தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.1.2016 

Featured4சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்காக டிசம்பர் 30 ஆம் தேதி இரவே போயஸ் தோட்ட இல்லத்தில் தொடங்கி  திருவான்மியூர் வரை ஜெயலலிதா செல்லும் சாலை நெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் தொடர்ச்சியாக அடுக்கி வைத்ததைப் போல வரலாறு காணாத வகையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த வழியாக ஜெயலலிதா பயணம் செய்த போது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகிற நிலை ஏற்பட்டது.

பொதுக்குழு நடைபெறுகிற இடத்தை நோக்கி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றக்கோரி அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் திருவல்லிக்கேணி, அபிராமபுரம் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர். ஆனால் புகாரை பதிவு செய்யாமல் புகார் கொடுத்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அறப்போர் இயக்க இளைஞர்கள் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பேனர்களை அகற்றுகிற முயற்சியில் ஈடுபட்டனர். இதை சகித்துக் கொள்ளாத அ.தி.மு.க.வினர் அந்த மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் முன்பாகவே கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டதோடு அந்த மூன்று இளைஞர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான அக்தர் அகமது, முதுகலை மின் பொறியியல் பட்டதாரி ஜெயராம் வெங்கடேசன், நியூயார்க் பல்கலைக் கழக பட்டதாரி சந்திரமோகன் ஆகிய இளைஞர்கள் சட்;டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதைவிட ஒரு சர்வாதிகார நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. எது பொது சொத்து ? ஜெயலலிதாவை துதிபாதி வைக்கப்படுகிற டிஜிட்டல் பேனர்கள் பொது சொத்தா ? காவல்துறையினரின் அனுமதியோடுதான் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்போல டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் மற்ற அரசியல் கட்சிகள் அனுமதி கேட்டால் வழங்கப்படுமா ? ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்கட்சிக்கு ஒரு சட்டமா ? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே ஒரு கேலிக் கூத்தாகும்.

அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறபோது, டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அகற்ற முற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும்.  எனவே, முன்அனுமதியின்றி சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை துணிச்சலுடன் அகற்றிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை பாராட்டாமல்  இருக்க முடியாது. தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத, அராஜக ஆட்சியை அகற்றுவதற்கு இளைஞர்கள் தீவிரமாக முனைப்புடன் ஈடுபட வேண்டுமென்பதற்கு இந்த மூன்று இளைஞர்கள் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்கள்.

எனவே, சட்டத்திற்குட்பட்டு செயல்பட்ட அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுதலை செய்யப்படவில்லையெனில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக போர்க்கோலம் பூண்டு நீதிக்காக நிச்சயம் போராடுவார்கள்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *