Picture1கடந்த நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு துறையாக சீரழிக்கப்பட்டு இன்றைக்கு கல்வித்துறையை சீரழிக்கிற மிகப்பெரிய பாவ காரியம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகத்தரம் வாய்ந்த சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களாக டாக்டர் ஏ.எல். முதலியார், என்.டி. சுந்தரவடிவேலு, டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்கள் பொறுப்பு வகித்து கல்வித்துறையை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக்காட்டினார்கள். இன்றைக்கு சென்னை பல்கலைக்கழகம் போன்ற 8 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு நடைபெறுகிற திரைமறைவு பேரங்களை கேள்விப்படுகிறபோது நெஞ்சு வெடிக்கிற அளவுக்கு நமக்கு வேதனை மிஞ்சுகிறது.

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகம், திருநெல்வேலி மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஒளிவுமறைவற்ற அணுகுமுறை கையாளப்படவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படையான தன்மையை உருவாக்கி, சாதனை படைத்த டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன் அவர்களே தொடுத்துள்ளார் என்கிறபோது கல்வியாளர்கள் எத்தகைய வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களுக்கான தேடல் குழுவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனுக்கு உறவினரான ஓய்வு பெற்ற அரசியல் துறை பேராசிரியரும், தனியாருக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்றுகிற பாலசுப்பிரமணியம் என்பவரை நியமித்து, அவர் மூலமாக பல்வேறு திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்தான் அரசின் ஆட்சிக்குழு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ரூபாய் எட்டு கோடி பேரம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கான தேடல் குழுவிலும் இவர்தான் இடம் பெற்றிருக்கிறார். அரசு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இல்லாத ஒருவரை அரசின் ஆட்சிக்குழு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. சாதாரண தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றுகிற கரு. நாகராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகதாஸ் ஆகியோர் மதுரை பல்கலைக்கழக தேடல் குழுவில் உறுப்பினர்களாக அமைச்சரின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் பெண்கள் கல்லூரி முதல்வராக உள்ள சுப்புலட்சுமியை அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் தேர்வுக்கு அரசு பிரதிநிதியாகவும், கன்வீனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழாக துணை வேந்தர்களாக பொறுப்பு வகித்த திருமதி. பங்கஜம், டாக்டர் மீனா போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வராக இருந்தவர் கன்வீனர், துணை வேந்தர்களாக இருந்தவர்கள் உறுப்பினர்கள் என்கிற அதிசயம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் நடந்து வருகிறது.

இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கிற பணியை முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம், முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றுகிற ராம்மோகன்ராவ், அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் திரைமறைவு பேரங்களை இணைந்து நடத்தி வருகின்றனர்.

இதன்மூலமாக பெரும் தொகையை திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் 2010 பரிந்துரைப்படி 10 வருடம் பல்கலைக்கழக பேராசிரியராகவோ, கல்லூரி முதல்வராகவோ பணியாற்றிய ஒருவரைத்தான் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால் இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத கல்வியாளர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் யாரிடம் முட்டிமோடிக் கொள்வது என தெரியாமல் இறுதியாக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி அநீதிக்கு எதிராக போராடுகிறார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக சமீபகாலமாக மாறி வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. அக்கல்லூரியில் ஏற்கனவே 95 துணை பேராசிரியர்கள் நியமிப்பதில் பெரும்தொகை சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு கைமாறியிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அதேபோல தற்போது 45 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கு தலா ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டு வருகிறது. இந்த லஞ்ச வேட்டையை திரைமறைவாக மிகமிக கச்சிதமாக செய்வதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. இவர்களுடைய செயல்பாடுகள் காரணமாக புகழ்பெற்ற தமிழக கல்வித்துறை சீரழிந்து, சின்னாபின்னமாகி இன்றைக்கு படுபாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது மூன்று துணை வேந்தர்கள் நியமிப்பதற்கான தேடல் குழுவின் பரிந்துரைகள் ஆளுநர் ரோசையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு துணை வேந்தர்கள் பரிந்துரைகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அவசர அவசரமாக சமர்ப்பிக்கப்பட வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இத்தகைய லஞ்ச வேட்டை பின்னணியில் தேர்வு செய்யப்படுகிற துணை வேந்தர்களுக்கான பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும்.

அப்படி நிராகரிக்கப்படவில்லையென்றால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டில் ஆளுநருக்கு தொடர்பிருக்கிறதோ என்கிற ஐயம் அனைருக்கும் எழுந்துவிடும் என எச்சரிக்கிறோம்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *