தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 13.11.2016

Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

                பிரதமர் நரேந்திர மோடி  ரூபாய் 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து கடந்த ஆறு நாட்களாக நாட்டு மக்கள் படுகின்ற தொல்லைக்கு அளவே இல்லை.   பாரத பிரதமரின் அறிவிப்பு வெளி வந்தது முதல் மக்கள் ஏடிஎம், வங்கிகள் முன்பாக அலைமோதிக் கொண்டு காத்துக் கொண்டிருக்கின்ற அவலம் தொடர்கதையாகி வருகிறது.   மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம் மற்றும்  வங்கிகள்  செயல்படாமல் உள்ளது.    நீண்ட வரிசையில் நான்கு மணி நேரம்,  ஐந்து மணி நேரம் என காத்திருந்தும் ரூபாய் ஆயிரம் நோட்டுக்களை மாற்ற முடியாத கொடுமையை கண்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.    இதனால் வங்கிகள் முன்பாக வாக்குவாதங்கள், சச்சரவுகள் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்கெடுகிற நிலை ஏற்பட்டுள்ளது.   நீண்டநேரம் வரிசையில்  நின்று பலர் மயங்கி விழுந்துள்ளதோடு, ஒருவர் மரணம் ஏற்படுகிற பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
                நாட்டு மக்களிடையே புழக்கத்தில் உள்ள ரூபாய் 500,  1000 நோட்டுக்களில்  86 சதவிகிதம் 16 லட்சம் கோடி ரூபாய் என்று  கூறப்படுகிறது.   இவ்வளவு பெரிய தொகையை ஒரு நொடிப்பொழுதில்  செல்லாது  என  பிரதமர் அறிவிக்கிற போது அதற்குரிய முன்னேற்பாடுகளையோ,  அதனால்  ஏற்படுகிற  விளைவுகளையோ,  கடுகளவும்  கவலைப்படாமல் அறிவித்திருப்பதை விட, ஒரு பொறுப்பற்ற செயல்  வேறு  இருக்க முடியாது.   இந்த அறிவிப்பின் மூலமாக நாட்டில் நெருக்கடி நிலை நிலவுகிறதா?   இராணுவ ஆட்சி நடைபெறுகிறதா?  என்கிற சந்தேகம் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.  ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துவிட்டு புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது எந்த வகையில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று தெரியவில்லை.
                புதிய ரூபாய் 500,  1000 நோட்டுக்களை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்கு தொழில் ;நுட்ப வசதி தற்போது இல்லாத காரணத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  இதை சரி செய்ய மூன்று வாரங்களுக்கு மேலாகும் என்று நிதியமைச்சர் அருன்ஜெட்லி கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.   புதிய நோட்டுக்களை எளிதாக பரிமாற்றம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிதியமைச்சர் இப்படி கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.
                தமிழகத்தில்  உள்ள விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், உணவகங்கள், காய்கறி வியாபாரிகள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக  பாதிக்கப்பட்டு  பெருத்த பதட்டத்தில் இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.  இது குறித்து தமிழக அரசு இதுவரை கவலைப்பட்டதாகவோ,  மாற்று ஏற்பாடுகள்  ஏதாவது  செய்ததாகவோ, எந்த செய்தியும் இல்லை.
தமிழக அரசிற்குட்பட்ட மின்சார வாரியம், மாநகராட்சி வரி வசூல், கூட்டுறவு கடைகளில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்கு பழைய ரூபாய் நோட்டுக்களையே பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.   இதற்கு தமிழகம் முழுவதும் பரவியுள்ள கூட்டுறவு வங்கிகளை சிறிய அளவிலான பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்.    ஏடிஎம்களில்,  வங்கிகளில்  மக்கள் நெரிசலை  தவிர்ப்பதற்காக  வங்கி உயர் அதிகாரிகளோடு பேசி மக்களிடையே எழுந்துள்ள சிரமங்களைப்  போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களும்  தமிழக அரசு உடனடியாக அறிவுருத்தல் வழங்க வேண்டும்.
                இது ஏதோ மத்திய அரசு சம்பந்தப்பட்டது.,  மாநில அரசுக்கு இதில் பங்கில்லை என்று தமிழக அரசு பாரா முகமாக இருக்கக் கூடாது.   எனவே, உடனடி நடவடிக்கைகள் எடுத்து  எந்த தவறையும் செய்யாத அப்பாவி மக்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கும் துல்லிய தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்குழுவாக சென்று  அந்தந்த மாவட்ட  ஆட்சித் தலைவரை  நாளை (14.11.2016 திங்கட்கிழமை)  காலை  11 மணி அளவில்  சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்படும்.   இதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவரை வலியுறுத்துகிற பணியை காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக  செய்ய வேண்டுமென   கேட்டுக் கொள்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *