தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி – 14.1.2016

தமிழக மக்களின், குறிப்பாக விவசாயிகளின் விழாவாக பொங்கல் திருநாள் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தையும், குறிப்பாக நெல் தானியங்களை போற்றும் திருவிழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வருகிற பொங்கல் திருவிழாவை தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியுமா என்கிற ஐயம் நம்மிடையே இருந்து வருகிறது.

சமீபத்தில் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாக மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதில் விவசாயிகளுடைய பாதிப்பை வார்த்தைகளால் வடிக்க இயலாது. பொங்கல் பண்டிகையோடு இணைந்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையின் காரணமாக தமிழக மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேபோல கரும்பு சாகுபடி செய்கிற விவசாயிகளுக்கு உரிய விலையை தமிழக அரசு அறிவிக்காத காரணத்தால் மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் திருநாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுமா என்கிற கேள்வி எழுந்தாலும் தமிழக மக்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள ஆற்றல் படைத்தவர்கள் என்ற அடிப்படையில் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். நமது வாழ்க்கையில் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பொங்கல் திருநாள் என்பது மகிழ்ச்சியோடு கொண்டாடுவதும், நாம் வணங்கிப் போற்றுகிற மாடுகளை வணங்குவதும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். அந்த வகையில் பல்வேறு இன்னல்களுக்கிடையே அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Check

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *