மோடிக்கும், அதானிக்கும் நெருக்கம் அதிகம் இருப்பதால்தான் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் பிரதமர் பயணம் செய்கிற அதே விமானத்தில் அவரும் பயனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.2.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.2.2016 

Presentation2சமீபத்தில் கோவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20 மாதங்களாக மத்திய பா.ஜ.க. அரசில் ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூட கூற முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி தத்தளித்துக் கொண்டிருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார். உடனே நாம் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இன்றைய ஆங்கில நாளேடு ஒன்றில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேலின் மகள் அனர் ஜெயேஷ் பட்டேல் மிகப்பெரிய நில அபகரிப்பு ஊழலில் சிக்கியிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

இச்செய்தியின்படி சிங்கங்களின் சரணாலயம் உள்ள பகுதியில் 400 ஏக்கர் அரசு நிலம் ஒரு சதுரஅடி ரூ.1.50க்கு அடிமாட்டு விலைக்கு முதலமைச்சரின் மகள் அனர் ஜெயேஷ் பட்டேலுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக இருந்து, வருவாய்த்துறை பொறுப்பையும் நிர்வகித்து வருகிற ஆனந்திபென் பட்டேல் முதலில் 400 ஏக்கர் நிலத்தை தமது மகளுக்கு வழங்கியிருக்கிறார். மேலும் 172 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி, அதை தொழில் செய்வதற்கான விலக்கு அளிக்கும் ஆணையை பிறப்பித்திருக்கிறார். குஜராத் அரசால் வழங்கப்பட்டுள்ள 572 ஏக்கர் நிலமும் அந்தப் பகுதியில் ஏறத்தாழ 1200 கோடி ரூபாய் சந்தை மதிப்பு இருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இதை ஊழல் இல்லையென்று சொன்னால் வேறு எது ஊழல் ?

அதேபோல குஜராத் மாநிலத்தில் முந்த்ரா பகுதியில் 18,375 ஏக்கர் விவசாய நிலத்தை 30 வருட குத்தகைக்கு ஒரு சதுர மீட்டர் 11 ரூபாய்க்கு அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுத்துள்ளதாக சி.ஏ.ஜி. பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி ஆட்சி செய்த 2002 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதற்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ? இத்தகைய அபார பொருளாதார வளர்ச்சிக்கு நரேந்திர மோடி காரணமில்லாமல் வேறு யார் காரணம் ? மோடிக்கும், அதானிக்கும் நெருக்கம் அதிகம் இருப்பதால்தான் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் பிரதமர் பயணம் செய்கிற அதே விமானத்தில் அவரும் பயனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை யாரும் மறுக்க முடியாது. நரேந்திர மோடிக்கு பின்னாலே அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் செயல்பட்டு ஆதாயம் தேடி வருகிறார்கள்.

மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத்தை 2013 இல் ஆதரித்து நிறைவேற்ற துணையாக இருந்த பா.ஜ.க., 2014 இல் ஆட்சிக்கு வந்ததும் அவசர சட்டம் கொண்டு வந்தது அம்பானி, அதானி மற்றும் குஜராத்தில் நில அபகரிப்பு ஊழலில் சிக்கியுள்ள அனர் ஜெயேஷ் பட்டேல் போன்றவர்கள் பயனடையத்தான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா ?

எனவே, பா.ஜ.க. எந்த ஊழலையும் செய்யாத யோக்கிய சிகாமணிகள் நிறைந்த கட்சி என்று பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து கொள்வது எந்தளவுக்கு போலித்தனமானது என்பதற்கு தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிற ஊழல்களே சாட்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *