தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 06.11.2016

thirunavukkarasar_11641eமத்திய பா.ஜ.க. அரசு ஆட்சியில் அமைந்தது முதற்கொண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்புவதில் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி விலகுகிற போது மே 2014இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 106 டாலராக இருந்தது. அது ஜனவரி 2016இல் 26 டாலராக குறைந்து தற்போது 50 டாலராக உள்ளது. ஏறத்தாழ 75 சதவிகிதம் விலை குறைந்துள்ளது.
கடந்த 28 மாதங்களாக மத்திய பா.ஜ.க. அரசு பலமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய விலை உயர்வுகளை ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு அறிவித்து வருகின்றன. வாழைப்பழத்தில் ஊசி குத்துவதைப் போல இத்தகைய விலை உயர்வுகள் 15நாளைக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தக்கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு ஆண்டுதோறும் பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக ஆண்டுதோறும் மானியமாக ரூபாய் 1 இலட்சத்து 67 ஆயிரம் கோடி வழங்கி வந்தது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோலியம் பொருள் மீது நவம்பர் 2014இல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட கலால் வரி ரூ. 9.20, டீசல் மீது விதிக்கப்பட்ட கலால் வரி ரூ.3.46 ஆனால் மனம் திறந்து பேசுகிறேன் என்று மக்களை ஏமாற்றி வரும் நரேந்திரமோடி ஆட்சியில் தற்போது கலால் வரி 1 லிட்டருக்கு ரூ.21.48 ஆகவும், டீசலுக்கு ரூ.17.33 ஆகவும் உயர்த்தி வருமானத்தை பெருக்கிக்கொண்டுள்ளது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை என்கிற பள்ளத்தை நிரப்புவதற்காக மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயனை மடை மாற்றம் செய்து கலால் வரி விதிப்பின் மூலம் அரசு கஜானாவை நிரப்புவது ஒரு அரசியல் ஏமாற்று வேலையாகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு பதில் சொல்லி ஆக வேண்டும்.

கருத்து சுதந்திர பறிப்பு :

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில் உள்ள இந்திய விமான தளத்திற்குள் கடந்த ஜனவரி 2016இல் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதை செய்தியாக வெளியிட்ட என்.டி. டி.வி. இந்தி தொலைகாட்சி ஒலிபரப்பை நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் மறுநாள் பிற்பகல் ஒரு மணி வரை தடை செய்து மத்திய செய்தி ஒலிபரப்பு துறை தடை விதித்தது. நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு 10 மாதங்கள் கழித்து தொலைக்காட்சி நிறுவனத்தை பழிவாங்கும் நோக்கோடு மத்திய பா.ஜ.க. அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கிற செயல் ஆகும். இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
சமீபத்தில் முன்னாள் இராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கபட்டபோது அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முற்பட்ட இளந்தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாளில் 3 முறை கைது செய்யப்பட்டார். இத்தகைய அராஜக செயல்களை செய்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசு கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருத்து கூறுகிற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இத்தகைய அராஜகத்தை மத்திய பா.ஜ.க. அரசு கட்டவிழ்த்துள்ளதை அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். இத்தகைய போக்குகளை தடுத்து நிறுத்துவதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்து சக்திகளும் ஓரணியில் திரண்டு எதிர்த்து குரல் கொடுத்து பேராடுவது காலத்தின் கட்டாயமாகும்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *