பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள்

Malampuzhla Dam

  • கீழ்பவானித் திட்டம் : பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கோயம்புத்தூரில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீர்த்தேக்கப்பட்டது. இதன் மூலம் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது.
  • மணிமுத்தாறு திட்டம் : பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் இணையும் கிளை நதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தின் 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது.
  • மலம்புழாத் திட்டம் : மலபார் மாவட்டத்தில் பாரதப் புழா நதியின் குறுக்கே ஒரு கிளை நதியான மலம்புழா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இதனால் 40,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
  • மேட்டூர் கால்வாய்த் திட்டம் : சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து வாய்க்கால் அமைக்கப் பட்டது.
  • ஆரணியாறு திட்டம் : செங்கல்பட்டு மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் அமைக்கப்பட்டது.
  • அமராவதித் திட்டம் : கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப் பட்ட நீர்த்தேக்கத் திட்டம்.
  • வைகைத் திட்டம் : பெரியாறு அணையிலிருந்து பிரிக்கப் படும் கூடுதல் நீரை பாதுகாப்பாக இணைத்து வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டது.
  • சாத்தனூர்த் திட்டம் : வட ஆற்காடு ( வேலூர் ) மாவட்டம் சாத்தனூருக்கு அருகில் ஓடும் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இதன் மூலம் 40000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
  • கிருஷ்ணகிரி திட்டம் : கிருஷ்ணகிரி தாலுகாவில் பெண்ணையாறு நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது.
  • திருச்சி மாவட்டத்தின் புல்லம்பாடி வாய்க்கால் திட்டம் மற்றும் புதிய கட்டளைத் திட்டம்.
  • தென் ஆற்காடு மாவட்டம் விடூரில் நீர்தேக்கத் திட்டம்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறுவதற்காக பெரிய ஏரிகளை புதுப்பித்தல், கொடையாறு வாய்க்கால்களை மறுசீரமைப்பு செய்தல் போன்ற நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டத்தின் இரண்டாம் பாகம். இதனால் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்

  • இத்திட்டத்தினால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதுடன், நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது.
  • இத்திட்டத்தில் 6 பெரிய அணைகளும், 2 சிறிய அணைகளும், 12 மைல் நீள மலைக்குகையும், 120 மைல் நீள கால்வாய்களும் மற்றும் நூற்றுக்கணக்கான மைல் நீள சிறு வாய்க்கால்களும் அடங்கும்.
  • பரம்பிக்குளம் அணை 180 அடி உயரமும் மேல்மட்டத்தில் ஆயிரம் அடி நீளமும் கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி.