உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும்  வாழ்த்துச் செய்தி – 7.3.2016 

உலக மகளிர் தினம் :

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு, சுசேதா கிருபலானி, அருணா ஆசப்அலி, இந்திரா காந்தி போன்றவர்கள் அளப்பரிய பங்காற்றியதை எவரும் மறந்துவிட முடியாது. இந்த நாட்டின் பிரதமராக அன்னை இந்திரா காந்தியும், குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல், மக்களவை சபாநாயகராக மீராகுமார் போன்றவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை தர வேண்டும் என்று சட்டம் நிறைவேற்ற அன்னை சோனியா காந்தி எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிவார்கள். மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேற்றுவதற்கு தமது ஆட்சியை பணயம் வைத்து செயல்படுத்தியவர் அன்னை சோனியா. சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களிலிருந்து பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ஆணாதிக்க சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

தமிழகத்தில் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கிற சூழலில் மதுவின் கொடுமையால் பெண்கள் எந்தளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டு, அழிவுப்பாதைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை நினைக்கிறபோது நாம் அடைகிற வேதனைக்கு அளவேயில்லை. மதுவின் பிடியிலிருந்து தமிழக பெண்களை மீட்டெடுத்து, பாதுகாக்க உலக மகளிர் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம். இதுவே உலக மகளிர் தின செய்தியாக கூற விரும்புகிறேன்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *