Featuredதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 1.6.2016

மத்திய பா.ஜ.க. அரசின் இரண்டாண்டு சாதனை கொண்டாட்டங்களின் விளைவாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.22 ஆக உயர்த்தி நள்ளிரவு தாக்குதலை நடத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக உயர்ந்துவிட்டதால் இந்த விலை உயர்வை அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கு முன்பு 30 டாலராக  இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதனுடைய பலன்களை கலால் வரி விதிப்பு மூலம் அரசு கஜானாவை நிரப்பிக் கொண்ட மக்கள் விரோத அரசாகத்தான் பா.ஜ.க. செயல்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருந்தால் இன்றைய விலை உயர்வை நியாயப்படுத்த முடியும். ஆனால் குறைக்க வேண்டிய நேரத்தில் குறைக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றுவதை பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்து வந்ததை யாரும் மறந்திட இயலாது.

மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்து விலகியபோது 2014 இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தது. இதிலிருந்து கிட்டத்தட்ட 55 சதவீதம் விலை குறைந்திருக்கிறது. ஆனால் பெட்ரோல் விலையை 12 சதவீதமும், டீசல் விலையை 9 சதவீதமாக மட்டுமே மத்திய பா.ஜ.க. அரசு குறைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் அடிப்படையில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.25.40 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.31.99 ஆகவும் விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ.65 ஆகவும், டீசல் விலை ரூ.55.30 ஆகவும் மத்திய அரசு விற்பனை செய்கிறது. பா.ஜ.க. அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி மானியமாக வழங்கி, மக்கள் மீது சுமையை குறைத்தது. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது கலால் வரியாக ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி விதிக்கப்பட்டு பா.ஜ.க. அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் இறக்குமதியால் மத்திய அரசு செலுத்தும் தொகை 450 பில்லியன் டாலரிலிருந்து 360 பில்லியன் டாலராக குறைந்தது லாவகமாக மறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதனைகளை படைத்துவிட்டதாக நாளேடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பதோடு, தலைநகர் டெல்லியில் சினிமா நட்சத்திரங்களோடு இணைந்து நடைபெற்ற ஆடம்பர களியாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுக் கொண்டதைத்தான் அன்னை சோனியா காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்தியாவில் கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் 33 கோடி மக்கள் கடும் வறட்சியை எதிர்கொண்டு துன்பத்தில் துவளுகிறபோது நரேந்திர மோடிக்கு ஆடம்பர விளையாட்டுக்கள் அவசியம்தானா என்று கேள்விக்கணை தொடுத்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க.வினர் பதில் சொல்ல முடியாமல் அவதூறு சேற்றை வாரி இறைக்கிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் வேடம் கலைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *