தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 04.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 04.12.2016

maxresdefaultதமிழக அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படாத காரணத்தால் பல்வேறு உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்வதும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை முற்றுகையிடுவதும், சாலை மறியல் நடத்துவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன. இதனால் மக்களிடையே அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். கடந்த காலங்களில் தர்மபுரியில் 13 பச்சிளம் குழந்தைகளும், விழுப்புரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் என மாவட்ட மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை இல்லாமல் இறந்துவிடுகிற கொடுமை நடந்தது. இதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியை செலவிடாமல் வேறு வகைகளில் செலவழிக்கப்பட்டதாக காண்பிக்கப்படுவதால் மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்கள் வாங்கப்படாமல் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் ஏழைஎளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்டு ஆங்கில நாளேட்டில் வெளிவந்த (TIMES OF INDIA) ஆய்வு ஒன்றின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 79 சதவீத மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு செல்வதையே விரும்புகிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் 1700 பேரை ஆய்வு செய்ததில் தனியார் மருத்துவமனையில் அதிகமாக பணம் செலவழித்தாலும் 79 சதவீதத்தினர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை. அரசு மருத்துவமனைகளில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் பல்வேறு நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு தவறான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் மிகவும் பின்தங்கிய, தலித் மக்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
சமீபத்தில் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை நிலையில் இருப்பதற்காக மத்திய அரசு விருது வழங்கியிருக்கிறது. இந்த விருதை பெற்று புளகாங்கிதம் அடைகிற தமிழக சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளின் அவலநிலையை போக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? தமிழகத்தில் மருத்துவத்துறையில் நிலவுகிற யதார்த்த நிலையை சீர்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டிய பொறுப்பை தமிழக அரசு தட்டிக் கழிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *