மத்திய அரசு எப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் கடனுக்காக ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதிவிட்டு அத்தோடு பிரச்சினை முடிந்துவிட்டதாக கருதுகிற முதலமைச்சர் ஜெயலலிதாவின் போக்கை கண்டு தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 16.3.2016

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்றாற்போல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக கலால் வரி விதித்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிற போக்கு பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கடும் சுமையை தாங்கிக் கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது.

நேற்றைய அறிவிப்பின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ஏழைஎளிய மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். பா.ஜ.க. அரசு பதவியேற்றபோது கடந்த 2014 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 115 டாலராகவும், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 40 ஆகவும் இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 ஆகவும், டீசல் விலை ரூ.60.05 ஆகவும் இருந்தது. ஆனால் இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 39 டாலராகவும், ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.68 ஆகவும் இருக்கிறது. தற்போது பெட்ரோல் விலை ரூ.59.68 ஆகவும், டீசல் விலை ரூ.48.33 ஆகவும் அதிகரித்துள்ளது. நியாயமாக பார்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30, டீசல் ரூ.20 என்கிற அளவில் விற்கப்பட்டிருக்க வேண்டும்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் கலால் வரி ரூ.5 மட்டுமே இருந்தது. தற்போது இது ரூ.20.48 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.15.83 ஆக கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கலால் வரி உயர்வு மூலம் நரேந்திர மோடி அரசு கடந்த 20 மாதங்களில் ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 977 கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருமானத்தின் மூலமாகத்தான் மத்திய அரசின் நிதிநிலை கட்டுக்குள் இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பலன்களை அபகரிக்கிற பா.ஜ.க. அரசு மக்கள் நலன்சார்ந்த அரசா ? மக்கள் விரோத அரசா ? மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியை உயர்த்துவதால் ஏழைஎளிய மக்கள் பயன்படுத்துகிற பல்வேறு பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை 58 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் பேருந்துகள் கட்டணம், போக்குவரத்து கட்டணங்கள் போன்றவை பலமடங்கு உயர்ந்து வருகிறது.

வசதி உள்ளவர்கள் பயன்படுத்துகிற விமான போக்குவரத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40 மானிய விலையில் வழங்குகிற மத்திய அரசு, மக்களுக்கு வழங்குகிற பெட்ரோலை ரூ.60-க்கு வழங்குவது என்ன நியாயம் ? வசதியானவர்களுக்கு ஒரு விலை ? சாதாரண மக்களுக்கு ஒரு விலையா ? இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்ப அ.தி.மு.க.வினர் அஞ்சுவதற்கு பின்னாலே என்ன பேரம் நடந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள்.

மத்திய அரசு எப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் கடனுக்காக ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதிவிட்டு அத்தோடு பிரச்சினை முடிந்துவிட்டதாக கருதுகிற முதலமைச்சர் ஜெயலலிதாவின் போக்கை கண்டு தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக மத்திய அரசு குறைக்க வேண்டும். அப்படி குறைக்கவில்லையெனில் மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அணி திரண்டு பாடம் புகட்டுகிற நாள் வெகு தொலைவில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *