தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை 13.5.2016

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எதற்கும் ஊழல் என்று தொடர்கதையாக கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்ட காரணத்தால் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே ஒரு ஊழல் கட்சி என்ற களங்கத்தை பெற்றிருக்கிறது. இதுகுறித்து ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவரே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை இழந்தவர் என்பதால் ஊழலை தடுக்கிற வகையில் எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. இதனால் அவரது அமைச்சரவையில் ஊழல் செய்வதற்காகவே ஐந்து அமைச்சர்கள் கொண்ட ஊழல் குழு அமைக்கப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி சார்பாக பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை எவரும் மறுக்க முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டில் அடித்ததாக கூறப்படுகிற கொள்ளைகளுக்கு சிறந்த அத்தாட்சியாக திகழ்வது தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை. இத்துறையில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் முன்னின்று நடத்தியவர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.  அமைச்சர்  பதவி  கிடைப்பதற்கு   முன்பு   வெல்ல வியாபாரம்  செய்து  கொண்டிருந்தவர்.  அன்று  வெல்லக்கட்டிகளை  அடுக்கி  கொண்டிருந்தவர்  இன்றோ  ஆயிரம்  கோடிகளுக்கும்  அதிகமாகச்  சேர்த்து  தங்கக்  கட்டிகளை   அடுக்கிக்  கொண்டிருப்பதாக  வெளியான   தகவல்களை   அடுத்து தேர்தல் ஆணையத்தையே  திகைப்பில்  ஆழ்த்தியுள்ளார்.   எத்தனையோ   அரசியல்வாதிகளை   தமிழகம்   கண்டுள்ளது.   ஆனால்,   வெறும்  ஐந்தாண்டுகால  அளவில்  ஆயிரம்   கோடிகளுக்கும்   அதிகமாகச்  சம்பாதிக்கும் அளவுக்கு   பெரும்  அதிகார துஷ்பிரயோகம்   செய்த   அரசியல்வாதிகளைக்   கண்டது  தற்போதைய   அ.தி.மு.க  ஆட்சியில்தான்.

1946-லேயே   உருவான   தமிழக  நெடுஞ்சாலைத் துறை  இந்தியாவிலேயே   தனிச் சிறப்பு  வாய்ந்தது.    தமிழகத்தில்   சுமார்  5,000  கி.மீ   நீளத்திற்கு   தேசிய  நெடுஞ்சாலைகளும்,   சுமார்  57,300 கி.மீ  நீளத்திற்கு  மாநில  மற்றும்   மாவட்ட  சாலைகளும், சுமார்  1,30,000   கி.மீ  நீளத்திற்கும்  அதிகமாக  பஞ்சாயத்து  சாலைகளும்   உள்ளன.    தற்போது   அ.தி.மு.க  அரசோ,   மத்திய  அரசே   வலிந்து  செயல்படுத்த  விரும்பிய பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும்,  மேம்பாலத் திட்டங்களையும்  தடுத்து  நிறுத்திவிட்டு   தமிழகத்தின்  நெடுஞ்சாலைத் துறையை  பெரும்  தேக்க நிலைக்குக் கொண்டு   வந்துவிட்டது.  2011-ல் அ.தி.மு.க  ஆட்சிப் பொறுப்பேற்றபோது   தமிழகத்தில்   தேசிய  நெடுஞ்சாலைகளின்  மொத்த நீளம்   4,974  கி.மீ.  தற்போதோ   5004 கி.மீ தான்.  ஐந்தாண்டு  ஆட்சியில் தமிழகத்தில்   வெறும்  30  கி.மீ தான்  அதிகரித்துள்ளது.   கடந்த  5  ஆண்டுகால   ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக   எந்தவொரு  திட்டமும்  நெடுஞ்சாலைத்  துறையில் அறிமுகப்படுத்தப்படவுமில்லை;  செயற்படுத்தப்படவுமில்லை. மொத்தத்தில்  நெடுஞ்சாலைத் துறையை அமைச்சர்  எடப்பாடி  பழனிச்சாமி    25  ஆண்டுகள்   பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

ஆனால்,   தனக்கு   எல்லா  திட்ட  ஒதுக்கீடுகளிலும்   பங்கு   கிடைக்குமாறு    வழிகளை  யோசித்து யோசித்து  செயல்படுத்தி  பணிகளின்   தரத்தையும்   பாழ்படுத்தி   துறையையும்  சீரழித்துவிட்டார்.

திட்டங்களை   பொறுப்பாக   நிறைவேற்றுவதில்   அக்கறைகாட்டி  அதில்   ஓரளவு  ஆதாயத்தையும்  பெற்றுக்கொள்ளும்  அரசியல்வாதிகள்   ஒருவகை. ஆனால்,   திட்டங்களோ,  அதன்  மூலமாக  மக்கள்  பெறும்   பலன்களோ   முக்கியமில்லை.    எனக்கான  ஆதாயம்   மட்டுமே   முக்கியம்,   பணமே  பிரதானம்.    இதனால்   எவ்வளவு  தரம் தாழ்ந்து  திட்டங்கள்  நிறைவேறினாலும்  கவலையில்லை   என  கொலை  வெறியோடு    கொள்ளையடித்த  ஆட்சித் தலைமைக்குத்  தளபதியாக   செயல்பட்டு  நெடுஞ்சாலைத் துறையை    நோஞ்சான்   துறையாக்கியவர்தான்  எடப்பாடி  பழனிச்சாமி.

கடந்த   ஐந்தாண்டுகளில்   முடக்கப்பட்ட   நெடுஞ்சாலைத் திட்டங்கள்  மற்றும்   மேம்பாலத் திட்டங்களின்   பட்டியல்  பெரிது.    குறிப்பாக   கீழ்கண்டவற்றை   சொல்லலாம்.

சென்னை   வெளிவட்டச் சாலை, சேலம்  நகர  மேம்பாலப் பணி, சென்னை  போரூர்  மேம்பாலம்

சென்னை  வேளச்சேரி  மேம்பாலம்.

அதிமுக ஆட்சியில் இவை மட்டுமின்றி கீழ்க்கண்ட  தேசிய நெடுஞ்சாலை வேலைகள் முடக்கப்பட்டுள்ளன.

  1. சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை – ரூ.1860 கோடி முதலீடு

  2. சென்னை – திருப்பதி (தே.நெ.205) – திருநின்றவூரிலிருந்து திருத்தணி வரை

  3. மதுரை – ராமநாதபுரம் – ராமேஸ்வரம் சாலை

  4. திருவனந்தபுரம் – கன்னியாகுமரி சாலை

  5. விக்கிரவாண்டி – கும்பகோணம் சாலை

  6. தேசிய நெடுஞ்சாலை 46 – ஆறு வழி சாலை

  7. திருச்சி புறவழி சாலை (தே.நெ.67)

  8. திண்டுக்கல் – தேனீ – குமுளி சாலை (அகலப்படுத்துதல்)

இந்த வேலைகளின் மொத்த மதிப்பீடு ரூ.11000 கோடி.

ஜெயலலிதாவின் விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்ட 42 திட்டங்களில் செயலாக்கப்பட்டவை  ஏழு  திட்டங்கள் மட்டுமே. இன்னும் தொடங்கப்படாதவை 35. இது போன்ற திட்டங்களையெல்லாம்  முடக்கிப்போட்டுவிட்டு  என்னதான்  செய்தது தமிழக  அரசு? ஊழலை   ஒருமுகப்படுத்தி- சிந்தாமல்  சிதறாமல் – Centralized  Corruption  என்ற  மையப்படுத்திய   பகல் கொள்ளையை   பட்டவர்த்தனமாக    நடைமுறைப்படுத்தியது தான்   அ.தி.மு.க ஆட்சியாகும்.

பல்லாண்டுகளாக   நெடுஞ்சாலைத் துறையில்  நிலவிய    மரபுகளை    குழிதோண்டிப் புதைத்து    குறிப்பிட்ட   ஒருசில   மிகப்பெரிய    ஒப்பந்ததாரர்களைக் கொண்டே  அனைத்து  வேலைகளையும்   நிறைவேற்றுவது  என்ற   நடைமுறையைப்  புகுத்தியது  அ.தி.மு.க  அரசு.   பிற மாநிலங்களில்  சிறிய ஒப்பந்தங்களுக்குக்கூட மின்னணு  ஒப்பந்தமுறை (E-Tender)  நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும்  தமிழக  நெடுஞ்சாலைத் துறையில்  மட்டும்   ஒருசில  ஒப்பந்தங்களைத் தவிர  அனைத்து  ஒப்பந்தங்களும்  காகிதத்தில்  எழுதிப்போடுகிற   பழைய  முறையே  நடைமுறையில்   உள்ளது.   ஏனென்றால்   அமைச்சர்  சொல்கிறவருக்;கே  ஒப்பந்தம்  வழங்குவதற்கு   இதுதான்    வசதியான  வழிமுறை.   மின்னணு  ஒப்பந்த  முறையில்   எங்கிருந்து  வேண்டுமானாலும்,   யார் வேண்டுமானாலும்  ஒப்பந்தம் போட்டுவிட  முடியும்.  ஆகவே,    எந்தத்  தொழில்நுட்ப   முன்னேற்றமும்  நெடுஞ்சாலைத் துறைக்குள்  வந்துவிடாமல்   பார்த்துக் கொள்ளப்பட்டது.

நூற்றுக்கணக்கான   ஒப்பந்ததாரர்களுக்கு    பணிகளை   பகிர்ந்து தந்த  நடைமுறையை  மாற்றி  ஒன்றிரண்டு   ஒப்பந்ததாரரை  அழைத்து    ஒட்டுமொத்த  வேலைகளையும்   ஒப்படைத்து  ஒரே  மூச்சில்   கமிஷனை    கறந்துவிடுவது   அ.தி.மு.க   அரசின்  பாணியாகிவிட்டது.     இதன்மூலம்    சட்டத்திற்கும்,  தர்மத்திற்கும்   புறம்பான   அநீதியைக் கூட  சிறிதும்  சிரமமில்லாமல்   செய்து  வருகிறது    அ.தி.மு.க   அரசு.    இந்த  வகையில்,   தானே   பினாமியாக  உருவாக்கிய   நிறுவனங்களையும்,   நபர்களையும்    கொண்டு –  ஜெயலலிதாவிற்கு  கப்பம்  கட்டியதுபோக    கணிசமாக   பணத்தை   களவாடிக்  கொண்டதாக  எடப்பாடி   பழனிச்சாமி மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது.

திட்டச் செயல்பாடுகளில்   அக்கறையோ,   கண்காணிப்போ  அறவே  இல்லாமல்,   தனக்குத்  தோதான  தன்மானமில்லாத  தலைமைப்பொறியாளரை நியமித்துக் கொண்டதன்மூலம்  தரங்கெட்ட  சாலைகளையும்,   பலகீனமான  பாலங்களையும்  தமிழக  மக்களுக்கு  தந்துள்ளார்  எடப்பாடி  பழனிச்சாமி.  நெடுஞ்சாலைத்  துறையில்  நிதி  ஒதுக்கீடு  என்பது  திட்டப் பணிகளுக்கு  என்றும்,   திட்டம் சாரா  பணிகளுக்கு  என்றும்  இரண்டாகப்  பிரித்து  வழங்கப்படுகிறது.    திட்டப்பணிகள்   மூலம் சாலைகளை  அகலப்படுத்தவும்,  புதிய  பாலங்களைக்  கட்டுவதற்கும்   என்று    தேசத்திற்கு  நிரந்தர  உள்கட்டமைப்பினை   ஏற்படுத்துவதற்கு  என்ற  வகையில்  வருபவை. திட்டம் சாராத  பணிகள்  ஏற்கனவே  தோற்றுவிக்கப்பட்ட  உள்கட்டமைப்பு  வசதிகளை   பராமரிப்பதற்கு  என்ற  வகையில்  வருபவை. திட்டம்  சாராத  பணிகள்   குறைந்த  முக்கியத்துவமும்  திட்டப் பணிகள்  அதிக  முக்கியத்துவமும்  பெறுகின்றன.    திட்டம்  சாராத  பணிகளில்   சாலைகளில் மண்  வேலை செய்தல்,   முள் செடிகளை  அகற்றுதல்,  குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்தல் போன்றவை  அடங்கும். திட்டப் பணிகளுக்கான  நிதி  ஒதுக்கீடு   சட்டமன்றத்தின் மூலமாகச்  செய்யப்படுகிறது.    எனவே,   அந்தந்தத்  திட்டங்களுக்கான  ஒதுக்கீட்டினைச்   சரியாகச்  செலவு  செய்யவேண்டியது  துறை  அதிகாரிகளின்   பொறுப்பு.

ஆனால்,   ஒவ்வோர்  ஆண்டும்   சுமார்  ரூ.2000 கோடி அளவிற்கு  திட்டப் பணிகளுக்கான   ஒதுக்கீட்டை  திட்டம்  சாராப்  பணிகளுக்கு  மடைமாற்றம்  செய்து,  வேண்டிய   அதிகாரிகளின்   துணையுடன்   கடந்த  5 ஆண்டுகளில்   அமைச்சர்  ரூ.10,000 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த   ஊழலை   எளிதில்  மூடி மறைக்கும் விதமாக    முள்செடி  வெட்டியதாகவும்,   மண்வேலை  செய்ததாகவும்  கணக்குக்  காட்டப்பட்டுள்ளது.

இந்த  வேலைகளுக்கான   ஒப்பந்தங்கள்  யாவும்    சிறிது சிறிதாகப்  பிரிக்கப்பட்டு,  செய்தித் தாள்களில்  ஒப்பந்த  அறிவிக்கை  வெளியிடாமலும்,   யாருக்கும்  தெரியாத   வகையிலும்    தந்திரமாகி  மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  சாலைகளில்   தரம்  குறைந்தாலும்   பாலங்களையாவது மனச்சாட்சியுடன்  கட்டுவதுதான்   இதுவரையிலுமான  நடைமுறை.   ஏனெனில்  பாலங்கள்    பலகீனப்படுவதன் மூலமான  விபத்துக்கள,;; , பயங்கர   உயிர்ச் சேதங்களை   ஏற்படுத்திவிடும்.    ஆனால்,   அதிலும்   ஈவு இரக்கமின்றி   கமிஷன்  அடித்ததன்  அடையாளம்தான் 2014-இல் ஓசூர் அருகே  சூளகிரிப் பாலம்  கட்டிகொண்டிருக்கும்போதே  இடிந்து  விழுந்தது  அனைவரும்  அறிந்ததே.

இப்படி   பெரிய  சாலைகள்,   மேம்பாலங்களில்  மட்டுமின்றி  சாலை  பராமரிப்புப்  பணிக்கான  பெயிண்ட்  அடிப்பது,   முள்செடிகளை  அகற்றுவது,   சைன் போர்டுகள்  வைப்பது,   பாலங்களுக்கு  இருபுறமும்   தகரங்கள்  அமைப்பது   என  சகலத்திலும்    ஊழல்தான்.  ஒருங்கிணைந்த  சாலைகள்  உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்  (CRIDP)  மூலமாக  சாலைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு  சாலைகளின்   ஒருங்கிணைந்த  வளர்ச்சியை உறுதிசெய்வது  என்று   திட்டமிடப்பட்டது.    இதன்மூலமாக  ஆண்டொன்றுக்கு   சுமார்  ரூ.3000 கோடி செலவிடப்படுகிறது.    இந்தப் பணிகள்  யாவும்  திட்டம்  சார்ந்தவை  என்பதால்   பாலங்கள்  கட்டுவதும்   சாலைகளை அகலப்படுத்துவதும்  முக்கிய  இடம்பெறுகின்றன.  இந்தத் திட்டத்தில்  தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும்   பகுதிகளுக்குச்  சாலை  வசதிகளை  மேம்படுத்துவதற்கு  10 சதவிகிதம் அளவிற்கு  மொத்த  ஒதுக்கீட்டில்  பிரித்து  வழங்கப்படுகிறது.   சாலைப் பாதுகாப்பிற்கு  என்று  ஏறத்தாழ  10  சதவிகிதம்  ஒதுக்கீடு   பிரிக்கப்பட்டு,    சாலைகளில்  எச்சரிக்கைப்  பலகைகள்  முதலானவை   வைக்கப்படுகின்றன.   இந்திய  சாலைகள்  குழுமத்தின் (Indian Roads  Congress)   வழிகாட்டுதல்கள்   எதையும்  பின்பற்றாமல்   தரம்குறைந்த  பொருள்களை   சீனா  போன்ற  நாடுகளிலிருந்து   இறக்குமதி  செய்து  பல  போலி  ஒப்பந்ததாரர்களை  ஏற்படுத்தி   தமிழகம்  முழுக்க   தரமற்ற   எச்சரிக்கைப்  பலகைகள்,   சாலையில்  வண்ணக்கோடுகள்   வரைதல்   போன்றவை   மூலமாக    ஆண்டுக்கு   ரூ.300 கோடி  வீதம்   5 ஆண்டுகளில வேண்டிய  அதிகாரிகளின்  துணையோடு ரூ.1500 கோடி   கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு  வருடத்திற்கு   நெடுஞ்சாலைத் துறையின்   திட்ட மதிப்பீடு   சுமார்   ரூ.5,000 கோடி   என்ற  வகையில்   நேரடி  கமிஷன்  20  சதவீதம்  பெற்றதில்  ஐந்தாண்டுகளில்   சுமார் ரூ.4,000  கோடி  கொள்ளையடித்துள்ளது  அ.தி.மு.க  ஆட்சி.   இதைத்  தலைமைக்கு   ஒரு  தளபதிபோல் செயல்பட்டு   பெற்றுத் தந்த  வகையிலும்,  பினாமி  நபர்களையும்,  நிறுவனங்களையும்  நியமித்துக் கொண்டவகையிலும்   எடப்பாடி   பழனிச்சாமியும்   ஏகத்துக்கு   பணத்தை   சூறையாடியுள்ளார்  என்பதுதான்   நாம்  கவனிக்க  வேண்டியதாகும்.  சாலைப் பணிகளில்  பயன்படுத்த வேண்டிய அளவுக்கு  தாரை     பயன்படுத்தாமலும்,   சாலையின்  கனம்  மதிப்பீட்டில்  உள்ளபடி   இல்லாமல்  குறைத்து போடுவதன் மூலமாகவும்,  சில  நேரங்களில்   சாலையின்  சில  பகுதிகளை  விட்டுவிட்டுப் போடுவதன் மூலமாகவும்   ஒப்பந்தக்காரர்களோடு    ஒன்றுசேர்ந்து கொண்டு    நெடுஞ்சாலைத் துறைக்கு  வந்த பணம்  கோடிக் கணக்கில்   கொள்ளையடிக்கப்பட்டது.   இருக்கிற திட்டங்கள்  இனிமேல்  தேவையில்லை  என்ற  நிலை  வந்தபோதும்   கொள்ளையடிப்பதற்கு  அவைதான்   வசதியாக  இருக்கின்றன  என்ற  காரணத்தால் அந்தத் திட்டங்களை விடாமல்  செயல்படுத்தி வந்தார்  அமைச்சர்   பழனிச்சாமி.

ஒருங்கிணைந்த  சாலை  உள்கட்டமைப்பு  மேம்பாட்டுத் திட்டம்  இதற்கு   ஒரு  சிறந்த  உதாரணம்.  2015 -2016-இல்  இந்தத் திட்டத்திற்கு  தேர்வு செய்யப்பட்ட  சாலைகளில்   நூற்றுக்கணக்கானவை    எந்தப் போக்குவரத்துமில்லாமல்,   சாதாரண  பழுதுபார்த்தல்  மூலமாகவே  சரி  செய்யப்பட   முடிந்தவை.   ஆனால்,   அந்தச் சாலைகளையெல்லாம்  தேர்வு  செய்து  தவறான  தகவல்களைத்  தந்து  சுமார்    ரூ2800 கோடியைப் பெற்று   வீணாக்கியவர்  எடப்பாடி  பழனிச்சாமி.

பொறியாளர்களை  எப்படி  ஊழல்  வளையத்திற்குள்   சிக்கவைப்பது என்பதற்கு   அமைச்சர்  கைகொண்ட  அணுகுமுறைதான்  இடமாற்றத்துக்கு  பெரும் பணத்தைப்  பெறுவதாகும். தமிழக   நெடுஞ்சாலைத் துறையில்   சுமார்  1000   உதவிப்பொறியாளர்  பதவிகளும்,  450   உதவிக்கோட்டப்பொறியாளர்  பதவிகளும்,  130  கோட்டப்பொறியாளர்களும்  உள்ளன.    இதில்  ஆண்டுதோறும்    மூன்றில்  ஒரு  பங்கினர்   இடமாற்றத்துக்கு  உள்ளாவார்கள்.  இடமாற்றத்துக்கு  நியமித்தத் தொகை   உதவிப்பொறியாளர்  என்றால்  10  இலட்சம்,  உதவிக்கோட்டப்பொறியாளர்  என்றால்  15 இலட்சம்,  கோட்டப்பொறியாளர்  என்றால்   1  கோடி என்பதாகும்.   எனவே,   டிரான்ஸ்பர்  மூலமாக  மட்டுமே  5 ஆண்டுகளில்   தோராயமாக  ரூ.200 கோடி கைமாறியுள்ளது.  இதைவிட பகல் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.

இதன்மூலம்   இடமாற்றலில்   மட்டுமே   ஒரு கல்லில்   இரண்டு  மாங்காய்  என்று   காரியம்  சாதித்துக்  கொண்டார்.    தனக்குக்  கிடைக்கும்  லஞ்சப்  பணத்தின் மூலமான  லாபம்    ஒரு  மாங்காய்   என்றால்   தனக்கு    இவ்வளவு   பணத்தை   கொடுத்து  இடமாற்றல்  பெற்றதால்    அப்படி  இழந்த  பணத்தை  மீட்டெடுக்க  விரும்பும்   அப்பொறியாளர்களை   ஊழலுக்கு  உடந்தையாக்கிக் கொhள்வது  மற்றொரு  மாங்காயாகும்.

வரைமுறையற்ற   கொள்ளைகளுக்கு   வாய்ப்பாக   நெடுஞ்சாலைத் துறையை   பயன்படுத்திக் கொண்டார்    என்பதற்கு    பல  சிறந்த   எடுத்துக்காட்டுகள்   உள்ளன.       வண்டலூர்   முதல்  தச்சூர்  வரையிலான    புறவழிச்சாலை   60 கி.மீ. இதற்கு   ஒரு கி.மீ சாலைபோட  ஆகும் செலவு அதிகபட்சம்  10 கோடி.    ஆனால்,     அமைச்சரின்   ஆட்கள்     போட்டு  பெற்ற   மதிப்பீடோ   50 கோடி.    தமிழ்நாடு  சாலை  மேம்பாட்டு  நிறுவனம்  (TNRDC)  மூலமாக   சென்னை  மாநகருக்கு 60 கி.மீ  நீளத்தில்  வெளி  வட்டச் சாலை   அமைக்கத்   திட்டமிடப்பட்டது.  இதில்  முதல்  கட்டமாக  வண்டலூரிலிருந்து (தே.நெ. 45 )  நெமிலிச்சேரி  (தே.நெ 205)  வரை 30 கி.மீட்டருக்கு  1081 கோடி    மதிப்பீட்டில்   சாலை  அமைப்பது  என்றும்,   மூன்றாண்டுகள்    கட்டுமான  காலத்திற்கு  ஆண்டுக்கு   ரூ.100 கோடி  என – ரூ.300 கோடியும்,   அதன்பிறகு   15 ஆண்டு காலத்திற்கு,  ஆண்டுக்கு  ரூ.140 கோடி   என,    ரூ.2100 கோடி    ஒப்பந்ததாரருக்கு  மொத்தம்  ரூ.2400  கோடி  வழங்குவது  எனவும்   ஒப்பந்தம்  செய்யப்பட்டது.   இதேபோன்று,    பகுதி – 2 ,  நெமிலிச்சேரியிலிருந்து மீஞ்சூர்  வரை  30  கி.மீட்டருக்கு    இரண்டாவது  கட்டமாகப்  பணிகளை  முடிப்பது   என்றும்  ஒப்பந்தமிடப்பட்டது.   பகுதி – 2  பணிகள்   பாதி  அளவில்   முடிந்து  நடைபெற்று  வருகின்றன.

பகுதி – 1  பணிகள்   முடிக்கப்பட்டதாகச்  சொல்லி  28.08.2014-இல்   முதலமைச்சர்  ஜெயலலிதா  அவர்களால்   துவங்கியும்   வைக்கப்பட்டது.  ஆனால்,   வண்டலூரில்   மேம்பாலமும்  நசரேத்பேட்டை  மேம்பாலமும்   முடிவடையாமல்  உள்ளன.    இந்தப்  பணிகள்  முழுவதுமாக   முடித்தால்தான்   ஒப்பந்ததாரருக்கு   ஆண்டொன்றுக்கு  ரூ.140 கோடி  கட்டணம்  வழங்க வேண்டும்.

ஆனால்,   பணி  முடிவடையாமலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  வராமலேயே ஒப்பந்ததாரருக்கு   ஆண்டுதோறும்    ரூ.140 கோடி   வழங்கப்பட்டு  வருகிறது.   இதனால்   எடப்பாடி   எவ்வளவு  பயனடைந்தாரோ??

 இதுபோல்  சாலை  மேம்பாட்டிற்கு  என  உலக வங்கி  தந்த    பணத்தை  எல்லாம்  உருப்படி  இல்லாமல்  ஒப்புக்குச்  சப்பாக   ஆள்  நடமாட்டமில்லாத  சாலைகளை  அகலப்படுத்திக்  காண்பித்து   கொள்ளையடித்துள்ளார்  எடப்பாடி  பழனிச்சாமி.   குறைந்தபட்சம்    தன்  தொகுதி மக்களின்   நீண்ட நாள்   கோரிக்கையான   ஓமலூர்  தொடங்கி  சங்ககிரி  வரையிலான   இருவழிச்  சாலையை  நான்குவழிச் சாலையாக   மாற்றுவதையாவது  நிறைவேற்றியிருக்கலாம்   எடப்பாடி  பழனிச்சாமி.   தமிழ்நாடு  சாலை மேம்பாட்டுத் திட்டம்  (TNRSP)  மூலமாக  தமிழகத்திலுள்ள சாலைகளை  உலக  வங்கி  நிதியுதவியுடன்   மேம்பாடு  செய்வதற்கு   முடிவு செய்யப்பட்டது.    இதில்  சுமார்   1650 கோடி   தமிழக  அரசின்  பங்காகவும்,     சுமார்   2850  கோடி  உலக வங்கி நிதியுதவியாகவும்,   மொத்தம்  ரூ.4500 கோடி    என்று   மதிப்பீடு  செய்யப்பட்டது.   இத்திட்டத்தில்  427 கி.மீ   சாலைகளை    இருவழிச்  சாலைகளாகவும்,   140 கி.மீ  சாலைகள்  நான்குவழிச் சாலைகளாகவும்   மேம்படுத்தவும்  597 கி.மீ  நீள  சாலைகளை   செயல்பாட்டு  அடிப்படையில்  பராமரிக்கவும்  முடிவு  செய்யப்பட்டது.   சாலைகள்  மேம்பாட்டுப்  பணிகளை   10  தொகுதிகளாகப்  பிரித்து  பொறியியல்   கொள்முதல்   மற்றும்  கட்டுமானம்  என்கிற  வகை   ஒப்பந்தத்தில்  பணிகளை  செயல்படுத்துவது  என்றும்  முடிவு செய்யப்பட்டது.   இந்த   10  ஒப்பந்தங்களின்   விவரங்கள்   பின்வருமாறு:

மேற்கண்ட  ஒப்பந்தங்களில்   அனைத்து   ஒப்பந்தங்களும்  15 லிருந்து  17  சதவிகிதம்  மதிப்பீட்டு  விலைக்கு மேல்   ஒப்பந்ததாரருக்கு  வழங்கப்பட்டுள்ளன.   இதன்மூலமாக  சுமார்   ரூபாய் 180 கோடி எடப்பாடிக்கு மடைமாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.    அதுமட்டுமல்ல,     சாலைகளை   மேம்படுத்துவதற்கு   தேர்ந்தெடுக்கப்பட்டதில்  பல  சாலைகள்   எந்தப் போக்குவரத்தும்  இல்லாமல்   இருப்பவையாகும்.      குறிப்பாக,   கீழ்கண்ட சாலைகளைச் சொல்லலாம்.

திருச்செங்கோடு- பரமத்தி, மோகனூர்-நாமக்கல், மல்லிக்கரை – திருச்செங்கோடு-இராசிபுரம், சட்ராஸ் -செங்கல்பட்டு – காஞ்சிபுரம்  சாலை. கடன் வாங்கி  உலக வங்கி   போடுகின்ற  நிபந்தனைகளுக்கெல்லாம்  கட்டுப்பட்டு   இந்தச் சாலைகளை  மேம்படுத்த வேண்டிய   உடனடித் தேவை  ஒன்றுமில்லை,  அமைச்சர்  பழனிச்சாமிக்கு  பங்கு  வேண்டும் என்பதைத் தவிர !!

எடப்பாடி  தொகுதிக்குள்  வலம்  வந்தால்   ஏராளமான    குண்டும்  குழியுமான  சாலைகளைக்  காணலாம்.   இந்த  சாலை   வழியாகப்  பயணப்பட்டுத்தான்  தன்னை  மீண்டும்   தேர்ந்தெடுக்கக்  கோரி  வாக்குச் சேகரித்து   வருகிறார்   பழனிச்சாமி.    சென்ற முறை   வெற்றி பெற்றதையடுத்து  தொகுதி  மக்களுக்கு   தந்த   வாக்குறுதிகளை  காற்றில்  பறக்கவிட்டு,  தன்னை  மக்கள்  சந்திக்க  முடியாத   உயரத்தில்    நின்றுகொண்டு  யாருக்கும்   உதவ  மறுத்த  பழனிச்சாமி  தற்போது  தொகுதி  மக்களின்  கடும்  எதிர்ப்பை    சந்தித்து   வருகிறார்.

கொள்ளையடித்த   கரன்சிகளை  அள்ளிவிடுவதன் மூலம்  வெற்றிக் கனியை  எட்டிப் பறித்துவிடலாம்  என  எடப்பாடி    பழனிச்சாமி  கணக்குப் போடுகிறார். எடப்பாடி  பழனிச்சாமிக்கு   ஓட்டுப்போடுவது   என்பது  தங்களுக்குத் தாங்களே  தற்கொலை  செய்து கொள்வதைப் போன்றது  என்பதை  நன்றாக  அனுபவப்பூர்வமாக  உணர்ந்துள்ள  தொகுதி மக்கள்  அவர்  தங்கள்  பகுதிக்கு  வாக்குக்  கேட்டு  வருவதையே  தடுத்து  நிறுத்தி தன்மானத்துடன் எதிர் கேள்வி   கேட்டு   திருப்பி  அனுப்பி  வருகிறார்கள்.

பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி,   திருவள்;ர்,   இராமநாதபுரம்  என்று    ஒவ்வொரு  கோட்டமாக  சாலைப் பராமரிப்பை  தனியாருக்கு  தாரைவார்த்து  வருகிறார் பழனிச்சாமி.   இந்த  ஒப்பந்தம் காரணமாக   சாலை  பராமரிப்புப்   பணிகளில் ஈடுபட்டிருந்த  சாலைப் பணியாளர்களும்,  சாலை  ஆய்வாளர்களும்   அரசுப் பணியினை  இழக்கும்    நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர்.   என்னதான்    உலக  வங்கித்  திட்டமாக  இருந்தாலும்   தேசிய  மற்றும்  உலக அளவிலான  ஒப்பந்ததாரரை   தேர்ந்தெடுப்பது  போன்று  தோற்றத்தை  ஏற்படுத்தினாலும்  எடப்பாடியாருக்கு வேண்டப்பட்ட  ஒருசில  தனியார்  நிறுவனங்களுக்கே பணிகள்   எப்படி  கிடைக்கின்றன  என்பது  யாருக்கும்  புரியவில்லை.

இதேபோன்று   அரசு  விலை  விகிதத்தின்படி  மதிப்பீடு  தயாரிக்கப்பட்டு   ஒப்பந்தம்  கோராமல்,  ஒப்பந்ததாரரையே  மதிப்பீடு தயாரிக்கச்  செய்து   ஒப்பந்தம் கோருகிற  EPC ( Engineering Procurement and Construction) நடைமுறையை துறையில் புகுத்தி  நூதனமாக  கொள்ளையடிப்பதும்  தொடர்கிறது.

தேசிய  நெடுஞ்சாலைப்  பணிகள்  அனைத்தும் EPC முறையில்  பலநூறு  கோடிகளுக்கு   டெண்டர் விட்டு அதிலும்  பணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.

தமிழக அமைச்சரவையில் ஊழல் செய்வதில் கைதேர்ந்த நிபுணர்களாக நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி என பட்டியல் நீண்டுகொண்டே போகிற அளவுக்கு ஊழலில் ஊறித் திளைத்தவர்களைத் தான் ஜெயலலிதா அமைச்சர்களாக்கி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியிருந்தார். இதனுடைய பலனை தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெடுஞ்சாலை கொள்ளைக்காரர்களிடமிருந்து தமிழகம் காப்பாற்றப்படுவதற்கு மே 16 இல் நடைபெறுகிற தேர்தல் ஒரு அறிய வாய்ப்பு. இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க. ஆட்சியை கூண்டோடு அகற்றுகிற வகையில் வாக்காளப் பெருமக்கள்  தங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *