தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07.10.2016

Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07.10.2016
 தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் 
கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கடலில் மூழ்கடித்து, கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்கிற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுவரை தமிழக மீனவர்களின் 115 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, திரும்ப வழங்கப்படாமல் உள்ளன. இந்தச் சம்பவங்களை கண்டித்தும், ஜெகதாப்பட்டிணம் பகுதியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது நீண்டகாலமாக தொடர்ந்து இருந்து வருகிறது என்றாலும் கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யும்போது படகுகளையும் விடுவிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்தபிறகு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் உரிமைகளைக் காக்க மத்திய அமைச்சரவையில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று இராமேஸ்வரத்தில் நடந்த கடல் தாமரை மாநாட்டில் வாக்குறுதி அளித்த பா.ஜ.க.வினர் கடந்த 28 மாதங்களாக நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகின்றனர். அதேபோல, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை இருமுறை நடத்தப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் பிரச்சினை தீர்க்கப்படாமல் பல்வேறு கொடுமைகளுக்கு தமிழக மீனவர்கள் ஆளாகி வருகின்றனர்.
நமது மீனவர்கள் காலம் காலமாக அந்தப் பகுதியில் மீன் பிடித்து வருகிற உரிமையை தொடர்ந்து பெற்றிருக்கிறார்கள். இந்த உரிமையை மறுக்கிற வகையில் இலங்கை கடற்படையினர் கைது செய்வது, உடமைகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உடனடியாக மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினையில் தி.மு.க. உண்ணாவிரதம் 
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுகிற வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்து வருகிறது. இதை கண்டித்து தஞ்சையில் இன்று (7.10.2016) தி.மு. கழக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *