தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 13.1.2016

maxresdefault-300x199 2015-16 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கான நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்து செலவு ரூ.100 உட்பட ரூ.550 உயர்த்தி ஆக மொத்தம் ரூ.2,850 கிடைக்கும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கரும்பு விவசாயிகள் கடந்த சில வருடங்களாக அனுபவித்து வரும் பல்வேறு இன்னல்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்கள், தமிழக அரசு பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். எந்த கோரிக்கையாக இருந்தாலும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே தயாராக இருந்ததில்லை. எனவேதான் தன்னிச்சையாக எவரையும் கலந்தாலோசிக்காமல் கரும்புக்கான விலையை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நடப்பாண்டில் டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் இந்த அறிவிப்பு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநில அரசின் பரிந்துரை விலையாக 2012-13 இல் ரூ.650, 2013-14 இல் ரூ.550, 2014-15 இல் ரூ.450 என படிப்படியாக குறைத்து தற்போது ரூ.550 என கடந்த 4 ஆண்டுகளில் ஒரு டன்னுக்கு வெறும் ரூ.200 மட்டுமே உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது யானை பசிக்கு சோளப் பொரியை போடுவது போல ஆகும். கரும்பு விவசாயிகளின் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காத ஒரு முதலமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது. அதனுடைய பலனைத்தான் கரும்பு விவசாயிகள் இன்றைக்கு அனுபவித்து வருகிறார்கள்.

கரும்பு விவசாயிகளை நெருக்கடியிலிருந்து கரும்பு விவசாயிகளை மீட்டெடுக்க எத்தனால் உற்பத்தியை பெருக்கினால் பிரச்சினை ஓரளவு தீர்க்க முடியும் என்று அனைவருமே கருதுகிறார்கள்.  சர்க்கரை ஆலைகளில் கரும்பை பிழிந்து சர்க்கரை உற்பத்தி செய்யும்போது எஞ்சியுள்ள ‘மொலாசஸ்” எனப்படும் உபபொருளை நொதிக்க வைத்து எரிசாராயம்; தயாரிக்கப்படுகிறது. இந்த எரி சாராயத்தை மேலும் சுத்தப்படுத்தி எத்தனால் எனப்படும் எரி திரவம் உற்பத்தி செய்ய முடியும். எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து அனைத்து வாகனங்களிலும் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

நம் நாட்டில் எத்தனால் கலப்பு ஐந்து சதவீதம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அதை அடைய முடியவில்லை. தற்போது 10 சதவீதம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தினால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை உரிமையாளர்கள் வழங்குவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை உருவாக்குவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழகத்தில் 46 சர்க்கரை ஆலைகளில் 8 ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 320 கிலோ லிட்டர் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 96,000 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அந்த உற்பத்தி கூட மதுபான உற்பத்திக்கு தேவைப்படும் எரி சாராயமாக மாற்றப்படுகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது. எதுவுமே நடைமுறைக்கு வராமல் இருப்பதற்கு காரணம் 11 மதுபான ஆலைகளின் கொள்ளை லாபத்திற்காக 42 சர்க்கரை ஆலைகளும் நட்டத்தில் தள்ளப்பட்டு பேரழிவில் சிக்கியுள்ளன. இதற்குக் காரணம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாயநோக்குடன் பின்பற்றி வரும் மதுபான கொள்கைதான் என்பதை எவருமே மறுக்க முடியாது.

தமிழகத்தில் கரும்பு ஆலைகள் மாநில அரசின் பரிந்துரை விலையை கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்காததால் ரூ.1,500 கோடி நிலுவையில் உள்ளது. இத்தொகையை விவசாயிகள் பெறுவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? பரிந்துரை விலையை அறிவிக்கிற தமிழக அரசு அதை விவசாயிகளுக்கு பெற்றுத் தராமல் அலட்சியமாக இருப்பது ஏன் ?  தமிழகத்தைப் போல உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைக்காக ஒரு டன் கரும்புக்கு மானியமாகவும், வாட் உள்ளிட்ட வரி ரத்து மூலமாகவும் 400 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடைமுறையை தமிழக அரசு பின்பற்ற மறுப்பது ஏன் ? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டுமென்று கோரியிருந்தோம். அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க ஜெயலலிதா அரசு தயாராக இல்லை.

எனவே, தமிழகத்திலுள்ள 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்கிற கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாக மாறிவிட்டது. இவர்களது கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிற அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தை கரும்பு விவசாயிகள் புகட்டுவார்கள் என்பது உறுதி.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *