தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 4.2.2016

275_JWYpvVs1-520x245ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்மட்டுமல்லாமல், கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அவர்கள் மீது எந்த லஞ்சப் புகார் வந்தாலும் அரசின் அனுமதி பெறாமல் வழக்கு தொடுக்க முடியாது என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அரசு இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள எந்த அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்கு தொடர அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு செல்லாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசாணை அமைந்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 197, அரசு ஊழியர்கள் தங்களது கடமையை நேர்மையாக செய்யும் போது அதற்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் வழக்கு தொடுக்கப்பட்டால் பாதுகாப்பு உண்டு என்று கூறுகிறது. அதேநேரத்தில் இப்பிரிவு சட்டவிரோதமாக குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணையின்படி உயர் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணை செய்ய தலைமைச் செயலாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது ஊழலுக்கு துணை போகிற நடவடிக்கையாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஊழலுக்கு துணைபோகிற பணியை சில அரசு உயர் அதிகாரிகள்தான் செய்து வருகின்றனர். அ.தி.மு.க. தலைமையைப் பொறுத்தவரை தமது அமைச்சரவை சகாக்கள் மூலமாக பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வந்தாலும், ஊழலுக்கு துணைபோகிற அதிகார வர்க்கத்தின் பங்களிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இதனடிப்படையில் எவராவது, எந்த அதிகாரி மீதாவது ஊழல் வழக்கு தொடுக்க முன்வந்தால் அதை தடுத்து செயலிழக்கச் செய்வதற்கு தமிழக அரசின் அரசாணை பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. இந்நிலை அமலுக்கு வந்தால் அதிகார வர்க்கத்தின் ஊழலையோ, அரசியல்வாதிகளின் முறைகேடுகளையோ, லஞ்ச வேட்டையையோ தடுத்து நிறுத்துகிற வகையில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்க சட்டரீதியாக அதிகாரம் பெற்ற அமைப்புதான் ‘லோக் ஆயுக்தா”. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து சிறைக்கு அனுப்பிய பெருமை கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவுக்கு உண்டு. லோக் ஆயுக்தா என்ற பெயரை கேட்டாலே ஊழல் அரசியல்வாதிகள் நடுங்குகிற அளவுக்கு கர்நாடக மாநில லோக் ஆயுக்தா செயல்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது.

ஆனால் அதேநேரத்தில் 19 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டாலும் தமிழகத்தில் அமைப்பதற்கு ஜெயலலிதா அரசு தயாராக இல்லை. மடியில் கனம் இருப்பதால் லோக் ஆயுக்தா அமைப்பதை அ.தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது.

லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் போது, லோக் ஆயுக்தாவையும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் கடுமையாக அ.தி.மு.க. எதிர்த்தது. அதனடிப்படையில் லோக் ஆயுக்தாவை மாநிலங்களே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. லோக்பால் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா நிறைவேற்றுவதற்கு ஜெயலலிதா அரசு கடுகளவு முயற்சியை கூட இதுவரை செய்ததில்லை.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என்பதற்கு மாறாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது சட்டவிரோதமானதாகும்.

இது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் வருகிற 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த ஆட்சி அமையும்போது லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி, ஊழல் செய்கிற அதிகார வர்க்கத்தையும், அரசியல்வாதிகளையும் தண்டிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என உறுதி கூறுகிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *