தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 3.2.2016 

EVKS-Elangovanகோவை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைப் பட்டியலை வாசித்துள்ளார். சாதனைப் பட்டியலைப் பற்றி பேசிய நரேந்திர மோடி தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காதது ஏன் என்பதற்குப் பின்னாலே நிறைய மர்மங்கள் இருக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய அரசியல் நிலை எடுப்பது என்பது குறித்து தெளிவான நிலை இல்லாத காரணத்தாலே தமிழக அரசியல் குறித்து நரேந்திர மோடி பேசாமல் தவிர்த்திருக்கிறார். தமிழக பா.ஜ.க.வினர் அத்தி பூத்தாற்போல் எப்பொழுதாவது அ.தி.மு.க.வுக்கு எதிராக கருத்து கூறி வந்தனர். பிரதமர் மோடி முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கு வருகை புரிந்து விருந்து உண்ட பிறகு அ.தி.மு.க. எதிர்ப்பை தமிழக பா.ஜ.க. முற்றிலும் கைவிட்டுவிட்டு, திரிசங்கு சொர்க்கத்தில் தற்போது நின்று கொண்டிருக்கிறது.

கடந்த 20 மாதங்களாக பா.ஜ.க. ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். நிதியமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவில் சர்வதேச குற்றவாளி லலித் மோடி மீது 15 வழக்குகள் தொடுத்து ஏறத்தாழ ரூ.1,200 கோடி வரி ஏய்ப்பு மோடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிற நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்த உதவியின் மூலமாக பிரிட்டன் தூதரக அதிகாரியின் மூலம் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் இந்திய அரசால் தேடப்படுகிற சர்வதேச பொருளாதார குற்றவாளி தப்புவிக்க துணை போன சுஷ்மா சுவராஜ் மீது நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

அதேபோல, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங் நடத்துகிற நிறுவனத்திற்கு லலித் மோடியின் நிறுவனத்திலிருந்து ரூ.10 மதிப்புள்ள பங்குகளை ரூ.96,180 விலைக்கு பன்மடங்கு கொடுத்து ரூ.13 கோடி பங்குகள் வாங்கப்பட்டது ஊழல் இல்லை என்று சொன்னால் வேறு எது ஊழல் ? மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் ஆள் மாறாட்டம், புத்தகங்களை வைத்து பரிட்சை எழுத அனுமதிப்பது, அனுமதி அட்டையில் மேசடிகள் என பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்று மருத்துவர்களாக பணியில் சேர்ந்தனர். இந்த ஊழலில் சம்மந்தப்பட்டவர்கள் இதுவரை 46 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் மறுத்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இறுதியில் எதிர்கட்சியினரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல, சத்தீஷ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் ராமன்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.30 ஆயிரம் கோடிக்கு பொது விநியோகத்துறையில் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாக வீரவசனம் பேசுகிற நரேந்திர மோடிக்கு இவையெல்லாம் ஊழல் என்றுச் சொன்னால் ஊழலைப் பற்றி பாலபாடம் படித்து அறிந்து கொள்வது நல்லது.

கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்காக கரும்பு விவசாயிகள் மத்திய – மாநில அரசுகளை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு வெறும் ரூ.6 ஆயிரம் கோடியை வழங்கிவிட்டு மீதித் தொகையை வழங்க மறுத்து வருகிறது. இத்தகைய நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக பேசுவதைவிட ஒரு அரசியல் ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.

கோவை பொதுக்கூட்டத்தில் தமது உரையில் நரேந்திர மோடி டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பற்றி பேசியிருக்கிறார். ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலா உள்ளிட்ட ஐந்து மாணவர்களை கல்லூரியிலிருந்து தூக்கி எறிவதற்கு காரணமான மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மீது நடவடிக்கை எடுக்காத நரேந்திர மோடி, அவரது பெயரை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது ? தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு பா.ஜ.க. என்ன பதில் கூறப்போகிறது ? இந்த போராட்டத்திற்காக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 9 மணி நேரம் மேடையில் அமர்ந்து பங்கேற்ற இளந்தலைவர் ராகுல்காந்தி மீது ஏற்பட்ட வயிற்றெறிச்சலின் காரணமாகவே நரேந்திர மோடி கோவையிலே புலம்பித் தீர்த்திருக்கிறார். டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை அரசமைப்பு சட்ட தயாரிப்புக் குழுவின் தலைவராகவும், சட்ட அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற உரிமையை தலித் விரோத போக்கு கொண்ட பா.ஜ.க. பறித்துவிட முடியாது.

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.580 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது நரேந்திர மோடி திறந்து வைத்துள்ள 500 படுக்கை வசதி கொண்ட கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தொழிலாளர்களின் அப்பழுக்கற்ற தலைவர் தியாகி என்.ஜி. ராமசாமி பெயரை வைக்க வேண்டுமென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அவர் பெயரை மத்திய பா.ஜ.க. அரசு வைக்க மறுத்துவிட்டது. இந்த போக்கு தொழிலாளர் வர்க்கத்தினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த தியாகி என்.ஜி. ராமசாமி பெயரை வைக்க வேண்டுமென்கிற தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

கோவையில் நடைபெறுகிற பிரதமர் மோடி பங்கேற்கிற கூட்டம் முடிந்ததும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று தமிழக பா.ஜ.க.வினர் கூறி வந்தார்கள். கூட்டம் முடிந்துவிட்டது. மாற்றம் வரவில்லை. ஏமாற்றம்தான் வந்திருக்கிறது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *