தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 24.11.2015

சிறுவயது முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து கட்சிப் பணியாற்றி, 9 சட்டமன்றத் தேர்தல்களில் நிலக்கோட்டை, சோழவந்தான், பழனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்று அளப்பரிய தொண்டாற்றிய திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன்.

ஏறத்தாழ 35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, சாதாரண ஏழைஎளிய மக்களின் குறைகளை அறிந்து தொண்டால் பொழுதலர்ந்தவர் ஏ.எஸ். பொன்னம்மாள். 88 வயது நிரம்பிய அவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்து மேல் சிகிச்சை செய்ய எல்லா உதவிகளையும் காங்கிரஸ் கட்சி சார்பாக செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறியதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி. ஏ.எஸ். பொன்னம்மாள் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களாலும் ‘அக்கா பொன்னம்மாள்” என்று அன்போடு அழைக்கப்பட்ட அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *