல்கிறது. 21ஆம் நூற்றாண்டில் அமைதியாக இருப்பதற்கான பதில் இந்தியாவிடம் இருக்கலாம். ஆகவே, நமது மாபெரும் சக்தி வாய்ந்த சொத்தை நாம் இழந்துவிட முடியாது. 130 கோடி மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வதும் அதற்காக நம்மை உலகம் மதிப்பதும் நம் முக்கியமான சொத்து. காங்கிரஸ்காரர்களாக நாம் ஒவ்வொருவரும் இதை பாதுகாக்க வேண்டி இருக்கிறது. இந்தியா என்பது இந்தியவில் உள்ள அனைவருக்கும் சொந்தமான தேசம்.  சீக்கிய சதோரர்கள், நாட்டில் பல பகுதிகளை சேர்ந்தவர்களை என்னால் பார்க்க முடிகிறது. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களில் ஒருவருக்கு மட்டுமே இந்தியா சொந்தமானதல்ல.

இந்த அறையில் இருக்கும் அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. நம் ஒவ்வொருவருக்கும் இந்தியா சொந்தமானது, அதே தான் காங்கிரஸ் கட்சியும்.

நன்றி. வாழ்த்துகள்..


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *