தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12.12.2015

தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 இல் தொடங்கி, டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அறியாத ஒன்றல்ல. நவம்பர் 1 இல் தொடங்கி, டிசம்பர் 2 ஆம் தேதி வரை 32 நாட்களில் 1333 மி.மீ. மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் நவம்பர் 1 முதல் 23 வரை 1131 மி.மீ. மழை பெய்துள்ளது. மீதி 374 மி.மீ. தான் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை பெய்துள்ளது. இதில் நவம்பர் 24 முதல் 29 வரை ஒரு சொட்டு மழை கூட சென்னை மாநகரில் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலங்களில் வெள்ளப்பெருக்கை தடுக்க தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

தமிழக அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் நவம்பர் 17 ஆம் தேதி 18,000 கனஅடி நீரும், டிசம்பர் 2 ஆம் தேதி 29,000 கனஅடி நீரும் திடீரென முன்னறிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட காரணத்தால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 2 ஆம் தேதி 29,000 கனஅடி நீரை திடீரென திறப்பதற்கு முதல் நாள் டிசம்பர் 1 ஆம் தேதி வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரை மட்டுமே குறைவாக திறந்தது ஏன் ?  இப்படி திடீரென அதிகளவில் மறுநாள் தண்ணீரை திறந்தால் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாமா ? இத்தகைய அசாதாண சூழலில் செயல்பட கட்டுப்பாட்டு அறையைக் கூட அமைக்காமல் பொறுப்பற்ற முறையில் நிர்வாக கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும்.

மக்களுக்கு அதிக பாதிப்புகளை எற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரிநீரை திறக்க வேண்டும் என்பதை அணையை தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் மட்டும்தான் தெரிந்திருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் எந்த அணையையும் திறப்பதும், மூடுவதும் முதலமைச்சர் ஆணையின் அடிப்படையில் அதிகார குவியல் காரணமாக நடக்கிறபோது செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு கீழ்நிலையில் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செயலாளரிடம் கோரிக்கை விடுக்க, அவர் தலைமைச் செயலாளருக்கு சொல்ல, அவர் முதலமைச்சரோடு தொர்பு கொள்ள – இப்படி தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடிய காரணத்தால்தான் திறக்க வேண்டிய நேரத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளை திறக்காமல் காலம் தாழ்த்தி திறக்கப்பட்டது. அரசின் மெத்தனப் போக்கு காரணமாகத் தான் சென்னை மாநகரில் இத்தகைய மனித பேரவலம் நிகழ்ந்ததை எவராது மறுக்க முடியுமா ?

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியிலிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்படுகிற அதேநேரத்தில் சென்னை, திருவள்;ர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை முன்கூட்டியே அறிய முடியாத முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாமா ? இத்தகைய வெள்ளப்பெருக்கு காரணமாக இதன்மூலம் வந்த 67,000 கனஅடி நீரோடு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட 29,000 கனஅடி நீரும் சேர்ந்து இறுதியாக 1 லட்சம் கனஅடி நீர் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்கள் அடித்துச் செல்லப்பட்டதற்கு ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டும். இதிலிருந்து ஜெயலலிதா தப்ப முடியாது.

அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தூர் வாரப்படாத காரணத்தால் வெள்ளப்பெருக்கை கடல் முகத்துவாரங்களில் உள்வாங்கி, அனுப்ப முடியாமல் திரும்பவும் வெள்ள நீர் குடியிருப்புகளை தாக்குகிற அவலநிலை ஏற்பட்டதற்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் பொறுப்பு ? செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாததற்காக இத்தகைய விலையை மக்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ள பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டதோடு, ஏழைஎளிய, நடுத்தர மக்கள் தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினருடைய இழப்பு  லட்சக்கணக்கான கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இதுகுறித்து விவாதிக்க குறைந்தபட்சம்  அமைச்சர்களை கூட்டி விவாதித்தாரா ? பல்வேறு துறை செயலாளர்களை அழைத்து பேசினாரா ? தலைமை செயலகத்திற்கு வருகை புரிகிற ஜெயலலிதா, ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கே பணியாற்ற அவரது உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்பது உண்மையா ? அவரது உடல்நிலை மற்றும் மனோநிலை காரணமாக அவரை எவரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் தமிழக அரசு இயந்திரம் சிதைந்து, சீர்குலைந்து, சின்னாபின்னமாகி உள்ளது. அதனுடைய பாதிப்பைத்தான் தமிழகம் சந்தித்து வருகிறது.

எனவே, இத்தகைய காரணங்களால் மாநிலங்களில் அரசமைப்பு இயந்திரம் செயல்படாத போது அதை ஒழுங்குப்படுத்த குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநரிடமிருந்து அறிக்கையை பெற்று அதன்மூலமாக தமிழகத்தில் ஒரு செயல்படுகிற நிர்வாகத்தை ஏற்படுத்த முடியும். இதை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக ஆளுநருக்கு இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்ட விதிகளின்படி செயல்படாமல் ஜெயலலிதா அரசு முடங்கிக் கிடக்கிறது. இதனால் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து ஜெயலலிதா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார். இதன்மூலம் தமிழக மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்திருக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்கிற வகையில் ஜெயலலிதா பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மாற்று ஏற்பாடுகளை அரசமைப்பு சட்டத்தின்படி செய்வதற்கு தமிழக ஆளுநர் டாக்டர் ரோசய்யா முன்வர வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *