Picture1தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு வட்டத்தில் உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். இந்த கடன் தொகையை வட்டியுடன் 6 மாதத்திற்கு ஒரு தவணை என 6 தவணைகள் செலுத்தியுள்ளார். இதில் இரண்டு தவணைகள் மட்டும் பாக்கி இருந்தது. அதையும் அறுவடை முடிந்தவுடன் செலுத்திவிடுவதாக வங்கி அதிகாரிகளிடம் உறுதி கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட விவசாயி பாலனை தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 20 பேரும், பாப்பாநாடு காவல்நிலைய ஆய்வாளர் குமரவேல் தலைமையில் வந்த பத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், நிதி நிறுவன வழக்கறிஞர்கள் இருவரும் தடுத்து நிறுத்தி, டிராக்டரை பறிமுதல் செய்ய முற்பட்டனர். இந்நிலையில் விவசாயி கடுமையாக தாக்கப்பட்டு டிராக்டரை அவரிடமிருந்து பறித்து எடுத்து  சென்றுவிட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிதி நிறுவனங்கள் விவசாயிகளிடம் வலியவந்து மாய வலையை வீசி, கடன் வலையில் சிக்க வைத்து, பிறகு குரல் வளையை நெறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளில் ஒருவராக பாலன் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது, கடும் கண்டனத்திற்குரியது. தனியார் லேவாதேவிக்காரர்களிடமோ, நிதி நிறுவனங்களிடமோ கடன் பெற்று விவசாயிகள் கடும் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2014-15 இல் ரூ.8 லட்சம் கோடி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயித்து கடன் வழங்கப்பட்டது. அதுவும் 4 சதவீத சலுகை வட்டியில் வழங்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்களின் வலையில் சிக்கிய விவசாயி  பாலன் தாக்கப்பட்டதில் சம்மந்தப்பட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் ஆகியோர் மீது இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் நடந்த கிராமத்திற்கு அடுத்த கிராமத்தில் உள்ள தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர். வைத்தியலிங்கம் இதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே, உடனடியாக காவல்துறை ஆய்வாளர் குமரவேல் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன்  ரூ.4 லட்சம் கோடியை தாண்டி, வங்கிகளின் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்கி வருகிறது. அதேபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் மத்தியில், ஏழை விவசாயி பாலன் வாங்கிய சொற்ப கடனுக்காக தாக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சாதாரண ஏழைஎளியோர் பெற்ற கடனை கெடுபிடி செய்து, மிரட்டி  வசூலிப்பதற்கு தனியார் நிதி நிறுவனங்களுக்கு காவல் துறையினர் உதவி செய்கிற போக்கு இனியும் தொடரக் கூடாது. அப்படி தொடருமேயானால் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பு ஏற்படுமென அ.தி.மு.க. ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *