தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு வந்து குவிந்துவிட்டதாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் நெடுஞ்சாலைத்துறை எவ்வளவு பின்தங்கிய மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பதைத்தான் இந்த செய்திகள் படம்பிடித்து காட்டுகின்றன.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-14.3.2016

Featuredதமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் கடந்த சில வருடங்களாக செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டு வருகின்றன என்ற செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் 2011 இல் வெளியிடப்பட்ட முதல் கொள்கை அறிவிப்பில் 4,974 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலை துறையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்போது கடைசியாக வெளியிடப்பட்ட கொள்கை அறிவிப்பில் இதன் தூரம் 5,004 கி.மீ. தூரம் மட்டுமே அதிகரித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 30 கி.மீ. சாலைகள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது என்ற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாநில அரசின் ஒத்துழைக்காத, அலட்சியப்போக்குதான் காரணம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள்; உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல, நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசோடு ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித் துறையிடமிருந்து தண்ணீர் பெறுவது கூட கடும் சிரமமாக இருப்பதாகவும், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பு மாநில அரசு அதிகாரிகளுக்கு இல்லாமல் இருப்பதுதான் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு விஷயங்களில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் திட்டத்தின் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழக அரசின் ஒத்துழைக்காத போக்கு காரணமாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் முடக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. அவற்றில் குறிப்பாக சென்னை – திருப்பதி, திருச்சி – கரூர், திருச்சி – சிதம்பரம், விழுப்புரம் – பாண்டிச்சேரி – நாகப்பட்டிணம் மற்றும் விக்கிரவாண்டி – தஞ்சாவூர் – கன்னியாகுமரி போன்ற நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அவற்றில் முன்னேற்றம் காணப்படாமல் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அக்கறையையும் இதுவரை காட்டியதில்லை.

இதுபோன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்கிற போக்கு தமிழக அரசிடம் இல்லாததுதான் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணம் என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல, மாநில நெடுஞ்சாலைகள் 2011 இல் 10,764 கி.மீ. தூரம் கொண்டிருந்தது 2016 இல் 11,752 கி.மீ. தூரமாக உயர்ந்து வெறும் 988 கி.மீ. தூரம் சாலைகள்தான் முழுமைப் பெற்றது என்கிற தகவல் நமது அதிர்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. இதில் மாவட்ட சாலைகளின் தூரத்தையும் சேர்த்ததினால்தான் இந்த இலக்கு கூட அடைய முடிந்திருக்கிறது என்பது இன்னும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது தமிழ்நாட்டில் 2011 இல் 62,017 கி.மீ. தூரம் கொண்டிருந்த நெடுஞ்சாலைகள் 2016 இல் 62,294 கி.மீ. அளவுக்கு உயர்ந்து வெறும் 270 கி.மீ. தூரம் தான் முன்னேற்றம் காண முடிந்துள்ளது. இதைப் பார்க்கிறபோது தமிழ்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்கிற நோக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு வந்து குவிந்துவிட்டதாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் நெடுஞ்சாலைத்துறை எவ்வளவு பின்தங்கிய மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பதைத்தான் இந்த செய்திகள் படம்பிடித்து காட்டுகின்றன.

கடந்த காலத்தில் ரூ.2,427 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட சேது சமுத்திர திட்டம், துறைமுகம் – மதுரவாயல் 19 கி.மீ. உயர்மட்ட சாலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.700 கோடி செலவு செய்யப்பட்ட பிறகு 2012 இல் முடக்கி வைத்த ஜெயலலிதா ஆட்சியில்தான் தற்போது நெடுஞ்சாலை திட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று ஆர்ப்பரித்துப் பேசிய ஜெயலலிதா ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களின் கதி என்ன என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *