தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 3.11.2015

கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 210 டி.எம்.சி. நீர் பெறுகிற நிலை ஏற்பட்டது. இதன்படி  மொத்த நீர் வரத்தில் தமிழகத்திற்கு 57.7 சதவீதம், கர்நாடகத்திற்கு 37.2 சதவீதம், கேரளாவுக்கு 4 சதவீதம், புதுச்சேரிக்கு 1 சதவீதம் என்று 4 மாநிலங்களும் பெறுகிற நீர் அளவில் விகிதாச்சாரத்தை இறுதி தீர்ப்பு உறுதியிட்டு கூறியது.

காவிரி நடுவர்மன்றம் தனது இறுதி தீர்ப்பில் பற்றாக்குறையை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதில் தெளிவாக அறுதியிட்டு கூறாததால் பல்வேறு பிரச்சினைகள் இன்றைக்கு எழுந்து வருகின்றன. காவிரி நடுவர் மன்றம் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டிருந்தால் பற்றாக்குறை காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை விரிவாக விளக்கி கூறியிருக்கலாம். பற்றாக்குறை நிகழ்ந்த பிறகு மாநிலங்கள் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. அது நிகழும் போதே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். இதையெல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் கவனிக்க வேண்டும் என்று விட்டுவிட்டது வியப்பாக இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் இந்த அம்சத்தைப் பொறுத்தவரை, காவிரி நடுவர்மன்றம் தனது பணியை முழுமையாக செய்யவில்லை. இதற்கான விதிமுறையை வகுத்தளித்திருக்கலாம். ஆனால் அதை செய்யாதது மிகுந்த துரதிருஷ்டவசமானதாகும்.

காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் காவிரி நீர் பாசன பங்கீட்டை முறைப்படுத்தி, நெறிப்படுத்தும் என்று காவிரி நடுவர்மன்றம் கூறுகிறது. காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. என்ன சட்ட சிக்கல் இருந்தாலும், பன்மாநில நீர் தகராறு சட்டத்தின்படி காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு இறுதியானது. அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்தக் கூடியது. 2002 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பிறகு உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் போல செயல்படுத்துவதற்கு உரியது என்பதை எவரும் மறந்துவிட முடியாது. ஆகவே, இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்று எந்த மாநிலமும் கூற முடியாது.

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவது தமிழகத்திற்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதியாகும். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு கடந்த 2013 மார்ச் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆணையிடுவதற்கு மனு செய்தது . இதுநாள் வரை ஆணை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் ஏன் தயங்குகிறது ? இந்நிலையில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகம் பெற வேண்டிய நீர் பங்கீடுகளை உச்சநீதிமன்றத்தின் தயவில் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த கவலைக்குரியதாகும். தமிழகத்திற்கு தர வேண்டிய 45 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது மிகுந்த வேதனையைத் தருகிறது. நியாயம் வழங்கப்பட வேண்டிய தமிழகம் இதன்மூலம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீரை வழங்குவதற்கு கர்நாடக அரசு வழங்காமல் சாக்குபோக்குகளைச் சொல்லி தடுத்து வருகிறது. எங்களுக்கு குடிநீர் பஞ்சம் இருப்பதாகக் கூறி மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று சொல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கும் இறுதி நீதிமன்ற தீர்ப்பிற்கும் விரோதமானதாகும். இதன்மூலமாக நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. இதை எவரும் அனுமதிக்க முடியாது.

கர்நாடகத்தில் கட்சி எல்லைகளைக் கடந்த காவிரி பொதுப் பிரச்சினையில் அங்கே ஆளுகிற அரசு தோழமை உணர்வோடு அனைவரையும் ஓரணியில் திரட்டி, பிரதமரிடம் கோரிக்கை வைக்க முயல்வதைப் போல அத்தகைய முயற்சிகளை ஜெயலலிதா ஏன் செய்யவில்லை ? குறைந்தபட்சம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மக்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுப்பதில் என்ன தயக்கம் ? எல்லாவற்றிலும் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, எதேச்சதிகாரமாக முடிவெடுத்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவால் ஜனநாயக முறைப்படி செயல்படாத முடியாத காரணத்தால் இன்றைக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அந்த பணியை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அமைப்பின் சார்பாக நாளை (4.11.2015) புதன்கிழமை அன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினரோடு நானும் பங்கேற்க இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை இணைக்க ஜெயலலிதா தவறியதை ஈடு செய்யும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் ஓரணியில் திரண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்காக குரல் கொடுப்போம்.

TNCC President s Statement - 3.11.2015-page-001TNCC President s Statement - 3.11.2015-page-002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *