இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்குச் சாதகமாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  அதில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை இலங்கை அரசே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது குற்றம் செய்தவனிடமே தண்டிக்கிற உரிமையை வழங்கியிருப்பது குற்றவாளிகளை பாதுகாக்கிற முயற்சியாகவே கருத வேண்டும். இந்த கண் துடைப்பு தீர்மானத்தை இந்தியா எப்படி ஆதரித்தது என்று தெரியவில்லை ?

தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள் கைகோர்த்து செயல்பட்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்பையே அச்சுறுத்துகிற நடவடிக்கையாகவே நமக்கு தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவை சுற்றி பாதுகாப்பற்ற, பதற்றமான சூழலை  நிரந்தரமாக உருவாக்கிவிடுமோ என்கிற அச்சம் நமக்கு ஏற்படுகிறது.

கடந்த காலத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட்ட மத்திய காங்கிரஸ் அரசு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது 2009, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருக்கிறது. அன்றைக்கு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கைக்கு எதிராக இருந்தது. ஆனால் இன்று அரசியல் வியூகங்கள் மாறியிருக்கின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலங்கையோடு நெருங்கி வருகிற புவிசார் அரசியலை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதன்மூலமாக இலங்கையிலே அமெரிக்காவின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புவிசார் அரசியல் சூழல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பேராபத்தாக முடிந்துவிடுமோ என்கிற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இலங்கை மீதான இந்தியாவின் ஆளுமை சீர்குலைந்து வருகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நரேந்திர மோடி கவலைப்பட்டதாக தோன்றவில்லை.

கடந்த 2013 இல் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்றக் கூடாது என்று சட்டமன்றத்திலே அ.தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் அக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்ததை இங்கு நினைவுகூற விரும்புகிறோம். ஆனால் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசே போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு உரிய தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தது.

தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆதரவாக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதியிருந்தார். இக்கோரிக்கையை நரேந்திர மோடி அரசு உதாசீனப்படுத்தியதோடு, இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு தமிழர்களின் நலன்களுக்கு விரோதமான தீர்மானத்தை ஆதரித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ‘ஏமாற்றம் அளிக்கிறது’ என்று பொத்தாம் பொதுவாக கூறி அறிக்கை வெளியிட்டு பிரச்சினையை பூசி மொழுக ஜெயலலிதா முனைந்திருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அ.தி.மு.க. அரசு கடுமையான நிலை எடுக்காததற்கு என்ன காரணம்? பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொண்டுள்ள ஜெயலலிதா தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு நரேந்திர மோடியை நம்பியிருக்கிற போது, இலங்கை தமிழர்களைப் பற்றியோ, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. இதைவிட 50 லட்சம் இந்திய, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை காட்டிக் கொடுக்கிற நயவஞ்சகப் போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

இலங்கை போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்துவதிலே மத்திய – மாநில அரசுகளின் இலங்கை தமிழர் விரோதப் போக்கை கண்டிக்காமல் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும்,தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சினையை திசைத்திருப்ப முயற்சி செய்திருக்கிறார். உண்மையிலேயே மத்திய பா.ஜ.க. அரசின் இலங்கைத் தமிழர் விரோத நடவடிக்கையை கண்டிக்க துணிவில்லாத காரணத்தால், காங்கிரஸ் ஆட்சியோடு இணைத்து பேசுவதைவிட ஒரு கோழைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. உண்மையிலேயே இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென மனதார விரும்பினால் மத்திய பா.ஜ.க. அரசு இலங்கையோடு சேர்ந்து தீர்மானத்தை ஆதரித்ததை கண்டித்து உடனடியாக கூட்டணியிலிருந்து விலக பாட்டாளி மக்கள் கட்சி தயாரா?

001002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *