நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியை மகா கூட்டணி பெற்றுள்ளது. சாம, பேத, தான, தண்ட என அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு பகீரத முயற்சிகளை செய்த பா.ஜ.க. கூட்டணிக்கு மரண அடி கிடைத்திருக்கிறது.  36 பேரணிகளில் பங்கேற்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் நிராகரித்துள்ளார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தல் என்பது நரேந்திர மோடிக்கும், நிதீஷ்குமாருக்கும் நடப்பதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மண்ணின் மைந்தனாக இருந்து பீகார் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முயற்சியை இளம் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டதன் விளைவாக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம், காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மேற்கொண்ட சூறாவளி சுற்றுப்பயணம் தான் என்பதை முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிற நிதீஷ்குமாரே உறுதிபடுத்தி கூறியிருக்கிறார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்விக்கு பிறகு தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தோல்வி கிடைத்திருக்கிறது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 18 மாதங்களில் இத்தகைய வீழ்ச்சி ஏன் ஏற்பட்டது ? இதற்கு என்ன காரணம் ? பா.ஜ.க. ஆட்சி வந்தால் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று கூறி பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்த நரேந்திர மோடி மீது இன்றைக்கு மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வளர்ச்சியைப் பற்றி பேசி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைவர்கள் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். எந்த பாவத்தையும் செய்யாத அப்பாவி சிறுபான்மையினர் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என்று வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். படைப்பாளிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. கட்சியினரிடையே நிலவுகிற சகிப்பின்மைதான் அனைத்து வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்திருப்பதை உணர்ந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மீது வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். எதிர்ப்பை தெரிவிக்க இதைத்தவிர வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை.

இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழலாம். ஆனால் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று ஒரு மத்திய அமைச்சர் பேசுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் ? இந்த உணவைத்தான் உண்ண வேண்டும். இதை உண்ணக் கூடாது என்று சொல்வதற்கு பா.ஜ.க.வுக்கு என்ன உரிமை இருக்கிறது ? பீகார் தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என்று தேசிய தலைவர் அமீத்ஷாவே பேசுகிறார் என்று சொன்னால் பா.ஜ.க. எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? இந்தியாவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து பாசிச ஆட்சியை நடத்துவதற்கு பா.ஜ.க. முயலுகிறது என்பதைத்தான் இத்தகைய பேச்சுக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஹரியானா மாநிலத்தில் 10 வயதுக்கு உட்பட்ட இரு தலித் சிறுவர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுமை நடந்தது. இதுகுறித்து மத்திய அமைச்சர் வி.கே. சிங் ‘நாய் மீது யாராவது கல்லெறிந்தால் கூட அதற்கும் பா.ஜ.க.தான் காரணம் என்று சொல்வார்கள்” என்று கூறியிருப்பதைவிட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

அதேபோல பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பா.ஜ.க.வை ஆட்டுவிக்கிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதன் மூலம் இவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அடையாளம் காட்டுவதற்கு முன்பாக பீகார் மக்கள் தங்களது தேர்தல் தீர்ப்பின் மூலம் இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு பாடம் புகட்டியுள்ளார்கள்.

பா.ஜ.க.வுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் எத்தகைய வெற்றியை பெற முடியும் என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. தமிழகத்தில் நரேந்திர மோடியின் நல்லாசியோடு நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டால் பீகாரில் கிடைத்த வெற்றி தமிழகத்திலும் கிடைக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை.

9.11.2015-page-001 9.11.2015-page-002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *